Saturday, July 18, 2009

நான் மதிப்பிலாதவன்!

ஆதி சங்கரர் ஒரு முறை ஆற்றில் குளித்து விட்டு வெளியே வந்த போது எதிரில் ஒரு சண்டாளன் ஒரு புறம் மீனும் மற்றொரு புறம் இறைச்சிகளும் தொங்க விட்ட படி வந்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த ஆதி சங்கரர், அந்த சண்டாளனிடத்தில் "விலகிப் போ" என்று கூறினார்.

உடனே எதிரே இறைச்சிகளுடன் இருந்த அவன் கேட்டான் "விலகிப் போக வேண்டியது என் உடலா? அல்லது என் ஆத்மாவா?". ஆதி சங்கரருக்கு அப்பொழுது தான் அத்வைதத் தத்துவமே விளங்கியது. இந்த உடல் வேறு, ஆத்மா வேறு. உடல் என்பது ஆத்மா வந்து குடியிருக்கும் ஒரு ஒரு கருப்பை தானே ஒழிய இந்த ரூபமே நான் ஆகாது என்று.

உடனே ஆதி சங்கரர் அந்த சண்டாளன் கால்களில் விழுந்து நீயே என் குரு என்று அவனை குருவாகவே பாவித்தார். பிறகு, இதையே தத்துவ மார்கமாக உலகுக்கு போதிக்கத் துவங்கினார் ஆதி சங்கரர். "பஜகோவிந்தம்" என்ற பாடலை எழுதி அதாவது, இறைவனை நினைத்திரு மூடனே அதுதான் நிரந்தரமனது. மற்றெல்லாம் மாயை என்பதை உலகிற்க்கு அழகாக விளக்கினார். (இங்கே)


ஆம் இந்த உடல் என்பது வெறும் பிண்டம் தான். அதில் ஆத்மா என்ற ஒரு சலனமற்ற பொருள் தான் எல்லாவற்றையும் உணர்கிறது. அவற்றை நாம் அமைதியாகவும் முழுவதுமாகவும் உணர்ந்து வாழவேண்டும் என்பதையே எல்லா ஆன்மீக தத்துவங்களும் நமக்கு போதிக்கின்றன. நான் என்ற அகங்காரம் விலக நான் என்று நாம் நினைப்பது எதை என்ற ஆத்ம விசாரத்திற்க்கு ஒவ்வொரு மனிதனையும் தூண்டுவது இந்தத் தத்துவமே.

ஒரு முறை மெளரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.

இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.

அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.

இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.

ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.

நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.

ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!

1 comment:

http://rkguru.blogspot.com/ said...

அருமை....

உங்களுக்கு நான் ஓட்டு போட்டாச்சு...தமிளிஷ்ல் என் பதிவும் வந்துள்ளது.
நீங்களும் எனக்கு ஒரு ஓட்டு போடலாமே ....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html