Saturday, September 5, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 5


சென்றவாரத் தொடர்ச்சி...!

"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின் முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.

முன்பொரு சமயம் வற்றாத ஜீவ நதியான கங்கை ஓடும் வாரனாசியில்
பிரதாபமகுடன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரமகுடன் என்றொரு மகன் இருந்தான். மன்னனைப்போலவே மகனும் மிகுந்த பராக்கிரமசாலி. சிறந்த வீரன். மன்மதனைப் போல அழகுள்ளவன். ஆனால் வஜ்ரமகுடனுக்கு புத்தி கூர்மை கொஞ்சம் குறைவு. எதையும் சட்டென்று புரிந்து கொள்ளமாட்டான்.

ராஜகுமாரனான வஜ்ரமகுடனுக்கு நேர் மாறாக இருந்தான் அவனுடைய நண்பன் புத்திசரீரன். பெயருக்கு ஏற்றார்போல சரீரம் முழுவதும் புத்தியைக் கொண்டவனாய் இருப்பான். மிகவும் சிக்கலான விஷயங்களைக் கூட தனது புத்திக் கூர்மையால் வினாடியில் வென்று முடிப்பான். அரசவை மந்திரியின் குமாரனான இவன் மீது அரசகுமாரன் வஜ்ரமகுடன் மிகுந்த பிரியம் கொண்டிருந்தான்.

மந்திரிகுமாரன் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டான். அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தான்.

ஒரு நாள் வஜ்ரமகுடனும் புத்திசரீரனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். துஷ்ட மிருகங்களை காட்டின் அடர்ந்த பகுதிகளில் நீண்டதூரம் சென்று வேட்டையாடிச் சென்றவர்கள் எல்லை தாண்டி வேறு ஒரு கிராமத்திற்குள் சென்று விட்டனர்.

அது ஒரு அழகான நந்தவனமாக இருந்தது. அந்த வனத்திற்குள் செல்லச் செல்ல விரிந்த மலர்களும் அவைகளின் வாசனையும் வஜ்ரமகுடனை வெகுவாகக் கவர்ந்தன. குதிரைகளின் குழம்புகள் தரையில் உராயும் சத்தம் கீட்டவுடன் பறவைகள் சட சட வென மொத்தமாகப் கீச்சிட்டுப் பறந்தன. பறவைகள் பறக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நடந்தானர் இருவரும்.

இருவரும் வழியில் அழகான ஒரு ஏரியை அடைந்தனர். அந்த ஏரியில் வண்ண மயில்களைப் போல மையல்கள் குளித்துக் கொண்டிருந்தததைப் பார்த்த ராஜகுமாரன் குதிரையை ஓரமாக நிறுத்தி விட்டு அருகே சென்றான்.

நீரில் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்த பெண்களின் நடுவே பேரழகாய் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கண்களும் உதடுகளும் வஜ்ரமகுடனை மயங்கச் செய்தன. குளித்துக் கொண்டிருந்த பெண் ராஜகுமாரன் பார்ப்பதை கவனித்தாள். ஓரக்கண்ணால் அவனைப்பார்த்த பெண் கம்பீரமான அவனது தோற்றத்தில் மயங்கினாள். எப்படியாவது அவனை சந்திக்கவேண்டும் என்று எண்ணிய அவள் சில சமிக்ஞைகள் செய்தாள்.

ஒரு தாமரைப் பூவைப் பறித்து தன் காதில் சூட்டிக்கொண்டாள். காதில் அணியும் தந்த பத்திரம் என்னும் ஆபரணம் போல அப்பூவை நீண்ட நேரம் சுருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, மற்ர்றொரு பூவைப் பறித்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டாள். அதே சமயம் மற்றொரு கையை தன் நெஞ்சில் வைத்துக் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜகுமாரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் புத்திசரீரனுக்கு சட்டென விளங்கி விட்டது.

அவள் தோழிகளுடன் கரையேறி விருட்டென சென்றுவிட்டாள். வஜ்ரமகுடனுக்கோ தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அவள் செய்த செய்கைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தான். அவள் என்ன சொன்னாள் என்பதை தன் ஆருயிர் நன்பனிடம் விசாரித்தான்.

புத்திசரீரன் "ராஜகுமாரனே! அந்தப் பேரழகி உங்களை காண விரும்புகிறாள். அவள் தனது இருப்பிடத்தை ரகசிய குறியீடிகளின் மூலம் உங்களுக்குச் சொல்லிச் சென்றாள்" என்றான்.

வஜ்ரமகுடனோ ஒன்றும் புரியாதவனாய் "என்ன? அவள் தன்னைப் பற்றி சொன்னாளா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நண்பா! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன் என்றான்?"

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

விளக்குவான் பொறுங்கள்!

No comments: