Wednesday, March 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 11



"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."


ஐந்து குதிரைகளைக் கட்டுப்படுத்தி தேரைச் செலுத்தும் ஒரு தேரோட்டியைப் போல புலன்களை அடக்க வேண்டும் என்று எமதர்மன் விளக்குகிறார்.

இனி உலக மாயையும், புத்தியும், ஆன்மாவும் ஒன்றைவிட ஒன்று வலிமையானது என்பதை எமதர்மன் விளக்குகிறார்.

இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன:|
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர:|

"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

மஹத: பரமவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ: பர:|
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி:|

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுகிப் பொருள், அவரே கடைசிப் புகலிடம்".

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. இவ்வாறு உலகப் பொருட்கள் நம் புலன்கள் முழுவதையும் கவர்ந்து மனதைக் கவர்ந்து விடுவதால் புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறார் எமதர்மன்.

ஆக நாம் முதலில் நம் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உலகப் பொருட்களைக் காணும்போது அதனால் கவரப்படாத அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்போது தான் புலன்களை விட வலிமை வாய்ந்த உலக பொருட்கள் மீதான மயக்கத்தை நாம் வெல்ல முடியும்.

உலகப் பொருட்களின் மீதான மயக்கத்தை வென்றால் அதற்கடுத்தபடியாக வலிமை வாய்ந்ததான மனத்தை வெல்ல முடியும். இப்படி படிப்படியாக உயர்வை அடையும் போதே இறைவனை அடைய முடியும். இவை யாவும் தொடர் முயற்சியாலு அதனைச் செய்யத் துணிவதாலும் மட்டுமே நடக்கும். அப்படி படிப்படியாக செய்தாலும் நடக்குமா, இறைநிலையை நாம் அடைய முடியுமா என்ற கேள்விகள் எழலாம்?.




இமயத்தின் சிகரம் பார்த்து மலைக்கக் கூடாது. முதல் அடி நம் காலடியில் தானே இருக்கிறது. நாம் தான் அடியெடுத்து அருகிலிருக்கும் அடுத்த அடியைத் தாண்ட வேண்டும். நம் அருகில் இருக்கும் தரையில் நாம் காலெடுத்து வைக்கத் தயங்கினால் சிகரத்தை எப்படித் தொட முடியும். அதே போல் தான் நம் உடம்பில் இருக்கும் புலன்களை கட்டுப்படுத்தி முதலில் உலக பொருட்களின் மீது உண்டாகும் மயக்கத்திலிருந்து விடுவித்தால் அடுத்ததும் சாத்தியம் ஆகும்.

இந்தப் படிப்படியான உயர்வுகளையே ஒன்றைவிட ஒன்று எவ்வாறு வலிமையாக இருக்கிறது என்றும் இறைநிலையை அடைய எங்கிருந்து பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் அழகாக எடுத்துரைக்கிறார் எமதர்மன்.



எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! இந்த ஆன்மா எல்லா
உயிர்களிலும் மறைவாக உள்ளது; வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்."

"அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியில் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்."

பொதுவாக எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது அதிகம் பேச்சு வெளிப்படும் என்பார்கள். பேச்சைக் குறைத்தால் எண்ணங்கள் குறையும். எண்ணங்கள் குறையும் போது புத்தி விழிப்படையும். குறிப்பாக தியானம் செய்பவர்கள் எண்ணங்களையே கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களால் விழிப்புடன் பல விஷயங்களை கவனிக்க முடிகிறது.

உதாரணமாக தசாவதானி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரே நேரத்தில் நடக்கும் பத்து விஷயங்களை கவனித்து ஒன்றன்பின் ஒன்றாக சரியாகச் சொல்வார்கள். இப்படி நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு தசாவதானி அமர்ந்திருக்கிறார் என்று கொள்வோம். அவர் முன் ஒருவர் திருக்குறளை வரிசையாகப் படிக்கிறார். குறள் படிக்கும் போதே ஒரு மணியோசை ஒலிக்கும். அதே நேரத்தில் வேறு ஒருவர் ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பார். ஒரு சினிமா பாடலின் இரண்டு வரி பாடும், கடிகாரம் மணியடிக்கும். வாசலில் ஒருவன் காய்கறி கூவி விற்பான். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும். இந்த தசாவதானி திருக்குறள் என்னென்ன படிக்கப்பட்டது என்று திருப்பிச் சொல்லும்போதே, எத்தனை முறை மணியடித்தது என்றும், கடிகாரத்தின் நேரம் என்ன என்றும், அதே நேரத்தில் பாடிய சினிமாப் பாடல் வரி என்ன என்றும், அருகிலிருந்தவர் வாசித்த ஆங்கில வார்த்தை என்ன என்றும் தெருவில் போன காய்கறிக்காரன் என்னென்ன காய்களின் பெயர்களைச் சொல்லி கூவிவிட்டுப் போனான் என்றும் ஒன்று விடாமல் மிகச் சரியாகச் சொல்வார்.

