Saturday, September 12, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 6

சென்றவாரத் தொடர்ச்சி

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

"அவள் தாமைரைப் பூவைத் தன் காதில் வைத்துக் கொண்டதால் அதைச் சின்னமாக வைத்திருக்கும் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதணியான தந்தபத்திரம் போலச் சுருட்டியதால், "அங்கேயுள்ல தந்தச் சிற்பி ஒருவன் மகள்" என்பதையும் குறிப்பிட்டாள்.

தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூடியதால் தன் பெயர் பத்மாவதி என்றும் கையை நெஞ்சகத்தின் மீது வைத்துக் கொண்டு கடைக்கண்ணால் உன்னைப் பார்த்ததால், அவள் இதயம் உனக்கே சொந்தமாகிவிட்டது என்றும் அறிவித்தாள். உண்மையாகவே கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய ஆஸ்தானத்தில் தந்த சிற்ப்பிகளுள் சிறந்தவனான சங்கிராமவர்த்தனன் என்பவன் இருக்கிறான். அவனுக்குப் பத்மாவதி என்ற பெண் ஒருத்தியும் உண்டு. அவள் தான் இந்தப் பெண்ணாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்று புத்திசரீரன் கூறினான்.

மந்திரிகுமாரன் இவ்வளவு விளக்கமாகக் கூறியதைக் கேட்ட வஜ்ரமகுடன் தன் நண்பனின் புத்திக் கூர்மையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு எப்படியாது அந்தப் பெண்ணை அடைந்து விட வேண்டும் என்ற துடிப்பு அதிகரித்தது. தன்னுடைய பரிவாரங்களை தன் நாட்டிற்கு திரும்பிப் போகச் சொல்லிவிட்டு நண்பன் புத்திசரீரனுடன் கலிங்க நாட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே கர்ணோத்பலன் ஆண்டுவந்த நகரத்தை அடைந்து தந்த சிற்பியின் வீட்டை தேடையலைந்து கண்டு பிடித்தனர். பிறகு இருவரும் ரகசியமாக பக்கத்தில் குடியிருந்த ஒரு கிழவியின் வீட்டுக்குச் சென்று தங்கினார்கள்.

மந்திரி குமாரன் குதிரைகளை மறைவான இடத்தில் கட்டி புல்லைப் போட்டு தண்ணீர் காட்டிவிட்டு வந்தான். பிறகு அந்தக் கிழவியிடம், "அம்மா, இவ்வூரில் சங்கிராமவர்த்தனர் என்னும் தந்தச் சிற்பி ஒருவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"நன்றாகத் தெரியுமே. அவரது மகளுக்கு நான் தான் செவிலித்தாயாக இருந்தேன். ஆனால் வெகுநாட்களாயிற்று நான் இப்பொழுது அங்கே செல்வதே இல்லை. சரி நீங்கள் ஏன் அவரைப் பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்றாள் கிழவி.

மந்திரி குமாரன் தொடர்ந்தான் "அம்மா, நீங்களும் எங்களுக்குத் தாய் போலத்தான். அதனாலேயே உங்களிடம் சொல்கிறேன். இவர் பக்கத்து நாட்டு ராஜகுமாரன் வஜ்ரமகுடன். இவர் சங்கிராமவர்த்தனரின் மகள் பத்மாவதியை ஒரு ஏரிக்கரையில் கண்டு மையல் கொண்டார். எப்படியாவது அவளை மணக்க வேண்டும் என்பது ராஜகுமாரனின் ஆசை. ஆனால் ஏற்கனவே இரு நாடுகளும் பகையாக இருப்பதால் அந்தப் பெண்ணை ரகசியமாக கவர்ந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை. எனவே எப்படியாவது நீங்கள் பத்மாவதியை சந்திக்க உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருகிறோம்" என்றான்.

"சரி நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்றாள் கிழவி.

"நீங்கள் பத்மாவதியிடம் போய், நீ குளக்கரையில் கண்ட ராஜகுமாரன் வந்திருக்கிறான். அவன் உன்மீது மோகம் கொண்டிருக்கும் செய்தியை உனக்கு அறிவிக்கவே என்னை அனுப்பி வைத்தான் என்று ரகசியமாக தெரிவிக்க வேண்டும்" என்றான் புத்திசரீரன்.

அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்ற கிழவி சிறிது நேரத்திலேயே அழுத முகத்துடன் திரும்பிவிட்டாள். ராஜகுமாரனும் மந்திரி குமாரனும் திகைத்துப் போனார்கள். கிழவியிடம் நடந்தது என்ன என்று வினவினர்.

கிழவி அழுதுகொண்டே கூறினாள் "நான் அவளிடம் போய் நீங்கள் வந்திருக்கும் செய்தியை ரகசியமாகக் கூறினேன். அதைக் கேட்ட அவள் என்னை மிகவும் கோபித்துக் கர்ப்பூரத்தில் தோய்த்த தன் இரண்டு கைகளால் என்னை இரு கன்னங்களிலும் அடித்துவிட்டாள். அவமானத்தால் நான் மனமுடைந்து திரும்பிவிட்டேன். இதோ பாருங்கள், என் கன்னத்தில் அவள் விரல் அடையாளங்கள்!" என்று காட்டினாள் கிழவி.

ராஜகுமாரன் திகைத்துப் போனான். மந்திரிகுமாரனுக்கோ இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உணர்ந்தான். அவன் கிழவியின் கன்னத்தில் படிந்திருந்த விரல் தடத்தை உற்றுப்பார்த்தான். அது சந்திரப்பிறை வடிவில் இருந்தது. வழக்கம் போல் மந்திரிகுமாரன் அவளது குறியீடுகளைப் புரிந்து கொண்டான். அவன் ராஜகுமாரனிடம் இவ்வாறு சொன்னான் "கவலை வேண்டாம் அரசகுமாரரே! அவள் உங்களிடம் இது நிலாக்காலமானதால் இது ஏற்ற தினம் அல்ல என்பதை நிலா வடிவில் தடம் பதிய அடித்திருக்கிறாள். அதே நேரம் பத்து விரல்களும் பதிய அடித்ததால் இன்னும் பத்து நாட்களில் அமாவாசை வந்துவிடும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் செய்தியனுப்பியிருக்கிறாள்" என்றான்.

இதையறிந்து ராஜகுமாரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கிழவிக்கு நிறைய பொற்காசுகளை பரிசாகக் கொடுத்தான். இப்படியே பத்து நாட்கள் கழிந்தன.

ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது..

3 comments:

Kesavan said...

அப்போது.....

அப்பறம் எனக்காவது சொல்லுங்க அண்ணா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..

Manikanda kumar said...

நல்லா எழுதுறீங்க...

தமிழில் மரியாதை ராமன், விக்கிரமாதித்தன் கதைகளுக்கு எதாவது புத்தக பரிந்துரை?

hayyram said...

நன்றி மணிகண்டன் அவர்களே!

தனியாக பரிந்துரைக்க எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் கதையம்சத்தை விட்டு விலகாமலும், சொந்தக் கற்பனையை அதிகம் சேர்க்காமலும் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை படித்துப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்குப் போய் பார்த்தீர்களானால் பல புத்தகங்கள் இது போன்ற கதைகளுக்கு இருக்கும். அவற்றை படித்துப்பார்த்து எழுதிய முறை தரமாக இருந்தால் வாங்கலாம். அவ்வளவே! நான் அப்படித்தான் வாங்கி படித்திருக்கிறேன்.