Friday, December 17, 2010

இறைவனிலிருந்தே எல்லாம் தோன்றியது!



உலகின் முக்கியமான மதங்கள் பலவும் இறைவன் என்ற ஒருவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளை படைத்ததாகவும் அவனே ஆணையும் அவனது விலா எலும்பிலிருந்து பெண்ணையும் படைத்ததாக கூறிவருகையில் இந்து தர்மத்தின் உபநிஷத்துக்கள் பிரபஞ்சத்தோற்றத்தை அப்படியே கண் முன் கொண்டு வருவதாக இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோடான கோடி ஜீவராசிகள் அனைத்தையும் ஒருவர் கிழமைதோறும் படைத்திருக்க முடியாது. ஒன்றிலிருந்து ஒன்று தாமாகவே உருவாகியிருக்க வேண்டும்.

உலகில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டார்வினின் பரினாமக் கொள்கை கூறுவதும் இதையே! அதனையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உபநிஷத்துக்கள் மூலமாக ரிஷிகளும் முனிவர்களும் நமக்கு எடுத்துரைத்திருக்கின்றனர்.

"எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ, எவ்வாறு பூமியிலிருந்து செடி கொடிகள் தோன்றுகின்றனவோ, வாழ்கின்ற மனிதனில் எவ்வாறு முடி வளர்கிறதோ அவ்வாறே அழிவற்ற இறைவனிடமிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுகிறது"

இங்கே 'இறைவனிடமிருந்து தோன்றுகிறது' என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிற இறைவன் என்கிற ஒரு கதாபாத்திரம் இவற்றை தோற்றுவித்தது என்று கூறவில்லை என்பதை குறித்துக் கொள்ளவும். ஆக கடவுள் என்கிற உருவகத்திற்கும் அப்பால் நம்மை இறைவன் என்பது நம் கற்பனைக்கெட்டாத மிகப்பெரிய பிரபஞ்சப்பேரியக்கம் பற்றியது என்கிற உண்மையை நமக்கு உணர்த்துகிறது உபநிஷத்து. தலையில் முடிவளர்வது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நம் உடலிலிருந்து வெளிப்படும் இறந்த செல்களின் கூட்டாக அது தாமே உருவாகிறது. இது ஒரு உதாரணம் தான். அதே போல பிரபஞ்சத்தின் கற்பனைக்கெட்டாத ஒரு மூலமான மைய சக்தியிலிருந்து இந்த பேரியக்கம் தோன்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சிலந்தி தான் வசிக்க இடம் வேண்டுமெனில் நூலை வெளியேற்றுகிறது. பிறகு போதுமென்று நினைக்கும் போது அந்த நூலை உள்ளிழுத்துக் கொள்கிறது. அது போல பிரபஞ்சத்திலிருந்து எத்தனை உயிர் பொருட்கள் வெளியே வந்தாலும் அவையனைத்தும் இறுதிக்காலத்தில் மூலப்பிரக்ருதியான அண்டபிரம்மாண்டத்தின் மைய சக்தியையே சென்றடைந்து விடுகிறது.



பிரபஞ்சத்தின் கருஞ்சுழி!

சமீப காலங்களில் ப்ரபஞ்சத்தில் ப்ளாக் ஹோல் எனப்படும் கருஞ்சுழிப் பகுதி பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அண்டவெளியில் இருக்கும் கோடான கோடி கிரகங்களும் சூரியன்களும் நட்சத்திரங்களும் அந்த கருஞ்சுழியின் மையப்பகுதிக்குள் சென்றவுடன் மிகப்பெரிய பிரகாசமான ஒளியைக் கொடுத்துப் பின் நீர்த்துப் போய் கருமை நிறமடைந்து காணாமல் போகின்றன என்பதே அவர்களது ஆய்வுகள் அறிவிக்கின்றன. நாம் இருக்கும் இந்த மில்கி வே கேலக்ஸி கூட அதே கருஞ்சுழியை நோக்கிய நகர்வைக் கொண்டிருக்கின்றது என்பதும் அவர்களது ஆய்வு முடிவுகளே!

ஆக எந்த பிரபஞ்சத்தின் மைய சக்தியிலிருந்து இந்த அண்டத்திலுள்ள அத்தனையும் தோன்றியதோ அதே மைய சக்தியில் அவை கரைந்து முடிகின்றன என்பதும் தெரியவருகின்றன. இப்போது மீண்டும் உபநிஷத்தின் வரிகளைப் படிப்போம்.. "எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக் கொள்ளவும் செய்கிறதோ" அவ்வாறே பிரபஞ்சமும் தன்னிடமிருந்து வெளிவருவருவனவற்றை தன்னுள்ளேயே இழுத்துக் கொண்டுவிடுகிறது.



ப்ளாக் ஹோல்!

இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாரு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.
இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.
பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.
அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, பிராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.
அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

- முண்டக உபநிஷத்து!

ஆக அந்த இறைவன் என்பவன் கற்பனைக்கெட்டாத பிரபஞ்சத்தின் மைய சக்தி என்பதை நாம் உணர உபநிஷத்து நமக்கு உதவுகிறது. அத்தகைய மைய சக்தி என்பது என்ன? அதன் சக்தி எத்தகையது என்று நம்மால் உணர முடியுமா? அதன் வடிவம் என்ன? அதன் இயக்கம் எவ்வாறு

இருக்கும்? இன்னும் விடைகாணமுடியாத பல கேள்விகள் இருக்கின்றன. அதனை சாதகம் மூலமாகவே உணர முடியும். அவ்வாறு உணர்ந்து அதனை எடுத்துக்கூறியவர்களே மகான்கள், ரிஷிகள். அவர்களால் கூறப்பட்டதே உபநிஷத்துக்கள். அதனை இன்னும் ஆராய்ந்து இறைவன் என்கிற பெரியவனை அறியவும் அடையவும் தொடர்ந்து முயல்வோம்!



.

No comments: