Friday, March 26, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் துடிப்பு மிக்க சகோதர சகோதரிகளே, இந்நாட்டின் இளம்பிராயத்தவர்களே! ஒன்றை மட்டும் நன்றக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்மீக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு மேலை நாட்டு லௌகீக நாகரீகத்தின் பின்னால் நீ செல்வாயானால் அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும். ஏனென்றால், நமது நாட்டின் முதுகெலும்பு முறிந்து, எந்த அடிப்படையின் மீது இந்நாட்டின் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதோ அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். மேலை நாட்டு நாகரீகத்தின் பின்னால் சென்றால் நாலா பக்கங்களிலும் அழிவைத்தான் நீ காண்பாய்.

இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.

இந்தியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சி பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய ஞாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத
காரணத்தால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள் தான் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம்.

இதே இந்தியாவில் தான், மிகவும் உயர்ந்த சுயநலமற்ற பயன்கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறோம். இதயம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நமது சதைப் பிண்டமாகிய உடலைத் தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்க்ளாக இருக்கிறோம்.

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எப்போது, பரந்த இதயம்படைத்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை மற்றும் அறியாமை ஆகிய நீர்ச்சூழலில் சிறிது சிறிதாக மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டின் கோடானு கோடு மக்களின் நல்வாழ்விற்காக வருந்தி முழு ஆற்றலையும் கொடுத்து உழைக்க முன்வருவார்களோ, அப்போது தான் இந்தியா விழித்தெழும்.

- சுவாமி விவேகானந்தர்


No comments: