Friday, January 8, 2010

மரியாதை ராமன் கதைகள்!


ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான்.

"சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான் ராமன்.

சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தான்.

மோதிரம் வாங்கிச் சென்ற ராமன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான்.

"என்ன ராமா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே, அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!" என்றான் சோமன்.

"தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது எனது மோதிரம் தான். உன்னிடம் இருந்து ஒன்றும் வாங்கவில்லையே!" என்று ஒரு போடு போட்டான் ராமன்.

அவன் விரலில் அணிந்திருந்தது சோமனின் மோதிரம். ஆனால் ராமனோ அது தன்னுடையது என்றான்.

சோமன் நேராக மரியாதை ராமனிடம் சென்று ராமன் தனது மோதிரத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டான் என்று முறையிட்டான்.

மரியாதைராமன் ராமனை அழைத்து விசாரித்தான். ராமனோ "ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பத்து என் மோதிரம் தான்" என்றான்.

இதைக் கேட்ட மரியாதை ராமன் "நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்கு சொந்தம் என்பது தெரியவில்லை. அதனால் நாளை தங்கத்தை மதிப்பீடு செய்பவரை வரச்சொல்லி மோதிரத்தை உரசிப்பார்ப்போம். அவர் என்ன மதிப்பு சொல்கிறாரோ, அந்த மதிப்பிற்கு அதை விற்று அந்த பணத்தை இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து விடுகிறேன். இருவரும் சென்று நாளை வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது.

அவர் அதை உரைக்கல்லில் வைத்துத் தேய்த்தார். நிறுத்தாமல் அதிக நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த சோமன் "ஐயா என் மோதிரத்தை இப்படியே தேய்த்து கரைத்து விடுவாய் போலிருக்கிறதே!" என்று கதறினான்.

ராமனோ பேசாமல் இருந்தான். பின்னர் பொற்கொல்லர் தேய்த்து முடித்து மோதிரத்தின் மதிப்பை மிகக் குறைவாக விலை சொன்னார். அந்த விலையைக் கேட்டதும் சோமன் கோபமுற்றான்.

"என்ன அநியாயம் இது! நான் வாங்கிய விலையில் கால்பங்கு கூட இல்லையே! இது தானா நீங்கள் போடும் மதிப்பு?" என்று கூச்சலிட்டான்.

இதைக்கேட்ட மரியாதைராமன், ராமனைப் பார்த்து "உண்மையாகவே இது உன்னுடைய மோதிரமாக இருந்தால் இந்நேரம் நீ பேசாமல் இருந்திருக்க மாட்டாய், உண்மையை வரவழைப்பதற்க்காக நான் தான் அதிகமாக உரைக்கச் சொல்லியும், மதிப்பைக் குறைத்தும் சொல்லச் சொன்னேன். இப்போது மோதிரத்திற்கு உரியவர் யார் என்பது தெரிந்து விட்டது." என்று சொல்லி மோதிரத்தை சோமனிடம் ஒப்படைத்தார்.

சோமனை ஏமாற்றிய குற்றத்திற்காக ராமனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினான்.

மரியாதை ராமனின் சமயோஜிதமான நடவடிக்கையைப் பார்த்து மக்கள் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

4 comments:

Madhavan Srinivasagopalan said...

"ராமனுக்கு ........சிறை தண்டனை...."

என்ன நண்பரே ! 'ராமன்' ஒரு உலகமகா புருஷர்(மனிதர்). தீர்ப்பு சொல்லுபவர் கூட அதே பெயர் கொண்டவர். அவர்களின் நல்ல எண்ணங்கள், செயல்களுக்காக 'பொய்' சொன்னவரின் பெயரை வேறு ஏதாவது வைத்திருக்கலாமே?
ஹி.. ஹி.. உங்கள் பெயர் கூட, அதுதானே!

நான் புதிய பதிவு பதித்திருக்கிறேன் (http://madhavan73.blogspot.com). படித்து கருத்து சொல்ல வேண்டுகிறேன். நன்றி.. மீண்டும் சந்திப்போம்.

hayyram said...

இப்படி ஒரு செண்டிமென்டா! இந்துக்களின் 99.9% பேருக்கு சாமி பேர் தான் இருக்கும். "ரௌடி கபாலி மாட்டிகினான் சார்!" என்று சினிமாவில் போலீஸ்காரர் பேசுவார். கபாலீஸ்வரர் நினைவாக சென்னை வாசிகள் வைக்கும் பெயருக்கு இந்த நிலைமை. இதெல்லாம் சப்ப மேட்டரு விட்டு தள்ளுங்க.

Madhavan Srinivasagopalan said...

'ராமனை' தெய்வமாக நினைப்பவன் நான், என்பது உண்மையே.
ஆனாலும், 'ராமன்' தெய்வமாக அல்ல, நல்ல மனிதனாகவே வாழ்ந்து காட்டினான்.
ராவணன் கூட, ராமன் வேஷம் போட்டு, சீதையை நெருங்க முயன்ற பொது, 'ராமனின்' தோற்றம் கூட , ராவணனை மற்றவரின் மனைவியை தீண்டும் நிலையிலிருந்து தடுத்ததாக கேள்விபட்டிருக்கிறேன். மேலும் 'ராம' நாமம் ஒரு 'உன்னதம்'.
எனவே அவ்வாறு கூறினேன்.

I don't see it as any 'sentiment'

btb, thanks for ur visit & comment @ my blog.

hayyram said...

thanks maddy

//ராமனை' தெய்வமாக நினைப்பவன் நான், என்பது உண்மையே.
ஆனாலும், 'ராமன்' தெய்வமாக அல்ல, நல்ல மனிதனாகவே வாழ்ந்து காட்டினான்.
ராவணன் கூட, ராமன் வேஷம் போட்டு, சீதையை நெருங்க முயன்ற பொது, 'ராமனின்' தோற்றம் கூட , ராவணனை மற்றவரின் மனைவியை தீண்டும் நிலையிலிருந்து தடுத்ததாக கேள்விபட்டிருக்கிறேன். மேலும் 'ராம' நாமம் ஒரு 'உன்னதம்'.
எனவே அவ்வாறு கூறினேன்.//

100% true. thank u.