Sunday, September 19, 2010

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வேப்பிலைக் கொடி கட்டுவது ஏன்?


எமது இக்கட்டுரை வேப்பிலைக் கொடியும், வேளாங்கன்னி மாதாவும்! என்ற தலைப்பில் தமிழ் ஹிந்துவில் வெளியானது. நண்பர்களுக்காக இங்கே மீள்பதிவு

அப்புசாமி: என்ன குப்பு, நியூஸ் பேப்பர சவச்சு தின்னுடுவ போலருக்கே! என்ன படிச்சன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லுப்பா..

குப்புசாமி: 'அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்' ங்கறது தான் இப்ப லேட்டஸ்ட் நியூஸ்! என்ன கொடும சரவணா!

அப்புசாமி: எதக் கொடுமைன்னு சொல்ற..

குப்புசாமி: பின்ன என்ன அப்பு! வெள்ளையனே வெளியேறுன்னு சொல்லி வெள்ளைகாரனை விரட்டறதுக்குன்னே உண்டான கட்சி தான் காங்கிரஸ். இன்னிக்கு அந்தக்கட்சிக்கு தலைவியா ஒரு வெள்ளைக்கார பெண்ணையே நியமிக்கிறாங்கன்னா இத விட கொடுமை வேற என்ன இருக்கு சொல்லு..?

அப்புசாமி: அது சரி தான்.. ஆனா அந்தம்மாக்கு மக்கள் ஓட்டு போடறத பாத்தா
மக்கள் அவங்கள ஏத்துக்கிட்டாங்கன்னு தானே தோனுது.

குப்புசாமி: இருக்கட்டும்பா. ஆனாலும் நூறு கோடி ஜனத்தொகை இருக்கற இந்தியால காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கும் யோக்கியதை 'ஒரு' இந்தியனுக்கு கூடவா இல்ல. ஏன் இப்படி வெள்ளைகாரங்க கால்ல விழுந்து கிடக்காங்கன்னு தெரியலையே!

காந்தி உயிரோட இருந்திருந்தா இந்த ஈனப்பொழப்புக்காடா நாங்க இந்தப்பாடுபட்டோம்ன்னு கண்ணீர் விட்டிருப்பாரு...

அப்புசாமி: சரி.. அந்தம்மா இந்தியால தானே வாழறாங்க,

குப்புசாமி: இந்தியால வாழ்ந்தா மட்டும் இந்தியராயிருவாங்களா என்ன? உடம்ப மட்டும் இந்தியால வெச்சிட்டு விசுவாசத்த வாட்டிகனுக்கு காமிச்சா எவன் தான் ஏத்துக்குவான்?

அப்புசாமி: எதவெச்சு அப்படி சொல்ற..

குப்புசாமி: நிறைய இருக்கு. உதாரணத்திற்கு தமிழ் ஹிந்து தளத்துல வெளியான
சோனியா காந்தியின் முகத்திரை: சில பழைய ரகசியங்கள்! என்ற இந்த கட்டுரைய படிச்சிப் பாரேன். அது மட்டுமா? இந்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்தியாவுல வாழ்ந்தாலும் சுமார் 16 வருஷமா இந்திய குடியுரிமையே வாங்காம இருந்திருக்காங்கன்னா அந்த இத்தாலி விசுவாசத்த என்னன்னு சொல்லுவ?

அப்புசாமி: யப்பா இவ்வளோ விஷயம் இருக்கா?

குப்புசாமி: பின்ன இல்லையா? இந்தம்மா இந்தியாவோட நிழல் பிரதமரானப்பரம் தான் கிறிஸ்தவ மத மாத்தம் வெள்ளைக்காரன் காலத்துல கூட இல்லாத அளவுக்கு தலைவிரிச்சு ஆடுது. அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்.

அப்புசாமி: ஆமாமாம், ப சிதம்பரம் கூட காவி தீவிரவாதம்ன்னு பேசி மக்களோட எரிச்சல சம்பாதிச்சிருக்காரே!

குப்புசாமி: பின்ன... அந்தம்மா கிட்ட இத்தாலிக்கான விசுவாசத்த வேற எப்படி காட்டுவாங்க. தெரியாம தான் கேக்கறேன்.. 'காவி' தீவிரவாதத்தின் சின்னம்ன்னு இவர் அடயாளப்படுத்த விரும்பினா தேசியக்கொடியில காவியிருக்கே அதையும் சேத்து தான் அவமதிக்கிறாரா?

அப்புசாமி: அதானே! சிதம்பரத்துக்கு அடிக்கடி வாய் வழியா பேதி போகுது. oral diariya. நல்ல டாக்டரா பாத்து வைத்தியம் பாக்கலைன்னா ஒடம்புக்கு ஆகாது. பாவம்.

குப்புசாமி: என்னைக்கும் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட பத்து வருஷமா இந்தியால இந்துக்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்படுதுன்னா காரணம் இது தான். மத மாற்றத்தை மார்கெட்டிங் கம்பெனி மாதிரி டார்கெட் வெச்சு நடத்தறாங்க, மல்டிலெவல் மார்கெட்டிங்க்கு ஆள் சேக்குற மாதிரி!. அரசாங்கங்களோட ஊக்கம் இல்லாம இதெல்லாம் நடக்காதுங்கறது எத்தனை அப்பவிங்களுக்குத் தெரியும்?

அப்புசாமி: அதான் விஷயமா.. என்னைக்கூட போனவாரம் ஒரு நண்பர் வேளாங்கன்னிக்கு வா..மாதாகோவில் விஷேசத்துல கலந்துக்க. உன் வேண்டுதல் எல்லாம் நடக்கும்ன்னான். நான் தான் போகலை.

குப்புசாமி: அப்பு.. பக்தியா கூப்படறவங்களும் இருக்காங்க. ஆள் பிடிக்க அலையறவங்களும் இருக்காங்க. உன்னைக் கூப்பிட்ட ஆளு எந்தரகமோ? இதுல விஷேசம் என்ன தெரியுமா? இந்த மாதா கோவில் விஷேசங்கள் எல்லாம் கூட அம்மன் கோவில் பண்டிகை போல தான் நடக்கும். பிரார்தனையா மொட்டை எல்லாம் போடறாங்கன்னா பாத்துகோ!

அப்புசாமி: அப்படியா?

குப்புசாமி: தெரியாதா? உதாரணத்துக்கு நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழான்னா கொயேற்றத்துடன் தொடங்கும். வேளாங்கன்னி கோவில்லயும் கொடியேத்துவாங்க.

அப்புசாமி: கொடின்னா கட்சிக்கொடி மாதிரி துணிக்கொடியா? அம்மன் கோவில் கொடின்னா வேப்பிலை கட்றத தானே சொல்லுவாங்க.

குப்புசாமி: அங்க தான் இந்து தர்மமும் நம்ம ஆன்மீகத்தின் தாத்பர்ய மகிமையும் நிக்குது அப்பு. வேளாங்கன்னி மாதா கோவில்ல கொடியேற்றம்ன்னு சொன்னா மாதா சின்னம் பொறிச்ச துணிய கொடியா ஏத்துவாங்க. ஆனா மாரியம்மன் கோவில் கொடின்னா வேப்பிலையை வரிசையா கயிற்றில கட்டி ஊர் முழுசும் கட்டுவாங்க. அதுக்கு அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கு. ஆனா துணிய கொடியா ஏத்துனா அதுல ஒரு விஷயமும் இல்ல.

அப்புசாமி: புரியும் படியா சொல்லேன்.

குப்புசாமி: அப்பு.. நம்ம பாரத நாடு மக்கள் கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக வாழ்ந்து வந்த பிரதேசம். இங்கே எல்லாமே இயற்கை தான். அறிவியல் மருத்துவம்ன்னு எல்லாத்தையுமே இயற்கையோடு ஒன்றாகவே கலந்து வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் கோவில்களும் திருவிழாக்களும். ஒரு கிராமத்தில அம்மன் கோவில் திருவிழான்னா எப்ப வரும்?

அப்புசாமி: வருஷத்துக்கு ஒருவாட்டி..

குப்புசாமி: எந்த மாசம்?

அப்புசாமி: ஆடி மாசம்.

குப்புசாமி: ஏன் ஆடி மாசத்துல கொண்டாடறாங்க:

அப்புசாமி: நீயே சொல்லேன்..

குப்புசாமி: 'மாரி' ன்னா மழைன்னு அர்த்தம். ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொல்வாங்க. விதை விதைச்சுட்டா போதுமா?. மழை வேனாமா? விவசாயிகளெல்லாம் பாடுபட்டு ஆடிப்பாடி விதை விதைச்சாலும் விதைச்ச நெல்லு அரிசியா கொட்டி அடுப்புல பொங்கனும்னா அந்த பருவத்துல மழை வந்தா தானே முடியும். அதனால மழை வரணும்னும் நல்ல விளைச்சல் கிடைக்கனும் னும் வேண்டிகிட்டு மழையைக் கொண்டு வரும் தேவதையாக அம்மனை வேண்டி 'மாரி' யைக் கொண்டுவா மாரி அம்மான்னு கும்பிடறாங்க. இந்த வேண்டுதலை ஒழுங்கா நிறைவேத்தினா, ஐப்பசி மாசம் அடை மழை பெய்யும். இப்படி பருவம் தப்பாம மழை பெஞ்சா நல்லா விளைச்சல் கிடைச்சு, நிறைய அறுவடை பண்ணி தை மாசம் பொங்கல் வெச்சு மழைகொடுத்த அம்மனுக்கு படையல் பண்ணி போடுவாங்க. இப்படி மழைகொடுக்கற தெய்வத்த 'பருவம் தப்பாம எங்கள காப்பாத்து தாயேன்னு' சொல்லி கும்பிடத்தான் சரியா ஆடி மாசம் விதை விதைக்கும் காலத்துல மாரியம்மனுக்கு விழா எடுத்து கும்பிடறாங்க.

அப்புசாமி: அடேங்கப்பா! மாரியம்மன் திருவிழால இவ்வளோ விஷயம் இருக்கா? சரி வேப்பிலை கொடி ஏன் கட்றாங்க?

குப்புசாமி: அங்க தான் நம்ம மக்கள் இயற்கை வைத்தியத்திலும் அறிவியல் நுண்ணறிவிலும் எவ்வளவு புத்திசாலியா இருந்திருக்காங்கன்னு தெரியுது. விளக்கமா சொல்றேன் கேளு!

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. பல வியாதிகளைப் போக்கும் அருமருந்து. வெளிநாட்டுக்காரணே வேப்பிலைக்கு பேட்டன்ட் உரிமை வாங்கி வெச்சு நம்மள அடிமையாக்கப் பாத்தான். ஆனா ஏற்கனவே இந்தியால வேப்பலை வெச்சு நம்ம ஆளுங்க நிறைய ஆராய்ச்சி பண்ணின ஆதாரம் இருந்ததால, அதக்காட்டி அந்த உரிமையை ரத்து பண்ண முடிஞ்சுதுன்னா பாரேன். அந்தளவு மருத்துவ குணமுள்ளது வேப்பிலைன்னு நம்முன்னோர்கள் தெரிஞ்சுதான் வெச்சிருக்காங்க.

பத்து நாள் திருவிழா துவங்கறதுக்கு முன்னாடியே ஊரெல்லாம் தமுக்கடிச்சு அம்மன் கோவில் விஷேசத்த அறிவிப்பாங்க. திருவிழா துவங்கும் நாளுக்கு முன்னாடி ஊரெல்லாம் வேப்பிலை கொடியைக் கட்டுவாங்க. வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயிற்றில சரம் மாதிரி கட்டி ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

அப்புசாமி: இதென்னப்பா கட்டுப்பாடு? பத்து நாளும் யாரும் வெளிய போகாம இருப்பாங்களா?

குப்புசாமி: கண்டிப்பா இருப்பாங்க அப்பு. ஏன்னா எல்லா கிராமத்திலேயுமே ஒரே காலத்துல இந்த திருவிழா நடக்கறதனால எல்லாரும் அவங்கவங்க ஊர்லயே தங்கிடுவாங்க. அப்படி வேற ஊர்ல மாட்டிக்கிட்டாலும் அந்த ஊரைவிட்டு திருவிழா முடியற வரைக்கும் வரமாட்டாங்க.

அப்புசாமி: அப்படியா? ஏன் இவ்வளோ கட்டுப்பாடு?

குப்புசாமி: காரணம் இருக்கு அப்பு! திருவிழான்னா மக்கள் எல்லோரும் ஒரே இடத்துல கூடுவாங்க இல்லயா? கூட்டம் கூடும்போது அங்கே தொற்றுக்கிருமிகள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு. திருவிழா சமயம் மக்கள் கூட்டமா கூடற எடத்துல ஊர்க்காரர் ஒருவர் வெளியெ போய் ஏதாவது தொற்று நோய் கிருமியோட ஊருக்குள்ள வந்திட்டா கூட்டத்தோட கலந்து அத்தனை பேருக்கும் ஒரேயடியா வியாதி வந்து மக்கள் எல்லாருமே நோய்வாய்ப்பட நேரும். அதே நேரம் வெளியூர்லருந்து ஒருத்தன் புதுசா வந்தாலும் அதே பயம் தான். அதனால தான் அம்மன் கோவிலுக்கு கொடியேத்திட்டா யாரும் ஊரைவிட்டு போகக்கூடாதுன்னும் ஊருக்குள்ள புதுசா யாரும் வரக்கூடாதுன்னும் உத்தரவு போடுவாங்க.

அப்படி நோய்க்கிருமி எதுவும் அண்டக்கூடாதுன்னும், கிறுமிகள் பரவுவத தடுக்கவும் தான் கூட்டமா மக்கள் கூடும் திருவிழா தினத்துக்கு முன்னாடியே ஊரெல்லாம் வேப்பலையால சுத்தி தொற்றுக்கிருமிகள் அண்டாம பாத்துக்கறாங்க.

அப்புசாமி: ஓகோ! நம்ம அரசியல் வாதிங்க மீட்டிங் போட்டா மாநகராட்சி சார்புல ரோடு சைடுல முழுசும் பிளீச்சிங் பவுடரோ குளோரிங் பவுடரோ எதோ ஒன்னு தூவுவாங்களே அது மாதிரியா?

குப்புசாமி: அப்புடீன்னு தான் வெச்சுக்கோயேன். இன்னும் கேளு.. திருவிழா துவங்கும் முன்னாடி எல்லாருடைய வீட்டுலயும் வேப்பிலையை வாசலில் தோரணமா கட்டுவாங்க. வீட்டுக்கு உள்ளேயும் சாமிபடத்தில் வேப்பிலை மாலைய போட்டு வைப்பாங்க. எல்லோருடைய வீட்டிலும் சாணத்தால் மெழுகி சுவர்களில் மஞ்சள் பூசி வைக்கப்பட்டிருக்கும். ஆக ஊர் தொடங்கி தெரு மற்றும் வீடு வரைக்கும் வேப்பிலை, பசுஞ்சானம், மஞ்சள் ன்னு மருந்துகளாலேயே நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டு பண்ணிடறாங்க. சுத்தத்துக்கான இத்தனை ஏற்பாடுகளை பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் திருவிழா தொடங்கும். மக்கள் விரதம் இருந்து கூட்டம் கூட்டமா கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து , தீ மிதித்து, கூழ் காய்ச்சி பிறருக்கும் கொடுத்து பிரார்தனைகளை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வீட்டுக்கு போவாங்க.

ஆக இன்னைக்கும் அம்மன் கோவில் திருவிழாக்கள்ல வேப்பிலை கொடியேத்தி இயற்கையின் துணை மாறாம நாம கொண்டாடறோம்.

இப்படி சுத்தத்தின் காரணமா வேப்பிலையைக் கட்டி கொடியேத்தறதுக்கு இருக்கற அர்த்தம் மாதாவோட சின்னத்த வெச்சு கட்சிக்கு கொடியேத்தற மாதிரி ஒரு துவைச்சுப்போட்ட துணியை கம்பத்துல கட்டி ஏத்தறதுல இருக்கான்னு நீயே சொல்லு.

அப்புசாமி: அம்மன் கோவில் திருவிழாக்கு கொடியேத்தறதுங்கற சம்பிரதாயத்துக்கு இத்தனை அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கான்னு இப்ப தான் தெரியுது குப்பு!

குப்புசாமி: பின்ன, இந்து தர்மம்ங்கறது வெறும் அடையாள மதமா என்ன?
அது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்த ஒரு வாழும் தர்மம்..! சரிதானே! இந்து தர்மத்தின் தத்துவங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள உள்ளர்த்தங்களை தெளிவா புரிஞ்சிக்கிட்டா இதை அப்படியே காப்பியடிச்சு வேற ரூபத்தில எத்தனை மதம் வந்தாலும் இந்து தர்மத்திற்கு நிகராக அதனால நிற்க கூட முடியாது. அதனால தான் இதை ஸநாதன தர்மம்னு சொல்றோம். அதாவது நிரந்தரமான தர்மம்.

அப்புசாமி: எல்லாம் சரிதான்... ஆனா திருவிழாவோட கடைசி நாள்ல இளசுகள்ளாம் ஒருத்தர் மேல ஒருத்தர் மஞ்சத்தன்னி ஊத்தி விளையாடுவாங்களே அதைப்பத்தி சொல்லாம முடிக்கிறியே..!

குப்புசாமி: அதுக்கும் அர்த்தம் இருக்கு. மஞ்சள் நோய்க்கிருமிகளை விரட்டும் மருத்துவ தன்மை கொண்டது. உதாரணமா எல்லோரும் மஞ்சளால் செய்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம் தானே..

அப்புசாமி: ஆமாம். அது ஏன்?

குப்புசாமி: நெற்றியின் மஞ்சள் மேல படும் காத்து நம் முகத்தை சுத்தியே இருக்கும். அதனால நாசித்துவாரம் வரை ஒரு பாதுகாப்பு வளையம் போல துர் கிருமிகளை மஞ்சளின் சக்தி அண்டவிடாது. நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காத்தை நாம் சுவாசிக்க அது உதவும். அந்தளவுக்கு சக்தி உள்ள மருத்துவ குணம் கொண்டது மஞ்சள்.

கூட்டமான இடத்துக்கு வந்து மக்கள் கலைஞ்சு போகும் போது யாருக்காவது அவங்களுக்கே தெரியாம ஏதாவது நோய் தொற்று இருந்து அது மத்தவங்க வீட்டு வரைக்கும் பரவிடக்கூடாதே! அதனால திருவிழா முடிஞ்சி திரும்பி போகும் நாள்ல எல்லோர் கால்கள்லேயும் மஞ்சள் தண்ணிய ஊற்றி உடல் மேலும் மஞ்சள் தண்ணீரை தெளிச்சி நோயில்லாம வீட்டுக்குப் போங்கன்னு அனுப்பி
வைப்பாங்க.

இதுக்காக அவரவர் வீட்டிலிருந்து தங்கள் பங்குக்கு எல்லோரும் மஞ்சள் கரைத்து
வருவோர் போவோர் மீது தெளிக்கும் போது, சிலர் கோபப்படலாம். அதனால அவரவர்க்கு முறையுள்ளவர்கள் மீது மட்டும் மஞ்சள் தண்ணீர் தெளியுங்கள் ன்னும், தேவையில்லாமல் யாருடைய கோபத்திற்கும் ஆளாகிவிட வேண்டாம்ன்னு சொல்லி ஆரம்பிச்சதை, முறைப்பையன் முறைப்பெண் மீது தெளிக்கனும், முறைப்பெண் முறைப்பையன் மீது மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு காலப்போக்கில மாத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால் மஞ்சத்தண்ணி ஊத்தறது விளையாட்டு நிகழ்சி மாதிரி ஆகிப்போச்சு! இப்போ புரியுதா, மாரியம்மண் கோவில் திருவிழான்னா என்னான்னு?

அப்புசாமி: குப்பு! இவ்வளவு அர்த்தமுள்ள பண்டிகையைப் பத்தி தெரிஞ்சுக்காம கூட்டத்துல நிக்கறதுக்கு சங்கடப்பட்டே நான் இவ்வளோ நாளா அம்மன் கோவில் திருவிழால கலந்துக்காம போய்ட்டேனே! அடுத்த மாரியம்மன் திருவிழால வேப்பிலை கொடி கட்டுற வேலைய நானே செய்யப்போறேன். சரி...நேரமாயிடிச்சு, போற வழியில ஆத்தாவ வேண்டிக்கிட்டே வீடு போய்ச்சேர்றேன்.

அப்புசாமி இடத்தை காலி செய்ய, குப்புசாமி பெருமூச்சுடனும் சிறு முணுமுணுப்புடனும் திண்ணையில் சாய்ந்தார் ...

“இந்து தர்மம் என்பதே மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்தது தானே!”