கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபாகாரம் அசுத்தமாகிவிடுகிறது. கருணை காட்டுகிறோம் என்கிற நமது எண்ணமே ஒரு வித கர்வத்தைக் கொடுத்துவிடுகிறது. இதனால் செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது.
பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம் அஹங்கார நீக்கம் ஊண்டாக வேண்டும். நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக் கோண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த 'வேண்டியவர்கள்' என்ற வட்டத்தை நம் ஊறார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது.
'அனைத்து அறன்', அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனதைத் தாங்களே துளி கூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்து கொள்வது தான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால் அனைவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வைதிக சம்பிரதாயத்தைத் தான் திருக்குறளும் சொல்கிறது.
நம் சாஸ்திரங்களில் அவரவருக்கான அனுஷ்டானங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கவேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருகிறார்கள். இதில் முதலாவதே அஹிம்ஸை தான். ஸத்யம் கூட இதற்குப் பிறகுதான் வருகிறது. அந்த ஸத்யத்துக்கும் இலக்கணம் கொடுக்கும் போது, வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்வது மட்டுமல்ல. எது ஜீவராசிகளுக்கு இதமானதாக, பிரியமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்று சொல்லியிருக்கிறது.
பாப செயல்களினால் தான் துக்கம் வருகிறது. ஒருவரின் பாபத்தை இன்னொருவர் வாங்கிக் கொண்டு அனுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் பாபத்தை வாங்கிக் கொண்டு தீர்ப்பதற்கே ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தத் தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். "எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்" என்றான். "எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு அனுபவிக்கிறேன். அதனால் அவற்றின் துக்கம் தீரட்டும்" என்றான்.
(யார் ரந்தி தேவன்?!)
இந்த உலகத்தில் சந்தோஷம் என்பது நிரந்தரம் இல்லை. திருமணம், பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக ஸந்தோஷம் தான். பகவானிடம் போய்ச் சேருவது தான் நிரந்தரமான மங்களம்.
ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர் என்ன ஜாதி என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிராமல் நம்மாலான உபகாரத்தைப் பண்ண வேண்டும். 'யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்' என்றே திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறது.
அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
சரி, யாரிந்த ரந்திதேவன்!
ஸ்ரீமத் பாகவதத்திலே ரந்தி தேவன் பற்றி கூறப்பட்டுள்ளது. பரீக்ஷீத்து, யயாதி, துஷ்யந்தன், பரதன் இவர்களின் வம்சத்தில் வந்தவன் தான் ரந்திதேவன். இவர்களுடைய சரித்திரம் பரவலாக அறியப்பட்டிருப்பதுபோல், ரந்தி தேவனின் சரித்திரம் அறியப்படவில்லையென்றாலும் மனித நேயம்மிக்க ரந்திதேவனின் புகழ் இன்றும், இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நிலவுகிறது' என்கிறது பாகவதம்.
“ரந்தி தேவனின் காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ‘வானம் பொய்த்து, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ரந்திதேவன் தன்னிடம் இருந்ததையெல்லாம் தானம் செய்தான். தானும் தன் குடும்பமும் பட்டினியால் வாடியபொழுதும்கூட பொருள் வரவர அவனும் அவன் குடும்பத்தாரும் விரும்பி அறம் செய்தனர். ‘தனக்குப் போக, தானம்’ என்ற விதியை அவர்கள் கடைபிடிக்கவில்லை. “தானத்திற்குப் போக, தனக்கு” என்பது அவர்களின் கோட்பாடாகத் திகழ்ந்தது.
ரந்திதேவனும் அவன் குடும்பத்தினரும் தொடர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் பட்டினிகிடந்தார்கள். நாற்பத்தொன்பதாவது நாள் காலையில் நெய் கலந்த பால்கஞ்சி சிறிதளவு கிடைத்தது. அதை அவன் சாப்பிட ஆரம்பித்தவுடன், வாசலில் ஓர் அந்தணன் தோன்றினான்.
அந்த அந்தணன் “ஐயா, நான் மிகுந்த பசியால் வாடுகிறேன். இருட்டிக் கொண்டு வருகிறது. உயிர் பிரியும் தருவாயில் இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் உணவு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். எங்கும் எதிலும் எம்பிரானையே காணும் ரந்திதேவன், 48 நாட்களுக்குக் பிறகு தனக்குக் கிடைத்த நெய்கலந்த பால் கஞ்சியை அந்தணனுக்கு மனமுவந்து வழங்கினான். பசி மயக்கம் தெளிந்து, அந்தணன் தனது வழியே சென்றதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரந்தித்தேவனின் உடல் பசியாலும், தாகத்தாலும் நடுங்கியது. அப்பொழுது அவனுடைய குடும்பத்தார் தங்கள் பங்கில் ஒரு பகுதியை அவனுக்கு அளித்தனர். அதைக் கண்ட அவன் சாப்பிட முற்பட்ட பொழுது பட்டினியால் வாடும் ஒரு விவசாயி வந்தான். ரந்திதேவன் மகிழ்சியுடன் தனது பங்கை அவனுக்கு அளித்தான்.
அந்த நேரம், நான்கு நாய்களுடன் ஒரு வேடன் வந்தான். “ஐயா! இந்த வாயில்லா ஜீவன்களும், நானும் கடும் பசியால் துன்பப்படுகிறோம். தயவு செய்து எங்களுக்குக் கொஞ்சம் உணவளியுங்கள்” என்று வேண்டினான்.
ரந்திதேவனின் குடும்பத்தார் தங்கள் பங்காக வைத்திருந்த அத்தனை உணவையும், வேடனுக்கும் நாய்களுக்கும் அன்புடன் அளித்தனர். ரந்தி தேவனும் அவன் குடும்பத்தாரும் அந்த வேடனையும் நாய்களையும் அந்தப் பரமனாகவே கருதி, வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இந்த மூன்று பேரும் சென்ற பிறகு ஒரே ஒருவர் பருகுவதற்குப் போதுமான நீர் மட்டும் இருந்தது. அதை ரந்திதேவன் பருக முற்பட்டான்.
அப்பொழுது ஓர் புலையன் வந்து, “ஐயா! தாகத்தால் சாகும் தருவாயில் இருக்கும் எனக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள்” என்று இறைஞ்சினான். கருணையையே தன் இயல்பாகக் கொண்ட ரந்தித்தேவன் தன்னிடம் இருந்த தண்ணீரை உடனே அவனிடம் மிக்க மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.
“நான் கடவுளிடம் பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். பதினாறு பெரும் பேரும் வேண்டேன். ஏன் மோக்ஷத்தைக் கூட வேண்டேன். ஆனால் உடல் படைத்த ஜீவராசிகளுக்குப் பெரும் துன்பத்தைத் தருவது பசிப் பிணி. பசிப் பிணி நீங்கி உயிர்வாழ விழையும் ஒரு எளிய ஜீவனுக்கு ஜீவாதாரமான நீரையளிப்பதால் என்னுடைய பசி, தாகம், களைப்பு, தள்ளாமை, சோகம், இவை யாவும் நீங்கும் என உளமாற நம்புகிறேன். "எனது மக்களின் துயரங்கள் அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். 'பசியாலும், தாகத்தாலும் வாடும் ஒரு ஜீவராசிக்கு உணவும், நீரும் அளிக்கும் பாக்கியம் எனக்கு எப்பொழுதும் இருக்க வரமருள வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை" என்றார்.
அக்கணத்தில் மும்மூர்த்திகளும் ரந்தி தேவன் முன்பு தோன்றி, “மன்னா! நாங்கள் மூவர்தான் உன்னிடம் நால்வராக வந்தோம்” என்றனர். பற்றற்றான் பற்றினைப் பற்றி வாழ்ந்து வந்த ரந்திதேவனுக்குக் கடுமையான மாயை கணப்பொழுதில் மறைந்து போயிற்று.
எனவே அஹிம்சைக்கும் தியாகத்திற்கும் ஏசுநாதர் முதல் மனிதர் அல்ல. அந்த வரிசையில் ஏசுவும் உண்டு.
1 comment:
Very interesting story expressed in a way that I was dreaming the scenes in front of my eyes...If someone can take this as short video film and replace those time wasting stupid TV dramas, will be a better way to reach power and essence of Hinduism to those majority of TV addicts.
Congrats to the author for presenting these valuable informations...
Post a Comment