Saturday, March 27, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 4 - நான்கு நண்பர்கள் கதை!


அமராவதி நகரத்தில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு சக்தி வாய்ந்த ஒரு யோகி இருப்பதாக அறிந்தார்கள்.

அவரிடம் சென்று தங்களின் தீராத வறுமைக்கு ஏதாவது தீர்வு கூறும்படி கேட்கலாம் என்று தீர்மானித்தார்கள். உடனே அவரிடம் சென்றார்கள். யோகி இந்த நான்கு நண்பர்களையும் பார்த்து "யார் நீங்கள்? எம்மிடம் வரக் காரணமென்ன?" என்று கேட்டார்

நண்பர்கள் நால்வரும் தங்கள் குறைகளைக் கூறினார்கள். அடிகளே! நாங்கள் கொடிய வருமையால் துன்புற்றிருக்கிறோம். வறுமை போக்க பொருள் தேடி தேசாந்திரமாக புறப்பட்டுள்ளோம்" என்று கூறினர்.

மேலும் "நீங்களோ பெரிய யோகி. எங்கள் நால்வருக்கும் பொன்னும் பொருளும் கிடைக்கும் வழியைக் காட்டித்தாருங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று அருள்புரியுங்கள். இல்லையேல் இங்கேயே உயிர் விடுவோம்" என்று கெஞ்சினார்கள் அந்த நால்வரும்.

யோகிக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது. அவர் பொருள்கிடைக்க தான் வழி செய்வதாகக் கூறினார். பின் நால்வர் தலையிலும் பருத்தியாலான திரிசீலைகளை வைத்தார். “இதோ பாருங்கள்! இத்திரிசீலையைத் தலையில் வைத்தபடியே இமயமலையை நோக்கிச் செல்லுங்கள், போகும்போது எவன் தலையிலிருந்து திரிசீலை எவ்விடத்தில் விழுகிறதோ அவனுக்கு அவ்விடத்தில் பொருள் கிடைக்கும். அதாவது புதையல் கிடைக்கும்”, என்று கூறி அனுப்பினார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்நால்வரும் அத்துறவியின் ஆணைப்படி இமையமலையை நோக்கி நடந்தார்கள்.

சிலநாட்கள் நடந்திருப்பார்கள், ஒருவரின் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. உடனே அவன் அங்கு தோண்டிப் பார்த்தான். செம்பு உலோகம் எக்கச்சக்கமாக இருந்தது. மகிழ்ந்துபோன அவன் மற்ற மூவரையும் பார்த்து “நீங்களும் வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

ஆனால் அவர்களோ “முட்டாளாகப் பேசாதே. இதனால் நம் வறுமை எந்த அளவும் குறையாது. நீ வேண்டுமானால் கொண்டு போ" என்று கேலியாகக் கூறி வேகமாக நடக்கவும் செய்தனர். முதலாமவனோ தன்னால் இயன்ற அளவுக்குத் செம்பு உலோகத்தை எடுத்துக்கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பிவிட்டான்.

மீதமிருந்த மூவரும் தொடர்ந்து சில மைல்கள் தூரம் நடந்திருப்பார்கள், மூவரில் ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது.

உடனே அந்தத் திரிசீலைக்குரியவன் அந்த இடத்தில் தோண்டினான். வெள்ளிக் கட்டிகள் ஏராளமாக இருந்தன. “நாம் இவைகளை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகலாம்”, என்றான் அந்த இரண்டாமவன்.

ஆனால் மற்ற இருவருக்கும் ஆசை அதிகமாகியது. முதலில் செம்பு பிறகு
வெள்ளி என்றால் இன்னும் போய்ப் பார்ப்போம். நமக்கு தங்கம் வைரம் என்று மேன்மேலும் கிடைக்கலாம் என்று எண்ணலாயினர். உடனே மீதமிருந்த இருவரும் வெள்ளிக்கட்டிகள் கிட்டியவனைப் பார்த்து “இது யாருக்கு வேண்டும்? இது நம் வறுமையை முற்றிலும் ஓட்டாது. நீ வேண்டுமானால் கொண்டு செல்”, என்று கூறி நடக்கலானார்கள்.

இரண்டாமவன் அவ்வெள்ளிக் கட்டிகளை எடுத்துக் கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பினான். சில மைல்கள் இருவரும் நடந்தார்கள்.

ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. அவன் அங்கு தோண்டினான். பொன் கட்டிகள் புதையலாக இருந்தன. “நாமிருவருமே இதை எடுத்துக்கொண்டு ஊர் போய்ச் சேரலாம் வா”, என்றான் மூன்றாமவன் மற்றவனிடம்.

ஆனால் கடைசிக்காரனுக்கு இப்போது பேராசை தொற்றிக் கொண்டுவிட்டது. அவன் இன்னும் மேலே போய்ப் பார்க்க எண்ணினான். அதனால் அவன் தங்கக்கட்டி கிடைத்தவனிடம் அலட்சியமாக "இது யாருக்கு வேண்டும்? எத்தனை நாட்களுக்கு இது நம் வறுமையை போக்கும்? இன்னும் போனால் எனக்கு நவரத்தினக் குவியலே கிடைக்கும். நீ வேண்டுமானால் எடுத்துக் கொண்டு உன்னூர் போய்ச் சேர்" என்று துச்சமாகப் பேசிச் சென்றுவிட்டான்.

மூன்றாமவன் அத்தனைத் தங்கக் கட்டிகளையும் மூட்டை கட்டிக்கொண்டு தன் சொந்த ஊர் நோக்கித் திரும்பினான்.

முதலாமவனுக்கு செம்பு கிடைத்தது, இரண்டாமவனுக்கு வெள்ளி கிடைத்தது, மூன்ராமவனுக்கோ தங்கக் கட்டிகள் கிடைத்தது, அப்படிஎன்றால் நான்காவதாளான தனக்கு நவரத்தினங்கள் தானே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான்காவது ஆள் நடந்து கொண்டே இருந்தான் இமையமலையை நோக்கி. நடக்க, நடக்க அவனுக்குப் பசியும் களைப்பும் அதிகமாகி தடுமாறியது. அப்பொழுது அவனெதிரில் ஒருவன் எதிர்பட்டான். அவன் தலையில் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. உடலெல்லாம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நான்காமவன் அவனை நோக்கி நீ யார்? உன் தலைமேல் ஏன் சக்கரம் சுழல்கிறது? என்று கேட்டான். அப்படி கேட்கும்போதே அந்தச் சக்கரம் கேட்ட அந்த நான்காமவனான பேராசைக்காரன் தலைமேல் வந்துவிட்டது.

திடுக்கிட்ட அவன் “இதென்ன அநியாயம்? நான் கேட்கும்போதே உன் தலையிலிருந்தது என் தலைமேல் வந்து இந்தச் சக்கரம் சுற்ற ஆரம்பித்துவிட்டதே” என்று பதறினான்.

இதுவரை நான் இந்தச் சக்கரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு துயரப் பட்டுக்கொன்டிருந்தேன்.

இன்று காலை குபேரன் வந்து, ஒருவன் தலையில் திரிசீலையோடு வருவான், வருபவன் பேசுவான், பேசும்போது இந்தச் சக்கரம் அவன் தலைக்கு மாறி உனக்குச் சாபவிமோசனம் ஆகும் என்று கூறினான். அவன் கூறினபடி நீ வந்தாய். வந்து என்னை விடுவித்தாய். நான் வருகிறேன் என்று அவன் புறப்பட்டுப் போனான்.

"சரி எனக்கு எப்போது இதிலிருந்து விமோசனம் கிடைக்கும்" என்றான் நாலாமவன்.

"அடுத்த பேராசைக்காரன் வரும் போது" என்றான் விடுதலையானவன்.

பாடம்: பேராசை பெருநஷ்டம். நமக்கென்று கிடைக்கும் பொருளை வைத்து இன்புற்று வாழத் தெரியாதவன் எதையும் அனுபவிக்காமல் இருப்பதையும் இழந்து நிற்பான்.

நம் பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

No comments: