Wednesday, September 16, 2009

மணியடித்து இறை வழிபாடு செய்வதேன்?

டங்..ங்...ங்...ங்..ங்

டங்..ங்...ங்...ங்..ங்

இந்த ஓசையை கேட்டவுடனேயே மனதில் நம்மையறியாமல் பக்தி குடிகொண்டு விடுகிறது. கண்கள் அரையளவு மூடி ஒரு சிறிய ப்ரார்தனை செய்யத்தூண்டுகிறது. என்ன வேலை செய்தாலும் ஒரு வினாடி அவைகளை நிறுத்தி இந்த ஒலியை சற்றே கவனிக வைக்கிறது.

எவ்வளவு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தாலும் அந்தப் பேச்சை நிறுத்தி ஒரு வினாடி அந்த ஒலி வரும் திசையில் பார்வையைத் திருப்புகிறோம்.

நம் கவனத்தை ஈர்த்து ஒரு வினாடியேனும் நம் அந்தராத்மாவை இறுகப்பிடித்து நம் கவனத்தை இழுத்து அதன் பக்கம் இருத்தி வைக்கும் இந்த ஒலி தான் மணியோசை!

மணியின் சப்தத்தை நன்றாகக் கேட்டுப்பாருங்கள். அந்த சப்தம் காற்றில் அழகாக மிதந்து செல்வதை நம்மால் உணர முடியும். ஆம் மிதந்து தான் செல்கிறது. காற்றில் இருக்கும் அடுக்குகள் மீது அழகாக லாவகமாக மணியின் ஓசை மிதந்து செல்வதை ஏதோ கண்ணால் பார்ப்பதைப் போன்றே நம்மால் உணர முடியும்.

சாதாரண இடங்களில் வேறெந்த பொருளின் மூலமாக நீங்கள் சப்தத்தை எழுப்பிப் பார்த்தாலும் மணியின் ஓசை பிரயானப்படுவதைப் போன்று அழகாக வேறெந்த சப்தமும் பிரயாணப்படுவதில்லை. எழுப்பப்பட்ட மணியோசை காற்றில் ரீங்காரமிட்டுக்கொண்டே சென்று கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு கரைந்து போவதை நாம் கேட்டிருப்போம்.

காரணம் உலோகத்தின் அரைக்கோள வடிவத்தின் சிறப்பம்சம் இது. ஆம் பூமி என்பது ஏறக்குறைய கோள வடிவமே. அதைப் பாதியாக பிரித்தால் அரைக்கோள வடிவம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த மணி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திறந்த வாய்ப்பகுதி பெரிதாகவும் பின்னர் படிப்படியாக குறைந்து மறுபகுதி சிறிதாகவும் மூடியிருக்கும் ஒரு அமைப்பு மணியாகும். அந்த வடிவமே இப்படிப்பட்ட சிறப்பான ஒலியைத் தோற்றுவிக்கிறது.

சரி, அமைதியாக கடவுளை வழிபடும் வேளையில் சப்தமாக இத்தகைய மணியின் ஓசையை ஏன் எழுப்புகிறோம்?. எத்தனையோ தர்மங்களை வாய்வழியாகச் சொல்லும் போது பலத்த சப்தம் எழுப்பும் இந்த மணியின் மூலமாக நமக்கு என்ன உணர்த்தப் பார்க்கிறார்கள்? ஆம். உலகம் அலைவடிவம் என்பதற்கு நிதர்சன சாட்சியமே மணியோசை.

இந்த உலகம் அலைவடிவாகவே இயங்குகிறது என்பதை நாம் பார்த்தோமல்லவா! நாம் செய்யும் நன்மையும் தீமையும் நம்மைச்சுற்றியே அலையாகப் பரவிக்கொண்டே இருக்கும் என்பதைப் பார்த்தோமல்லவா! நம்முடைய உணர்வுகள் யாவும் அலைவடிவாக பிரயாணப்படும் என்பதைப் பார்த்தோமல்லவா!

மணியின் ஓசையை உற்று கவனித்தால் இவை யாவும் எளிதில் விளங்கும்.

நல்லதே நினைக்கவேண்டும். நல்ல விஷயங்களைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். காரணம் நாம் நினைக்கும் காரியங்கள் யாவும் எண்ண அலைகளாக வெளியே எப்போதும் வியாபித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு எண்ணங்கள் எப்படிப் பரவுகிறது என்பதை ஒரு உதாரணத்தின்
மூலம் உணர்த்திக் காட்டும் போது ஆழ்மனதில் நன்றாகப் பதியும் என்பதால் மணியின் ஓசையை எழுப்பி, இதோ இந்த ஓசை எப்படி காற்றில் அலை அலையாகப் பரவுகிறதோ அதே போல நீங்கள் சிந்திப்பவை யாவுமே அலைவடிவில் எப்போதும் பிரபஞ்சத்தோடு சஞ்சாரித்துக் கொண்டே இருக்கும் என்பதை இந்த ஓசை மூலமாக புரிய வைக்கிறார்கள்.


ஓவ்வொரு மனிதரின் உடலில் இருந்தும் மின் காந்த அலைகள் ஒவ்வொரு வினாடியும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது நிபுனர்களின் கூற்று. அவ்வாறு வெளிப்படும் அலைகள் தான் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்கு நினைவலைகளைக் கொண்டு செல்கிறது. காற்றில் அலைக் கற்றைகள் எப்போதும் பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படிப் பிரயாணிக்கும் அலைக்கற்றைகளில் நம்முடைய நினைவலைகளும் கூடவே இருக்கும். கோவிலிக்குப் போகிறோம். மனமுருக ஏதாவது காரியம் நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். அது சம்பந்தமான காரியம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு நடக்கிறது. காரணம் என்ன? நாம் பிரார்த்திக்கும் போது நம்முடைய எண்ண அலைகள் உடலிலிருந்து வெளிப்பட்டு மணியின் ஓசை பரவுவதைப் போல பிரபஞ்சத்தோடு கலந்து பிரயானிக்கிறது.

அந்த எண்ண அலைகள் அதற்குத் தொடர்புடைய வேறு நபர்களின் உணர்வலைகளில் முட்டி மோதி கலக்கும் போது அந்த நபரின் மூலமாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறுவது சாத்தியமாகிறது. குறிப்பாக கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்யச் சொல்வது இதற்க்காகத்தான். நம்முடைய பிரார்த்தனைக்கான அலைகள் குறைந்த பிரயாணத்திலேயே அதிக நபர்களைச் சென்று அடைந்து விடும் என்பதற்க்காகத்தான், எல்லோரும் எண்ண அலைகளை ஒரு சேர வெளிப்படுத்தும் இடமான கோவில்களில் சென்றே பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.

இது ரேடியோ அலைகள் பற்றிய அறிவே அன்றி மூட நம்பிக்கை அல்ல.

இதை எப்படி நம்புவது? நம்முடைய எண்ணங்கள் எப்படி பிரயாணப்பட முடியும். விளக்குகிறேன். உதாரணமாக ரேடியோ அலைகள் காற்றில் மிதந்து வருவதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் சரியான அலைவரிசையினைக் கொண்ட உபகரணங்கள் மூலம் அதை உள் வாங்கும் போது அந்த அலைகளை ஒலியாக நம்மால் மாற்ற முடிகிறது.

செல் போன் அலைகள் நம்மைச் சுற்றி நாலா பக்கமும் பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் நம்முடைய சிம் கார்டு தொடர்பான அலைக்கற்றை வரும் போது நமக்கு அது உணர்த்தப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகளும் அவ்வாறே செயல் படுகிறது.

ஆக பிரார்த்தனைகள் பரவும் வகையையும் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் நமக்கு செய்முறை விளக்கம் போல செய்து காண்பிக்கும் செயல் வடிவமே மணியோசையாகும்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்
அலைகள் ஓய்வதில்லை..

1 comment:

Anonymous said...

அருமை,அருமை இதற்கு பேர் தான் உன்மையான பகுத்தறிவு.நன்றி,தொடர்ந்து எழுதுங்கள.எங்கள் ஆதரவு என்றும் உண்டு