Showing posts with label mundaka upanishathu. Show all posts
Showing posts with label mundaka upanishathu. Show all posts

Tuesday, November 27, 2012

இறைவனே இலக்கு!


இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன், அவரை அறி.

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.

வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிராணன்கள், புலன்கள் என்று அனைத்தும் யாரில் நிலலபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமிலா பெருநிலைக்கான பாலம் இதுவே.

ரதத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் எங்கே நாடிகள் கூடுகின்றனவோ அங்கே ஆன்மா உள்ளது. அந்த இதயத்தில் ஆன்மா பலவிதமாகச் செயல்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தின் மூலம் ஆன்மாவைத் தியானம் செய்யுங்கள். இருளைக் கடந்து மறுகரைக்குச் செல்ல விரும்புகின்ற உங்களுக்கு ஆசிகள் நிறைவதாக.

- முண்டக உபநிஷத்து

Friday, August 31, 2012

பற்றின்மையால் இறைவனை அடைவாய்!


உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்கலை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி மூப்பு, மரனம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப் போல இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

பக்குவமற்ற அவர்கள் உலகியலில் பலவிதமாக உழல்கிறார்கள். தாங்கள் லட்சியத்தை அடைந்து விட்டதாக நினைக்கின்ற அவர்கள் உண்மையை அறிவதில்லை. அவர்கள் பற்றுடன் கர்மம் செய்பவர்கள். எனவே துயருற்று, புண்ணியம் தீர்ந்ததும் சொர்கத்திலிருந்து கீழே வீழ்கிறார்கள்.

இந்த வடிகட்டின முட்டாள்கள் யாகங்களும் நற்பணிகளுமே எல்லாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலான எதையும் அவரக்ள் அறிவதில்லை. சொர்க்க லோகங்களில் புண்ணிய பலனை அனுபவித்து பிறகு அவர்கள் இந்தப் பூமியையோ இதைவிட இழிந்த உலகங்களையோ அடைகிறார்கள்.

புலக்கட்டுப்பாடு உடைய அறிவொளி பெற்ற சான்றோர் பிச்சையேற்கும் வாழ்வொலோ காட்டில் சிரத்தையுடன் கூடிய தவ வாழ்க்கை வாழ்வதிலோ ஈடுபடுகிறார்கள்.  அவர்களின் வினைப்பயன்கள் அகல்கின்றன. அவர்கள் உத்தராயண பாதை வழியாக மரணமற்ற, அழிவற்ற இறைவனை அடைகிறார்கள்.

சான்றோன் ஒருவன், தான் செயல்களின் பலனாகப் பெற்ற உலக அனுபவங்களைமுதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் விளைவாக, 'கர்மங்களால் இறைவனை அடைய முடியாது, பற்றின்மையால்தான் முடியும்' என்பதை உனர்ந்து பற்றின்மை பெற வேண்டும்.

நிலையுள்ள பொருள்களிடை நிலையுள்ளவனாகவும், அறிவுள்ள உயிர்களின் அறிவாயும், ஒருவனாய் நின்று அனைவருடைய ஆசைகளையும் அளிப்பவனாயும், அனைத்திற்கும் காரணமாயும், ஞான யோகத்தால் அடைதற்குரியவனாயும் உள்ள அந்த தேவனை அறிந்து ஒருவன் எல்லாத் தளைகளினின்றும் விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து.

Tuesday, September 13, 2011

இனியவனே! இது உண்மை, நீ இறைவனிடமிருந்தே வந்தாய்!




இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாறு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.

இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.

பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, ப்ராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.

அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின.
இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

வேதங்கள், பாடல்கள், மந்திரங்கள், சடங்குகள், வேள்விகள், பல்வேறு கர்மங்கள், தட்சினைகள், காலம், வேள்விகளைச் செய்பவர்கள், சந்திரன் வளர்க்கவும் சூரியன் தகிக்கவும் செய்கின்ற உலகங்கள் ஆகிய அனைத்தும் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

பல்வேறு தேவர்கள், சாத்யர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், உள்மூச்சு, வெளிமூச்சு, நெல், பார்லி, தவம், சிரத்தை, உண்மை, சுயக்கட்டுப்பாடு, கடமைகள் எல்லாம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனிடத்திலிருந்தே ஏழு புலன்கள், ஏழு சுடர்கள், ஏழு எரிபொருட்கள், ஏழு ஆஹுதிகள் எல்லாம் தோன்றின. இதயக்குகையில் பிராணன் செயல்படுகின்ற உயிர்னங்கள் வாழ்கின்ற ஏழு உலகங்களும் அவரிடமிருந்தே தோன்றின. அனைத்தையும் ஏழு ஏழாக அவரே படைத்தார்.

அந்த இறைவனிடமிருந்தே கடல்கள், மலைகள் எல்லாம் தோன்றின. பல்வேறு நதிகளும் அவரிடமிருந்தே பெருகி ஓடுகின்றன. செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே உண்டாயின. இவ்வாறு அனைத்து இயற்கையாலும் சூழப்பட்டதாக உள்ளது ஆன்மா.

இனியவனே! இறைவந்தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக்குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து


படியுங்கள் ---> ப்ளாக் ஹோல் ரகசியம்


Sunday, July 24, 2011

இதயத்தில் ஒளிர்கிறார் இறைவன்!



இறைவன் எல்லாம் அறிந்தவர், அனைத்து அறிவு வடிவானவர், ஆனந்த வடிவினர், அழிவற்றவர். அந்த இறைவன் ஒளிமயமான இதயத்தில் உள்வெளியில் ஆன்மாவாக ஒளிர்கிறார். மனமாக அமைந்து பிராணனையும் உடம்பையும் வழிநடத்துகிறார். இதயத்தில் நிலைபெற்றவராக உடம்பு
முழுவதும் வியாபித்திருக்கிறார். விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்கள் புத்தியால் அவரை அறிகிறார்கள்.

உயர்ந்தது, தாழ்ந்தது என்று அனைத்துமாக விளங்குகின்ற ஆன்மாவைத் தரிசித்தால் மனக்குழப்பங்கள் அகல்கின்றன. எல்லா சந்தேகங்களும் விலகுகின்றன. வினைப்பயன்களும் அழிகின்றன.

பொன்னிறமாக ஒளிர்கின்ற மேலான உறையில் இறைவனுள்ளார். அவர் குறைகளற்றவர், பகுதிகள் அற்றவர், தூயவர், ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். ஆன்மாவை அறிந்தவர்கள் அவரை அறிகிறார்கள்.

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.

முன்னால், பின்னால், வலது, இடது, மேலே, கீழே என்று பிரபஞ்சம் முழுவதும் மேலான, அழிவற்ற இறைவனே நிறைந்துள்ளார்.

- முண்டக உபநிஷத்து

'பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி, மற்ற அனைத்தையும் நாம் அறிந்து கொள்வது ஆன்ம ஒளியால்தான். அதன் காரணமாகவே அது ஒளி என்று கூறப்பட்டுள்ளது.

- ஸ்ரீ ரமண மகரிஷி.


இறைவன் என்பவன் ஒரு மகா சக்தி. அது பிரபஞ்சத்தின் ஆதாரசக்தி. இதை பாம்மாட்டிச் சித்தர் அருமையான பாடலால் இவ்வாறு கூறுகிறார்


"உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடு பாம்பே"

"அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினைந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர்




.

Tuesday, May 3, 2011

ஒரே மரத்தின் இரண்டு பறவைகள் - ஆன்மா!






இணை பிரியாத, ஒரே போன்ற இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஜீவனும் ஆன்மாவும் ஒரே உடம்பினுள் உள்ளனர். ஜீவன் அதாவது மனிதன் அரியாமையில் மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான். வழி பாட்டிற்குரிய தன் ஆன்மாவையும் அதன் மகிமையையும் அவன் எப்போது
பார்க்கிறானோ அப்போது கவலைகளிலிருந்து விடுபடுகிறான்.

பொன்னொளியுடன் ஒளிர்பவனும், தலைவனும், ஆள்பவனும், இறைவனுக்கான வழியாகவும் திகழ்கின்ற ஆன்மாவை எப்போது ஒருவன் பார்க்கிறானோ அப்போது அந்த மகான் புண்ணிய பாவங்களை உதரிவிட்டு துன்பமற்ற மேலான சமநிலையை அடைகிறான்.