இப்படி ஒரே நேரத்தில் நடக்கும் நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் நம் நாட்டில் உண்டு. சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒரு தசாவதானியை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தார்கள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாமும் தசாவதானி ஆக வேண்டும் போல இருந்தது. அதனாலேயே தியானத்தின் மீதும் ஆர்வம் புறப்பட்டது.

ஆனால் இன்றைய குழந்தைகள் பாவம். அவர்களுக்கு மனதை ஒருங்கினைக்கும் ஆவலைத் தூண்டுவதற்குப் பதிலாக மனதை சலனப்படுத்தும் விஷயங்களே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. சரி விஷயத்திற்கு வருவோம்.

இப்படி பேச்சைக் குறைத்து எண்ணங்களை கட்டுப்படுத்தினால் மனம் வசியப்படும் என்றும் எமதர்மன் அழகாக எடுத்துரைக்கிறார். பேச்சைத்தானே குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் அதையாவது செய்து பார்ப்போமே.

மேலும் மரணத்தில் இருந்து யாரால் விடுபட முடியும் என்றும் எமதர்மன் போதிக்கிறார்.

(தொடர்ந்து கேட்போம்...)



மரணத்திற்கு அப்பால் - 12

6 comments:

thiruchchikkaaran said...

ராம்,

1) உங்க‌ள் க‌ட்டுரையை மேற்கோள் காட்ட‌ அதை திரும்ப‌ டைப் அடைக்க‌ வேண்டியுள்ள‌து. எளிமை ஆக்க‌ கூடுமா?

2)// ம‌கிமை வாய்ந்த ஆன்மாவை விட‌... அவ‌ரே க‌ட‌சிப் புக‌லிட‌ம். //

இத‌ன் மூல‌ சுலோக‌த்தை ச‌ம‌ஸ்கிருத‌த்தில் அப்ப‌டியே மேற் கோள் காட்டி த‌ர‌ இய‌லுமா?

காத்திருக்கிறென்!

hayyram said...

//இத‌ன் மூல‌ சுலோக‌த்தை ச‌ம‌ஸ்கிருத‌த்தில் அப்ப‌டியே மேற் கோள் காட்டி த‌ர‌ இய‌லுமா?//

கண்டிப்பாகத் தருகிறேன். தயை கூர்ந்து இந்திய நேரப்படி இரவு வரை காத்திருங்கள்.

hayyram said...

திருச்சி! அத்யாயத்தின் பகுதியிலேயே எழுதிவிட்டேன்.

thiruchchikkaaran said...

ராம்,

கட உபநிடத சுலோகத்தை மேற்கோள் காட்டியதற்கு நன்றி.

இதில் நமக்கு சில சந்தேகங்கள் வருகிறதே. ஆத்மாவை விட அவ்யக்தம் மேலானது என்று சொல்லப் பட்டு இருக்கிறதா? ஆத்மா என்கிற வார்த்தையே நமக்கு தெரியவில்லையே.

விளக்க முடியுமா?

hayyram said...

இந்த்ரியேப்ய - புலன்களைவிட; பர- வலிமை வாய்ந்தவை; யர்த்தா - உலகப்பொருட்கள்; அர்த்தேப்யச்ச - உலகப் பொருட்களை விட; பரம் மன - வலிமை வாய்ந்தது மனம்; மனஸஸ்து பரா புத்தி - மனதை விட வலிமை வாய்ந்தது புத்தி; புத்தேர் ஆதாம் மஹான் பர - புத்தியை விட மஹிமை வாய்ந்த ஆத்மா வலிமை வாந்தது; மஹத - மகிமை வாய்ந்ததான அதை விட; பரமவ்யக்தம் - வலிமை வாய்ந்தது அவ்யக்தம்; அவ்யக்தாத் புருஷ: பர: - அவ்யக்தத்தை விட கடவுள் மகிமைவாய்ந்தவர்; புருஷான்ன பரம் கிஞ்சித் - கடவுளை விட வலிமைவாய்ந்தது எதுவுமில்லை (கிஞ்சித்); ஸா காஷ்ட்டா - அவரே அறுதிப் பொருள்; ஸா - அவரே; பராகதி:| - கடைசிப் புகலிடம்.

thiruchchikkaaran said...

Thanks Ram.