யோகி தனிமையான இடத்தில் தனியாக இருந்து கொண்டு, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும், உடமைகளையும் கைவிட்டு, இடைவிடாத ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
தனக்கு ஒரு தூய்மையான இடத்தைத் தேர்வு செய்து கொண்டு, அதிக உயரம் இல்லாததும், அதிகமாகத் தாழ்ந்து இல்லாததுமான ஒரு உறுதியான ஆசனத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதன் மீது மான் தோலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் ஒரு துணியை விரிக்க வேண்டும்.
பிறகு அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி, எண்ணங்களையும், புலன்களையும் கட்டுப்படுத்தியும்,
ஆன்மீகத் தூய்மைக்காக யோகத்தைப் பயில வேண்டும்.
உடலை உறுதியாக வைத்துக் கொண்டு, உடல், கழுத்து, தலை இவற்றை ஒரு நேர்கோட்டில் இருப்பது போல் ஒழுங்காக வைத்துக்கொண்டு, அசையாமல், சுற்றிலும் எதையும் பாராமல் தன் மூக்கின் நுனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அமைதியான மனத்துடனும், அச்சமின்றியும், பிரம்மச்சரிய விரதத்தில் உறுதியுடனும், மனத்தை அடக்கியும், மனதை என்மீது செலுத்தி யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
எப்போதும் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி, அதைச் சமநிலையில் வைத்திருக்கும் யோகி, என்னிடம் குடி கொண்டுள்ள அமைதியைப் பெற்று முடிவில் மோட்சத்தை அடைகிறான்.
- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்
No comments:
Post a Comment