மஹாத்மா விதுரர் தர்மத்தின் அவதாரம். திருதராஷ்ட்ரர், பாண்டு ஆகியோருக்கு ஒன்று விட்ட சகோதரர். சிறந்த அறிஞர், நீதி அறிந்தவர்,
தர்மம் அறிந்தவர். வித்வான், நன்னடத்தை உடையவர். மேலும் இறைபக்தி மிகுந்தவர். இத்தகைய மேலான குணங்கள் அவருக்கு பெரும் மதிப்பும் அரசவையில் உயர்ந்த பதவியும் கிடைத்தன.
அவர் திருதராஷ்ட்ரருக்கு அமைச்சராக இருந்தார். ஒருநாள் இரவு திருதராஷ்ட்ரர் தன் மகன் துரியோதனன் பொருட்டு சிந்தித்து மன அமைதி இழந்துகாணப்பட்டார். அவர் விதுரரை வரவழைத்து மன அமைதிக்கான வழியைப் பற்றிக் கேட்டார். அப்போது விதுரர் திருதராஷ்ட்ரருக்குத் தர்மம், நீதியைப் பற்றி மிகவும் அழகாக உபதேசம் செய்தார். அதுவே 'விதுரநீதி' என்ற பெயரில் உத்யோக பர்வத்தில் 33-40 வரை எட்டு அத்யாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் நிகழ்ந்த
உரையாடலில் ஒரு துளி!
திருதிராஷ்ட்டிரன்: விதுரா! உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா?
விதுரர்: இல்லை! ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.
ஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.
ஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.
திருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா! உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை?
விதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.
பசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா!"
குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் திருதராஷ்ட்ரர் தம்முடைய நூறு புத்திரர்களும், உறவினர்களும் அழிந்தனர் என்பதை அரிந்த ராஜா த்ருதராஷ்ட்ரருக்குப் பெரும் துக்கம் ஏற்பட்டது. அப்போது விதுரர் திருதராஷ்டிரரை சமாதானம் செய்யும் பொருட்டு 'மரனம் என்பது தவிர்க்க முடியாதது' என்பதை வலியுறுத்தி உபதேசித்தார்.
"மன்னா! யுத்தத்தில் மரணம் அடைபவர்களுக்கு மேலான கதி கிடைக்கின்றது. ஆகவே அவர்களுக்காக வருந்தக்கூடாது. உயிர்கள் ஒவ்வொரு முறை பிறவி எடுக்குந்தோறும் அவர்கள் தனித்தனியான நபர்களுடன் தொடர்பைக் கொள்கின்றனர். மரணம் எய்திய பின்னர், இவை அனைத்தும் வெறும் கனவைப் போல் கலைந்து விடுகின்றன. எனவே எந்தக் காரணத்தாலும் மரணம் அடைந்தவர்களுக்காக வருந்துவது அரிவுடைமை ஆகாது.
மேலும் சுகம் துக்கம், சேதல்-பிரிதல் என்று எவ்வளவு நிகழ்ச்சிகள்
ஏற்படுகின்றனவோ, அவை அனைத்தும் ஒருவர் செய்த நல்ல-தீய கர்மங்களின் விளைவாகவே வருகின்றன. செய்த கர்மத்தின் பலனை அனைவரும் அனுபவித்தே தீர வேண்டும்" எனவே அவற்றில் 'மரணம் தவிர்க்க முடியாதது' என எடுத்துரைத்து திருதராஷ்டிரரை சமாதானப்படுத்தினார்.
யுதிஷ்டிரர் அரியனை ஏறிய பிறகு, சிறிது காலம் அரசவையில் வாழ்ந்த விதுரர்,
திருதராஷ்ட்டிரரும் காந்தாரியும் வனவாஸம் சென்ற போது தானும் உடன் சென்றார். வனத்தில் விதுரர் தவமிருந்து வாழ்ந்தார். சிறிது காலத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் வனத்திற்குச் சென்று பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றார்.
அப்போது விதுரர் மெலிந்த தேகத்துடனும் ஜடாமுடியுடனும் திகம்பரர் நிலையில் யோகியாகவே காட்சியளித்தார். யுதிஷ்டிரரின் அன்பான மரியாதையை ஏற்றுக்கொண்ட விதுரர் அப்போதே சமாதிநிலை அடைந்து முக்தி பெற்றார்.
மகாபாரதத்தில் விதுரர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்!
.
No comments:
Post a Comment