Friday, August 14, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!

எண்ணம், சொல், செயல் மூன்றாலும், தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடல் உணர்ச்சிக்கோ துன்பம் விளையாத அளவோடும் முறையோடும் எச்செயலையும் ஆற்றும் பண்பாடுதான் ஒழுக்கமாகும்.

பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும். தாழவும் முடியும். வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும். செய்யும் செயல் பாப புண்ணியத்தைக் கணிப்பதில்லை, செயலின் விளைவின் மூலமாகவே அது அறியப்படுகிறது. நமது செயல்கள் யாவும் நமக்கோ பிறருக்கோ இன்பத்தைக் கொடுக்குமானால் அது புண்ணியச் செயல் மாறாக நமது செயல் நமக்கோ அல்லது பிறருக்கோ துன்பத்தை உண்டாக்கினால் அது பாபச் செயல் எனப்படுகிறது.

ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமானதாக்கித் தரும்.

இன்ப நிலை நீடிக்க வேண்டும் எனில் உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் என்ற ஐந்தையும் அலட்சியப்படுத்தவோ, மிகையாகவோ அல்லது முரணாகவோ உபயோகிக்கக் கூடாது.

வாங்கும் கடனும் தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும். வாழத்தெரியாதோர் பலர் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்.

உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் மனிதனாகப் பிறந்தவனின் நித்தியக் கடனாகும்.

வெளிச்சத்திலே இருள் நிறைந்து இருப்பது போல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறது. அதாவது அகக்கண்ணைத் திறந்து சுய தேடுதல் செய்தால் தான் இறைவன் தென்படுவான்.

இதை விளக்கக் ஒரு குட்டி கதை!

இரண்டு நண்பர்கள். ஒருவன் குருடன். இருவரும் ஒரு வீட்டில் கூடி பேசிக்கொண்டிருந்தனர். பார்வையற்றவன் வெகு நேரம் ஆகி விட்டது நான் கிளம்புகிறேன் என்று கூறி புறப்பட்டான்.

மற்றவனோ "நண்பா! இப்போது இருட்டி விட்டது, இந்த விளக்கை எடுத்துப்போ என்றான்! பார்வையற்றவனோ, "எனக்கு விளக்கு எதற்கு. எப்போதுமே அகக்கண்களால் தானே நடமாடுகிறேன்" என்றான்.

நண்பனோ "அதற்கில்லை, உனக்கு வெளிச்சம் தேவையில்லை ஆனால் உனக்கு எதிரில் வருபவர்களுக்கு நீ நடப்பது தெரிந்தால் ஒதுங்கிச் செல்வார்கள் இல்லையா!" என்று கொடுத்தனுப்பினான்.


இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன்?


பார்வையற்றவன் விளக்குடன் இருளில் சென்றான். பாதையில் ஒருவர் சடேரென்று அவன் மீது மோதினார். கண் தெரியாதவன் கேட்டான் "ஏனய்யா, எனக்குத்தான் கண் தெரியாது, உனக்குமா தெரியாது. இப்படி வந்து மோதுகிறீர்களே" என்றான். மோதியவனோ "மன்னித்து விடுங்கள் இருட்டில் தெரியவில்லை என்றான்".

பார்வையற்றவனோ "நான் தான் கையில் விளக்கை வைத்திருக்கிறேனே, அந்த தைரியத்தில் தான் சற்று வேகமாக நடந்தேன், அதைக்கூடவா நீங்கள் பார்க்கவில்லை?"

மோதியவன் சொன்னான் "தம்பி நீ விளக்கு வைத்திருக்கிறாய். ஆனால் அது அனைந்திருக்கிறது".

பார்வையற்றவன் விளக்கைத் தூக்கி எறிந்து விட்டு நடக்கலானான் தன் அகக்கண்களை நம்பி.

2 comments:

நிகழ்காலத்தில்... said...

மகானின் வார்த்தைகள் மனதிற்கும் வாழ்விற்கும் இதமளிக்க கூடியவை

இதை தாங்கள் பகிர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி

hayyram said...

நிகழ்காலத்தில். நீங்கள் ரசிப்பது எனது பாக்கியம்.

நன்றி!