வாழ்க்கையில் எல்லாமே மாயை என்று ஞானம் பெற்ற பெரியோர்கள் சொல்வதுண்டு. மனிதனால் உணரப்படக் கூடிய எந்த ஒரு உணர்ச்சியையும் அவன் முழுமையாக புரிந்து கொள்வதே கிடையாது. உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதன் மீது பிரயாணிக்கிறவர்களே ஞானியாக அறியப்படுகிறாகள்.
ஆனால் நம்மைப் போன்றவர்களிடம் நடப்பது என்ன? இன்பம், துன்பம், சுகம், துக்கம், ஆசை, நிராசை, அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவித உணர்வுகளும் நமக்குளே புகுந்து நம் வழியாக அவை பிரயாணப்படுகின்றன. ஆதலால் நாம் மானுடர்களாகவே இருக்க நேர்கிறது.
ஒரு புராணக் கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு முறை மகாராஜா தர்மர் உலகம் போற்றும் வகையில் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு பொன்னும் பொருளுமாக தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தான்! அவன் பிறருக்கு தானங்களை வழங்கிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தன. அப்போது ஒரு கீரிப் பிள்ளை அங்கே ஓடி வந்தது. அந்த கீரிப் பிள்ளையின் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னிக்கொண்டிருந்தது. அந்த கீரிப் பிள்ளை கீழே விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் இடமும் வலமுமாகப் புரண்டது.
அதைப் பார்தது வியந்த தர்மர், “உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டார்.
அதற்க்கு அந்தக் கீரி சொன்னது, “நான் காட்டில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்!
அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர். அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர் தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தன் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார் . அப்படியே அவரின் மகனும், மருமகளும் குடுத்து விட்டனர்.
அந்த விருந்தினர் பசி தீர்ந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார். அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால் இறந்து விட்டனர்!
நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிய சமயம், அந்த விருந்தினர் உண்ணும் போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒருபுறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை” என்று கூறி சென்று விட்டது!
இந்தக்கதையின் மூலம் கூறப்படும் செய்தி என்ன? தங்கமும் வைரமும் தானம் செய்த தர்மராஜரை விட, தான் பசித்திருக்கும் போதும் யாசகம் கேட்டு வந்த விருந்தினருக்கு தான் உண்ண வேண்டிய உணவை தானம் செய்து மடிந்த அந்த ஏழை அந்தணரின் தானமே சிறந்தது என்று இந்தக் கதை மூலம் எடுத்துக் கூறப்படுகிறது. தியாகத்தின் உயர்வு சொல்லப்ப்ட்டிருக்கிறது.
தான் நிறைய தர்மம் செய்கிறேன் என்றென்னியபடி தானங்கள் செய்து கொண்டிருந்த தர்மருக்கு உண்மையான தானத்தை இந்த கீரிப்பிள்ளை புரிய வைத்தது.
இங்கே தான் உணர்வுகளின் சூட்சமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழை அந்தணர் தான் தர்மவான் என்று நினைத்து அதனால் தானம் செய்யவில்லை. அவர் பசித்தவருக்கு தானம் செய்வதை தனது கடமை என எண்ணி அவ்வாறே அதைச் செய்து, அவரது குடும்பத்தாரும் அவரைத் தொடர அனைவரும் மடிந்தார்கள்.
ஆனால் தர்மரோ சிறந்த தர்மவான் என்று ஏற்கனவே புகழப்பட்டவர். அவர் தான் தர்மவான் என்பதை உணர்ந்தே தானம் செய்யலானார். அதனால் அவரது புகழ் கூடலாம். அவற்றால் மற்றவருக்கு நல்வாழ்க்கையும் கிடைக்கலாம். ஆனால் அதிலே மமதை உண்டானது. அந்த மமதை கீரிப்பிள்ளையின் செயலால் தகர்ந்து போனது. தர்மவான் என்ற மாயை விலகியது.
நாம் நல்லவர்களாக வாழவேண்டும். ஆனால் நான் நல்லவன் என்ற நினைப்பிலேயே வாழக்கூடாது. அது ஒரு உணர்வுச்சிறைக்குள் நம்மைத் தள்ளிவிடும். நாம் தர்மவானாகவே வாழவேண்டும். ஆனால் நான் தர்மவான் என்ற நினைப்பிலே வாழக்கூடாது. அது கர்வத்தை கொடுத்துவிடும்.
இப்படித்தான் நட்பு, பாசம், திறமை என எல்லாவற்றிலும் நம்மை சிறப்படுத்தும் மாய உணர்வு தொடர்ந்து வரும்.
இந்த உணர்ச்சியின் மாயையை ஒரு நடைமுறை விளக்கத்துடன் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு அலுவலகத்தில் நாம் வேலை பார்க்கிறோம். நாம் நன்றாக வேலை செய்வதாக தப்பித்தவறி மேலதிகாரி சொல்லிவிட்டால், பாராட்டிவிட்டால்
அதில் நாம் மகிழ்ந்து விடுகிறோம். மயங்கி விடுகிறோம். இன்னும் நன்றாக வேலை செய்யவேண்டும். இன்னும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று தொடர்ந்து முயல்கிறோம். நல்லது தான். ஆனால் அந்த தொடர் முயற்சி நம்மையறியாமல் நம்மை ஒரு உணர்வுச்சிறைக்குள் தள்ளி விடுகிறது.
அதை விட்டு வெளியேற மறுக்கிறோம். வீட்டுக்குக் கூட போவதை தவிர்க்கிறோம் தள்ளிப்போடுகிறோம். இன்னும் நற்பெயர் அதன் பலனாக நல்ல சம்பளம் என்று எதிர்பார்ப்பு வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம் சுயத்தை இழக்கத் துவங்குகிறோம். சிரிக்க மறக்கிறோம். பேச மறக்கிறோம். மகிழ்ந்து விளையாடும் குழந்தை மனதைத் தொலைக்கிறோம். எல்லாம் தொலைந்த பின் தூங்கி விழிக்கிறோம். அப்போது நம் குடும்ப மகிழ்ச்சி என்ற அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கும். நண்பர்கள் தொலைந்து போயிருப்பார்கள். உறவுகள் மறந்து போயிருப்பார்கள். சிலர் கண்காணாமல் மறைந்தும் போயிருப்பார்கள். காலம் நம்மைக் கடந்து போயிருக்கும். வாழ்க்கையின் பாதி தொலைந்து போயிருக்கும்.
இத்தனைக்கும் காரணம் என்ன என்று அடிப்படையை ஆராயத்துவங்கினால் 'இவன் நல்ல வேலைக்காரன்' என்று நமக்குக் கிடைத்த புகழ்ச்சியே காரணமாயிருந்திருக்கும்.
இந்த கஷ்டம் ஏன் வந்தது. நாம் இயல்பாகவே நல்ல வேலைக்காரனாக இருப்பதில் தவறில்லை. ஆனால் நான் நல்ல வேலைக்காரன் என்று நினைத்துக் கொண்டே வேலை செய்தது நம்மையறியாமலே ஒரு கர்வத்தை உண்டாக்கி அதிலிருந்து மீளமுடியாத சூழலை நமக்கு கொடுத்து விடுகிறது.
ஆக நாம் என்னவாக வாழ்கிறோம் என்பது மாயை இல்லை. நாம் என்ன மாதிரியாக அதை உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே மாயரூபமாகிறது.
நாம் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் உணர்வுகள் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என்று கொஞ்சம் சிந்திக்கக் கற்றுக்கொண்டு வாழத்துவங்கினால் மாயா லோகத்திலிருந்து மீண்டு நிரந்தர உலகத்தை அடையும் வழியை கற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு கற்றுக் கொண்டவர்களே ஞானிகள் என்றழைக்கப் படுகிறார்கள். நாமும் ஞானிகளாகலாம். முயற்சிப்போம்.
எனவே தர்மவானாகிலும் கர்வம் கொள்ளாதீர்!
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.