Sunday, March 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 12



எமதர்மனே! மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். உண்மை என்ன?

இது நசிகேதன் எமதர்மனிடத்தில் கேட்டது. அதற்கு எமதர்மன் பகர்ந்த விடையும் அது சார்ந்த விளக்கங்களும் தான் இது வரை நாம் பார்த்து வந்தோம். மேலும் தொடர்ந்து செல்வதற்கு முன் நாம் வந்த பாதையைச் சுருக்கமாகச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

தந்தையின் கோபமான கட்டளையால் எமலோகத்தை அடைந்த நசிகேதன் அங்கே எமனுக்காக காத்திருக்க நேருகிறது. நசிகேதனை காத்திருக்க வைத்தமைக்காக எமதர்மன் நசிகேதனுக்கு மூன்று வரங்களைக் கொடுக்கிறான். அதில் மூன்றாவதாக நசிகேதன் கேட்ட வரம் தான் 'மரணத்திற்கு அப்பால் மனிதனுக்கு நடப்பது என்ன?' என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வரம்.

பெரிய தயக்கத்திற்கு பிறகு எமதர்மன் நசிகேதனுக்கு அவற்றை விளக்குகிறார். அதைப் பற்றி கூறுவதே கட உபநிஷதம்.

இங்கே எமதர்மன் மனிதன் ஆத்ம சுவரூபமானவன் என்றும் உடல் வேறு ஆத்மா வேறு என்பதை முதலில் நசிகேதனுக்குப் புரியவைக்கிறார். பின் ஆத்மா எத்தைகையது என்றும் உடலில் எங்கே இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி ஆத்மா பற்றிய ஒரு புரிதலை நசிகேதனுக்கு உண்டாக்குகிறார். பிறகு ஆத்மாவின் சக்தியைப் பற்றியும் இறைவன் என்கிற கடைசிப் புகலிடத்தை அடைவதற்கான வழி என்ன என்பதையும் ஒரு வரிசைக்கிரமமாக விளக்கிச் சொல்கிறார். இந்த வரிசையைச் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:

1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.

2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.

3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.

4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.

5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.

6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்.


இவ்வாறு எமதர்மன் பல விஷயங்களை விளக்கமாகக் கூறியதை வெவ்வேறு உதாரணங்களுடன் இதுவரைப் பார்த்தோம். இனி இதற்கும் மேலே பயணித்தால் மரணத்தை வெல்லக்கூடியவன் யார், மரணத்திற்கு பிறகு ஆன்மா என்ன நிலையை அடைகிறது என்று எமதர்மன் மேலும் விளக்குகிறார். அவற்றைப் பார்ப்போம்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பது போன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்."

"ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்."

மரணம் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது உடலும் மனமும் ஒரு வித அவஸ்தைக்கு உள்ளாகிறது என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மாவை உணர்ந்து அதனோடு ஒன்றிப் போகிறவன் உடல் வேறு ஆன்மா வேறாகப் பிரியும் தருணத்தை உணரமாட்டார்கள். எனவே அவர்கள் மரணம் என்கிற அவஸ்தையிலிருந்து விடுபடுகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆன்மாவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் உடலை விட்டுப் பிரியும் போதும் மரணம் என்று உணராமலேயே வாழ்ந்துகொண்டே இருக்கும் நிலையை அடைவார்கள்.

அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த ஒரு நிலையை உணர வேண்டும். இதற்கு மனதை அமைதிப்படுத்தி ஆழ்மன அமைதியை உணரச்செய்யும். தியானமும் அதற்கான தொடர் பயிற்சியும் மட்டுமே கை கொடுக்கும். பொதுவாக மனத்தால் எதையும் நினைக்காமல் சலனமற்ற முறையில் அமைதியாக ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தாலே யோகமாக கருதப்படுகிறது. சலனமற்ற மனமே ஆன்மாவைப் பற்றி சிந்திக்கச் செய்யும். சலனமற்ற மனமே இறைநிலையை உணரச்செய்யும். இந்த வேகமாக இயங்க வேண்டிய உலகில் இதற்கென்று நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தாலொழிய இந்த லட்சியத்தை அடைய முடியாது.

இந்த இடத்தில் உபநிஷத்தைக் கற்பதாலும் கேட்பதாலும் ஏற்படும் நன்மைகள் கூறப்படுகின்றது.

நசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்|
உக்தா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே||

"நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான். மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிரார்த்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது".

பொதுவாக உபநிஷதங்கள், பகவத் கீதை போன்றவற்றைப் படிப்பது புண்ணிய செயலாகவே கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில் இன்றைக்கும் தினசரி யாரேனும் பகவத் கீதையை சுலோகத்துடன் படித்து அவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இது தினசரி ஒரு சாதாரண நிகழ்வாகும். இதற்கென்று பெரிய சொற்பொழிவாளர் வரவேண்டியது இல்லை. அதனைப் படிப்பதையும் அமர்ந்து கேட்பதையும் ஒரு புண்ணியமாகவே கருதுவதால் (தமிழர்கள் போல் அல்லாமல் அவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு மரியாதை கொடுப்பதால்) இது கேரளக் கோவில்களில் தொடர்கிறது.

மேலும் உபநிஷதத்தை வெறுமனே வாசிப்பதால் பலனில்லை என்றும் அதன் உட்பொருளை தூய உள்ளத்தோடும் உணரத்துடிப்பவரே உபநிஷதங்கள் படிப்பதனால் பலனடைவார்கள் என்றும் உபநிஷதத்தின் முக்கியத்துவம் பற்றி கூறப்படுகிறது.

ஆக இதுவரை படித்ததை மனதில் நிறுத்தி அசைபோடுங்கள். ஆன்மாவை உணர முயற்சியுங்கள்.

இனி கட உபநிஷத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகின்றது. அங்கே எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார். மேலும் மரணத்திற்கு பின்னால் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்றும் விளக்கமாக நசிகேதனுக்கு விளக்குகிறார். இனி வரும் நாட்களில் இன்னும் ஆழமாக ஆன்மாவைத் தரிசிப்போம்.


கொசுறு: உபநிஷத்தும், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிப்பதற்கு முன்னால் எளிய பகவத் கீதையை அன்பர்கள் ஓரிரு முறை படிப்பதும் மிகவும் நல்லது. ஆத்மா பரமாத்மாவை பற்றிய சிந்தனைகளுக்கு பகவத்கீதையே வாசற்கதவாக இருக்கும். மேலும் அனைத்து உபநிஷத்துக்களின் எளிமையான சாரமே பகவத் கீதை என்றும் பெரியோர்களால் வழிகாட்டப்படுகிறது. எனவே பகவத் கீதையை ஒரு முறையேனும் ஒருநிலையான மனதுடன் முழுமையாக வாசித்தால் நல்லது.


மரணத்திற்கு அப்பால் - 13

No comments: