Wednesday, September 9, 2009

பொறுமை - விதுர நீதி!

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரிடம், "பாண்டவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படாவிட்டால் போரை இனி தடுக்க முடியாது" என்று கூறிச்செல்ல அதைக் கேட்ட திருதிராஷ்டிரர் மிகுந்த மனக்கவலை அடைந்தார்.

அவர் விதுரரை வரவழைத்து இவ்வாறு கூறினார் " விதுரரே!, உம்மைப் போன்று தர்மம்
அதர்மங்கள் பற்றி அறிந்தவர் யாருமில்லை. நான் மிகவும் மனக்கவலை அடைந்திருக்கிறேன்! இவையெல்லாம் ஏன் நடக்கிறது? என்னுடைய நன்மைக்குத் தகுந்த அறிவுரைகளைச் சொல்" என்றார்.

விதுரர் கூறினார், "மன்னா! ஆயுதத்தால் ஒரே ஒருவன் தான் கொல்லப்படுகிறான். ஆனால் கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது.

பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணமாகும். திறமைசாலிகளுக்கு அது ஒரு அணிகலன்.

எவனுடைய கையில் பொருமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்தக் கெடுதலையும் செய்ய முடியாது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

அரசனாக இருக்கும் ஒருவன் போரைக் கண்டு அஞ்சினாலோ, அந்தணன் ஒருவன் வீட்டைத் துறக்க அஞ்சினாலோ அவனை பூமி விழுங்கி விடுகிறது.

திறமைசாலியிடமுள்ள பொறுமையும், ஏழையிடமுள்ள தானம் செய்யும் குணமும் மோஷத்தை உண்டு பண்ணக் கூடியவை. செல்வம் இருந்தும் எவன் தானம் செய்வதில்லையோ, வறியவனாயிருந்தும் எவன் தவம் செய்வதில்லையோ, கல்லைக் கட்டிக் கொண்டு நீருக்குள் மூழ்குவதற்குச் சமமானவர்கள்.

பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று தகுதியுள்ளவருக்குக் கொடுக்காமலிருத்தல். யோகியான துறவி, போரில் முனைந்ததால் கொல்லப்படவிருக்கும் க்ஷத்ரியன் இவ்விருவரும் ப்ரம்மலோகத்திற்குச் செல்கிறார்கள்.

3 comments:

தேவன் said...

///பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணமாகும். திறமைசாலிகளுக்கு அது ஒரு அணிகலன்.///

பொறுமையை பற்றி நல்லா சொல்லிருக்காரு.நல்லா இருக்கு.

தொடருங்கள் வாழ்த்துக்கள் அண்ணா!

Meens said...

Nice information... Actually I am getting answers for my situation..whenever i read ur posts..Keep going...

S. Arul Selva Perarasan said...

நண்பரே!

http://mahabharatham.arasan.info என்ற வலைப்பூவில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் The Mahabharata புத்தகத்தை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேரம் கிடைக்கும்போது அங்கு சென்று படித்து ஒரு மதிப்புரை (Review) அளிக்கவும்.