"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."
மேலும் ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளையும் என்னவெல்லாம் செய்யவல்லது என்பதையும் நசிகேதனுக்கு விளக்குகிறான் எமதர்மன்.
"அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. அது ஒளி மயமானது. என்னைத் தவிர வேறு யார் அதனை அறிவதற்குத் தகுதியானவன்?" என்றான் எமதர்மன்.
"என்னைத் தவிற யார் இதனைஅறிவதர்குத் தகுதியானவன்" என்று எமதர்மன் கேட்பதில் பொருள் இருக்கிறது. ஆன்மாவை ஆட்டுவிக்கும் அதிகாரம் அவனிடம் தானே இருக்கிறது. ஆட்டின் உடலுக்குள் என்னென்ன உறுப்புக்கள் எங்கெங்கே இருக்கிறது என்பதை கசாப்புக் கடைக்காரனைவிட சரியாகச் சொல்லமுடிபவர் யார் ?
ஆக ஆன்மாவின் எல்லைகளை அதன் போக்குக்களை மனிதன் இறப்பதையும் அவனே வினைப்பயனால் மீண்டும் பிறப்பதையும் தினசரி கண்டுகொண்டும் அவற்றை இயக்கிக் கொண்டும் இருக்கும் எமனைத் தவிற வேறு யார் இதனை அறிவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும் தகுதியானவன்.
எமதர்மன் மேலும் தொடர்கிறார். "ஆன்மா உடல்களில் உடலற்றது. நிலையற்ற பொருட்களில் நிலையானது. பெரியது. எங்கும் நிறைந்தது. புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகல் நீங்கப் பெறுகிறான்."
ஆன்மா உடல்களில் உடலற்றது என்றால் என்ன?. ஆம் ஆன்மா உடலுக்குள் இருப்பது. ஆனால் உடலோடு ஒட்டாமல் தாமரை இலையின் மேல் தண்ணீர் போல உடலோடு பிணைப்பற்று இருக்கிறது. அதற்கென்று தனியே உடலோ உருவமோ இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார்.
"நசிகேதா! சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ, பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது."
எமதர்மன் மேலும் தொடர்ந்தார் "தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மனத்தின் பரபரப்பு அடங்கப் பெறாதவன் இத்தகையவன் எவ்வளவுதான் அறிவளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை."
"அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?" என்கிறார் எமதர்மன்.
பிறகு எமதர்மன் நசிகேதனுக்கு ஆன்மாவை விழிப்புடன் வைத்திருப்பதையும், ஒரு தேரோட்டி போல ஆன்மாவை நடத்துவதெப்படி என்பது பற்றியும் விளக்குகிறார்.
"நசிகேதா! செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள். இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்."
இதன் மூலம் எமதர்மன் போதிக்க விரும்புவது இதைத்தான். அதாவது செயல்களில் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. அதாவது உயிர்வாழக் காரணாயிருக்கிற புறவாழ்க்கையை கவனிக்கின்ற ஜீவன் அல்லது மனம் மற்றும் ஆன்மா இவ்விரண்டையும் இருவர் எனக் குறிப்பிடுகிறார். இதில் ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். மனத்துடன் அதன் போக்கிலேயே நம்மை ஒன்றுபடுத்தி காண்பவர்கள் உலகியலில் குழப்பங்களில் அழுந்துகிறார்கள். மனம் மற்றும் ஆன்ம இவ்விரண்டையும் பிரித்துணர்ந்து ஆன்மாவின் மீது கவனம் செலுத்தி தியானிப்பவர்கள் நிரந்தரமான அந்த ஸ்வரூபத்தை அறிகிறார்கள். பின்னர் அதனுடனேயே ஒன்றிப்போகிறார்கள்.
மனம் மற்றும் ஆன்மா இவ்விரண்டும் வெயிலும் நிழலும் போல என எமதர்மன் குறிப்பிடுவதால் இரண்டும் ஒன்றே ஆனால் அசலும் அதன் நகலும் போன்றே செயல் படுகிறது என்றும் அறியமுடிகிறது. உதாரணமாக மரம் என்பது ஆன்மா. அதன் நிழல் வெயிலின் காரணமாக பூமியில் தெரிவது. காலத்தால் நிழலின் தோற்றம் மாறுபாடு அடைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மரம் அப்படியே இருக்கிறது. நிழலைப் போல அவை நீள்வதில்லை. சுருங்குவதில்லை. இருளாகும்போது மறைவதில்லை.