எல்லா உயிர்களிலும் செயல்படுவது பிராணனே என்பதை உணர்பவன் தேவையற்றவற்றைப் பேசுவதில்லை. ஆன்மாவில் களிப்பவனாக, ஆன்மாவில் இன்பம் காண்பவனாக அவன் வேலை செய்கிறான். ஆன்ம ஞானியரில் சிறந்தவன் அவனே.

உண்மை, தவம், உறுதியான ஞானம், பிரம்மச்சரியம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் இந்த ஆன்மா அடையப்படுகிறது. இந்த ஆன்மா உடம்பின் உள்ளே புனிதமான ஒளிப்பொருளாக உள்ளது. புனிதமும் புலக்கட்டுப்பாடும் உடையவர்கள் அதனைக் காண்கிறார்கள்.

- முண்டக உபநிஷத்து


.

Friday, March 25, 2011

ஓம்கார மந்திரமே வில், ஆன்மாவே அம்பு!



அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயக்குகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சுவிடுகின்ற இமைக்கின்ர அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன. 


தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அரிவிற்கு அப்பாற்பட்டது அது.  போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.


இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது, அணுக்களுக்கெல்லாம்
அணுவானது. உலகங்களும் உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளன.
அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன், பிராண்ண், வாக்கு, மனம் அனைத்தும் அதுவே. 


அது உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய வேண்டும். அதனை அறிவாய்.


இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆஹுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன். அவரை அறி.


ஓம்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.


வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிரானன்கள், புலன்கள் என்று
அனைத்தும் யாரில் நிலைபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமில்லா பெருநிலைக்கான பாலம் இதுவே.

 - முண்டக உபநிஷத்து!




.

Sunday, December 12, 2010

ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்!


"உயர்ந்தது மற்றும் சதாரணமானது என்று இரண்டு வகை அறிவுகள் உள்ளன. இவற்றை அறிய வேண்டும் என்று இறையனுபூதி பெற்ற மகான்கள் கூறுகிறார்கள்.
ரிக்வேதம், யஜுர்வேதம் சாம வேதம் அதர்வண வேதம், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல், ஜோதிடம் போன்றவை சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அழிவற்ற இறைவன் எந்த அறிவால் அடையப்படுகிறாரோ அது உயர்ந்த அறிவு என மகான்கள் கூறுகிறார்கள்".

அதாவது வேதங்களும் சடங்குகளு சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அவை ஒன்றே இறைவனை
அடையப் போதுமானவை அல்ல. இறைவனை அடைய அதையும் விட உயர்ந்த அறிவு ஒன்றிருக்கிறது. பயிற்சியால் அதனைப் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விவேகானந்தரிடம் ஒரு முறை 'வேதங்களின் சிறப்பு என்ன?' என்று கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.."தங்கள் போதனைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப வறுபுறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெரும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

"அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது. அவருக்கு ஆரம்பம் கிடையாது. அவர் நிறங்கள் அற்றவர். அவருக்குக் கண்களோ காதுகளோ கைகளோ கிடையாது. அவர் என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள் உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணியவர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலக்காரணமானவர், விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்காள்."

'அந்த இறைவனைப் பார்க்க முடியாது' என்று முதல் வரியும், 'விழிப்புற்றவர்கள்

அவரை எங்கும் காண்கிறார்கள்' என்று கடைசி வரியும் முன்னுக்குப் பின் முரண்போல் ஒலிக்கின்றன.

அவை விளக்க நினைப்பது இதைத்தான். நமது அறிவு புலன்களுக்குட்பட்டது. புலன்களின் மூலமே நாம் எதையும் அறிந்துகொள்றோம். ஆனால் இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். புலன்களால் அவரைக் கிரகிக்க முடியாது.

அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் 'உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க முடியாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணணத் தருகிறேன். எனது யோக சக்தி மகிமையைப் பார் என்கிறார். அவ்வாறு ஞானக்கண்ணைப் பெற்ற அர்ஜுனன் கடவுளை எங்கும் கண்டான். அவ்வாறு ஞானம் பெற்றவர்களையே விழிப்புற்றவர்கள் என்று கூறுகிறார்கள். விழிப்புற்றவர்களே இறைவனைக் காண்பார்கள்!

- முண்டக உபநிஷத்து!