"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய
முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."
"நசிகேதா! நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்."
சரி, இதயக்குகை என்பது எது...?
உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது.
பெரும்பாலானவர்கள் இந்த மையத்தை உணரும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிப்பது இல்லை. புறப்பொருள்களில் இருந்து விலகி மனத்தை அமைதியாக்கி இதை உணர வேண்டும். புறப்பொருட்களால் சலனமடையாமல், உணர்ச்சி மோதல்களில் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்தால் அக உலகம் ஒன்று இருப்பதை
நாம் உணர்வோம்.
இத்தகைய அமைதிப் பிரதேசத்தை உனரத் தொடங்கிவிட்டால் புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாக குறைந்து விடும். இந்நிலையை அடைந்தவர்களையே இன்ப துன்பங்களைக் கடக்கிறவர்கள் என்று கூறுகின்றனர்.
எமதர்மன் மேலும் தொடர்கிறான்.."இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்தப் பாதை திறந்திருப்பதாக நினைக்கிறேன்."
இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன. அவை நம் புற உடல். நம் கண்களால் பார்க்க முடியும். இரண்டாவது அக உடல் அல்லது மாய உடல். அதை கண்களால் பார்க்க முடியாது. இந்த இரண்டும் நம்முடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் உடல் சக்தியை சத்துள்ள காய்கறிகளும் உணவும் உட்கொள்வதால் பெறலாம். மாய உடலின் சக்தியை அதை உணர்வதால் மட்டுமே பெற முடியும்.
உடலின் இயக்கத்திற்கு மூளை சக்தியாக இருக்கிறது என்பதை புறப்பொருள் இயக்கங்களால் உணர முடியும். மாய உடலின் சக்தியை இயக்குவதும் அதன் மூலமாக இருப்பதும் ஆத்மாவே ஆகும். இத்தகைய புற உடலுக்கும் அக உடலுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருப்பதே எண்ணங்கள் அல்லது மனம். அதனால் தான் மனம் அல்லது எண்ணங்கள் புறத்தே தெரிவதில்லை. ஆனால் அவற்றின் ஆற்றலை புற உடலால் உணர முடிகிறது. அதாவது அவற்றால் உண்டாகும் தாக்கத்தை புற உடல் மூலமாக வெளிப்படுத்த முடிகிறது.
அதனாலேயே அக உடலை அடைவதற்கான ஒரே வழியாக எண்ணங்களை குறிப்பிடுகிறார்கள். மனத்தை அமைதிப்படுத்தினால், எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அது நம்மை அக உடலான மாய உடலுக்கு அழைத்துப் போகும். அவ்வாறு எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனத்தை உள்புறமாக செலுத்தி தியானிப்பவர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் ஆத்ம சுவரூபம் தெரியத்துவங்கும். அக உடல் வேறும், புற உடல் வேறாகவும் புலப்படும்.
இவ்வாறு மாய உடலையும் அதை இயக்கும் சக்தியான ஆத்மாவையும் புற உடலில் இருந்து பிரித்து அறிபவன் ஆனந்தம் அடைகிறான். இந்த இரு உடலையும் ஒரு சேர இயக்கக் கற்றுக் கொண்டவர்களே சித்தர்கள் ஆகிறார்கள்.
இங்கே சித்தர்கள் பற்றி சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அவை எதுவும் மாயாஜாலமோ அல்லது நடக்க முடியாத கட்டுக் கதையாகவோ இருக்க முடியாது.
சித்தர்கள் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள். மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள்.
ஆனால் ஆத்மாவைப் பற்றி உணரும் விஷயத்தில் இவை ஒரு பகுதியே. இந்த சித்துக்களிலேயே மூழ்கி விடுபவர்கள் ஆத்மாவோடு முழுவதுமாக ஒன்றிப் பரமாத்மாவை அடைவதில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம்..
இதையே எமதர்மன் "உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான்." என்றும் நசிகேதனுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறான்.
நசிகேதன் இந்த நிலைகளையெல்லாம் கடந்து ஆன்மீகத்தில் மேலும் பயணிக்க நினைக்கிறான். எமதர்மனிடம் இன்னும் கேட்கிறான் "தர்மம், அதர்மம், காரியம், காரணம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டதாக நீ எதைக் காண்கிறாயோ அதை எனக்குச் சொல்வாயாக" என்கிறான்.
நசிகேதனின் இந்த கேள்விக்கு எமதர்மன் சொல்லும் ஈரெழுத்து பதில், அது..
"ஓம்"
"நசிகேதா! எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்கப் படுகிறதோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது "ஓம்".
ஆத்மாவை உணரும் சப்தம்....'ஓம்'
(தொடர்ந்து கேட்போம்.....)
மரணத்திற்கு அப்பால் - 9
No comments:
Post a Comment