அதே போல தான் மனம் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரு, துக்கம் அடைகிறது. மகிழ்ச்சி அடைகிறது. சில நேரங்களில் அமைதியாக இருக்கிறது. ஆனால் ஆன்மா சூழ்நிலைகளால் மாற்றமடைவதில்லை. அது நிலையாக இருக்கிறது. மனத்தின் செய்கைகளை வேடிக்கைபார்த்தபடி ஒரு சாட்சியைப் போல் நிற்கிறது. இதை உணர்பவர் யாரோ அவர் மனத்தின் செயல்பாடுகளைக் குறைத்து ஆன்மாவைக் கவனிக்கத் துவங்குவர். ஆன்மாவுடன் சேர்ந்து தானும் மனத்தைக் கவனிக்கக் துவங்குவர். அப்படி கவனிக்கத் துவங்குபவர்கள் ஆன்மாவின் ஸ்வரூபத்தை அடைந்து ஆன்மாவாகவே ஆகின்றனர்.
இந்த உடல் மன மாறுபாடுகளையும் ஆன்மாவின் நிலைத்தன்மையையுமே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு அழகு பட எளிமையாக விவரிக்கிறார்.
"அர்ஜுனா! ஆத்மாவுக்கு இந்த உடலில் தான் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மூப்பு எல்லாம் ஏற்படுகின்றன. ஆனால் ஆன்மாவோ நிலையானது. மரணத்திற்குப் பின் ஆன்மா மீண்டும் வேறு உடலை அடைகிறது."
"ஏ அர்ஜுனா! குளிர், வெப்பம் , இன்பம், துன்பம் ஆகியவை புலன்களாலேயே உணரப்படுகின்றன. மேலும் அவை தோன்றி, மறைதலும், நிலையாமையும் உடையவை. எனவே நீ அவற்றைப் பொறுத்துக் கொள். ஆனால் ஆன்மா இதனால் பாதிக்கப்படுவதில்லை" என்று ஆன்மாவின் நிலையான தன்மையைப் பற்றி கீதையில் குறிப்பிடுகிறார்.
எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! அன்மா பயணம் செய்பவன், உடம்பு ஒரு தேர், புத்தி அதன் தேரோட்டி, மனம் கடிவாளம். புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் தான் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள். 'உடம்பு, புலன்கள், மனம்' ஆகியவற்றுடன் கூடிய ஜீவன் தான் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்."
"யார் விழிப்புறாதவனாக இருக்கிறானோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் வசப்படாமல் போகின்றன"
மாறாக "யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படுகின்றன." "நசிகேதா! விழிப்பு நிலை இல்லாதவனும், அடங்காத மனத்தை உடையவனாக இருப்பவனும், தூய்மை இல்லாதவனாக இருப்பவனும் இறைநிலையை அடைய மாட்டான். உலக மாயைகளிலேயே அவன் ஆழ்ந்து விடுகிறான்."
"எனவே நசிகேதா! இறைநிலையை அடைய வேண்டுமானா, மனத்தில் செயல்பாடுகள் பற்றியும் ஆன்மா பற்றியும் விழிப்புள்ளவனாக இருக்க வேண்டும். மனத்தை அடக்கியவனாக அமைதி நிலையில் வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். எப்போதும் உளத்தூய்மை உடையவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருப்பவன் யாராகினும், அவன் எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு எய்துவதில்லையோ அந்த இறைநிலையை அடைகிறான்."
"எனவே யார் விழிப்புற்ற தேரோட்டியாக இருக்கின்றானோ, மனமாகிய கடிவாளத்தை கையில் பிடித்து சரியாக செலுத்தத் தெரிந்தவனாக இருக்கின்றானோ, அவனே தான் செல்ல வேண்டிய பாதையை முடிவு செய்யும் திறன் கொண்டவனாகிறான். அந்தப் பாதையின் முடிவை சரியாக அடைகிறான். அந்தப் பாதையே இறைவனின் மேலான இருப்பிடமாக இருக்கும்." என்றார் எமதர்மன்.
ஆர்வமுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு செயல்படுத்த ஆயத்தமானான் நசிகேதன்.
பிறகு எமதர்மன் ஆன்மாவின் வலிமை பற்றி எடுத்துரைக்கிறார்.
(இன்னும் கேட்போம்...)
மரணத்திற்கு அப்பால் - 11
2 comments:
//தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன்,மன ஒருமைப் பாடு இல்லாதவன் மனதின் பரபரப்பு அடங்கப் பெறாதவன்,இவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அவன் ஆன்மாவை அடைவது இல்லை// ரத்தினம் போன்ற கருத்து. ஒருவன் மனது எந்த அளவுக்கு அமைதியில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவன் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறி இருக்கிரான் என்று கருதலாம்.
Ram,
You can mention the exact verses of Kada Upaishad in Bold fonts or italic letters. It would easy for the readers to distinguish between the exact verses and the commentary.
Alteranately you can take few verses write them, and then follow it with your commentery.
வருகைக்கு நன்றி திருச்சியாரே!
ஆலோசனைக்கும் நன்றி. நிறைய அறுபுதமான வரிகளை அப்படி தடித்த எழுத்தில் காண்பித்திருக்கலாம். இனி செய்கிறேன்.
நன்றி.
Post a Comment