Sunday, February 21, 2010

மரியாதை ராமன் கதைகள்!


ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா.

யசோதையிடம் நிறையப்
பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள்.

ஆனால்
துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக்
கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஒரி காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார்.

முதலில் யசோதையையும்
இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால்
காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினால். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச்
சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு
வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது.

அடுத்து மரியாதைராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை.

இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான்.

துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச்
சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள்
சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதைராமன்.

யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது
நமது கடமையே ஆகும்.


2 comments:

கீதா சாம்பசிவம் said...

பள்ளி நாட்களில் கேட்டது. நல்ல நீதிக்கதை. இன்றைய தலைமுறைக்கு அவசியம் தெரியணும்.

hayyram said...

நன்றி கீதா அவர்களே! இதனால ஏற்படற நன்மை என்னன்னா சிறிய வயதிலிருந்தே இத்தகைய கதை கேட்டு வளர்பவர்களுக்கு பிரச்சனைகள் வரும்போது ஆராய்ந்து தீர்வு காணும் குணம் உண்டாகும். சிறுவர்களுக்கு இது போன்ற கதைகள் தெரியவேண்டியது அவசியம். முன்பெல்லாம் தூர்தர்ஷனில் இப்படிப்பட்ட்ட கதைகள் நாடக்க வடிவில் நிறைய ஒலிபரப்புவார்கள். இப்போது தூர்தர்ஷனின் ப்ரைம் டைமைப் பிடித்திருப்பது மதமாற்ற நிகாழ்ச்சிகளே!