Sunday, April 11, 2010

மரியாதை ராமன் கதைகள் - ஜான் நீளமா? முழம் நீளமா?


அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன் கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன் என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி இருந்தார்.

வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல் அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.

ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு கடுமையாகக் கேட்டார்.

முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன் பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின் வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன். கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.

"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை எடுத்து முருகேசனிடம் காட்டினார்.

உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில் இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக் கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.

இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.

முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்? நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம் கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே" என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த வையாபுரி மரியாதை ராமனிடம் நடந்ததை முறையிட்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மரியாதை ராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன் பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்

"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.

"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன். அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.

மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.

மரியாதைராமன் முருகேசனிடம், "நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது உண்மையா?" என்று கேட்டார்.

"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.

"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக் கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார் மரியாதைராமன்.

"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன் பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.

மரியாதை ராமன் வையாபுரியைப் பார்த்து "இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன் நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.

"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.

உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது. "ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்? ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.

இதைக்கேட்ட மரியாதை ராமன்"ஆமாம் அவரை அப்படி புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லிவிட்டீர்" என்றார். பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டுவிட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.

மரியாதை ராமன் சாதுர்யமாக உண்மையை வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


No comments: