Saturday, September 5, 2009

மரியாதை ராமன் கதைகள் - 2


ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன்.

அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார்.

தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார்.

"நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார்.

சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். தம் தகப்பனாரின் நண்பரிடம் சென்றான்.

அவரிடம் தம் தந்தை கொடுத்து வைத்திருந்த பத்தாயிரம் வராகன்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான்.

வியாபாரியின் நண்பன் பெரிய மோசக்காரனாக இருந்தான். "உன் தந்தை இறக்கும்போது எனக்கு விருப்பமானதை உனக்குக் கொடுக்கச் சொன்னர். வீணாகப் பூராப் பணத்துக்கும் ஆசைப்படாதே. இந்தா அயிரம் வராகன். இதை எடுத்துச் சென்று எங்காவது போய் பிழைத்துக் கொள்! என்று ஆயிரம் வராகன்கள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தான்.

வியாபாரியின் மகனுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகவும் நல்லவர் என்று தன் தந்தையார் நம்பிய அவருடைய நண்பனின் செய்கை அவனுக்கு அளவற்ற வேதனையைத் தந்தது. நேரே மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

மரியாதைராமன் வியாபாரியின் நண்பனை அழைத்தான்.

"இந்தச் சிறுவன் கூறுவது உண்மையா?" என்று அவரிடம் கேட்டான் மரியாதைராமன்.

"ஆம் அய்யா! இவன் தந்தை என்னிடம் பத்தாயிரம் வராகன்களைக் கொடுத்து, இவன் வளர்ந்து பெரியவனானதும் எனக்கு விருப்பமானதைச் சிறுவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் இவனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்துள்ளேன். அதுவே பெரிய தொகை" என்றான் மோசக்காரன்.

"உம்முடைய நண்பர் சொன்னவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!" என்றான் மரியாதைராமன்.

மோசக்காரனுக்கு ஒன்ரும் புரியவில்லை. மரியாதை ராமனே தொடர்ந்து பேசலானான். "அய்யா, இவர் தந்தையார் ஒப்படைத்த பத்தாயிரம் வராகன்களில் நீர் ஒன்பதினாயிரம் வராகன்கள் எடுத்துக் கொண்டீர். அதுதான் உமக்கு விருப்பமானது.

எனவே உமக்கு விருப்பமான நீர் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த ஒன்பதினாயிரம் வராகன்களைத்தான் நீர் இந்தச் சிறுவனுக்குத் தர வேண்டும்." என்று தீர்ப்பு வழங்கினான்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

பேராசைக்காரன் தன்னுடைய பேராசைக்கு இது சரியான தண்டனைதான் என்று நினைத்தவாறே ஒன்பதினாயிரம் வராகன்களை அந்தச் சிறுவனுக்குக் கொடுத்து அனுப்பினான்.

மரியாதை ராமனின் தீர்ப்பை அனைவரும் மெச்சினார்கள்

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

No comments: