Sunday, December 18, 2011

லாகவ கௌரவ நியாயம்!



வராஹமிஹிரர் "பிருஹத் ஸம்ஹிதை" என்று ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார். அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே, விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரனத்தை நியூட்டன் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற சுலோகமே, பூமி விழாமல் இருப்பதர்கு ஆகர்ஷன சக்தி தான் காரணம் என்று கூறுகிறது. பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ஷண சக்தி என்றால் ஈர்க்கும் சக்தி என்று பொருள். ஒரு வஸ்துவை மேலே வீசிப் போட்டால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அந்தப் பொருளினுடைய ஸ்வபாவகுனம் அல்ல. அது பூமியில் ஈர்ப்பு சக்தியே அதற்கு காரணம். ப்ராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர்.

ப்ரச்நோபநிஷத்தில் 'பூமியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது' என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளைப் பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி மேலே போகிற ப்ராணனை அபானம் கீழே இழுக்கிறது. இந்த இருவகை ஈர்ப்பு மனித உடலில் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் உடல் இயங்குகிறது என்கிறார்.

இவ்வாறு உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுகிறது. இவைகளைப் போல பல அருமையான விஷயங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன. அவைகள் பற்றி நமக்குத் தெரியாததால் தேசாந்திரத்தில் இருக்கின்றவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

'பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால் தான் இரவு பகல் உண்டாகியிருக்கின்றன' என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி மூலம் சொன்னால் அவரை மதகுருமார்கள் நெருப்பிலே போட்டுக் கொளுத்தினார்கள். ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது, சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்ற விளக்கத்திற்கு, ஆர்யபட்டர் ரொம்ப அழகாக 'லாகவ-கௌரவ நியாயம்' என்று பேர் வைத்திருக்கிறார். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். அதற்கு அட்ஜெக்டிவ் 'லாகவம்'. சின்னதைக் குறித்த 'லாகவம்', லேசாக', 'லைட்டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் 'கைலாகவம்', 'ஹஸ்த லாகவம்' என்கிறோம்.

'லகு' வுக்கு எதிர்ப்ப்பதம் 'குரு'. கனமானது. பெரியது எதுவோ அதுவே 'குரு'. கனவான் என்று ஆச்சாரியாரை அழைக்கிறோம். குருவாக இருக்கும் ஆச்சாரியாரை லகுவான சிஷ்யர்கள் சுற்றுவது தானே நியாயம். நம் பிரபஞ்சத்தில் குருவானது சூரியன் தான். லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே லாகவ கௌரவ நியாயம். இதன் படி பூமிதான் சூரியனைச் சுற்ற வேண்டும். இப்படி ப்ரபஞ்சத்தை குரு சிஷ்ய கிரமமாகப் பார்த்து, சாஸ்திரமாகவும் ஸயின்ஸாகவும் ஆர்யபட்டர் சொல்லியிருக்கிறார்.

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: