Thursday, January 21, 2010

விக்கிரமாதித்தன் கதைகள் - 12


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

ஒரு காலத்தில் அரசர் ஒருவருக்கு மூன்று அழகிய ராணிகள் இருந்தனர்.

ஒரு நாள் மன்னரும் முதல் ராணியும் அரண்மனைப் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

மலர்களின் வாசனையும் அருமையான தென்றல் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. மன்னரும் ராணியும் அதை ரசித்து அமர்ந்து கொண்டிருந்தனர். அந்த சமயம் மெல்லிய தென்றல் காற்றால் ஆடிய ஒரு பூச்செடியிலிருந்து மிக மெலிதான ஒரு அழகிய மலர் ராணியின் கையின் மீது விழுந்தது.

மிக மெலிதான அழகிய பூவாகினும், அது விழுந்ததால் வலி உண்டாகி ராணி துடிக்கத் தொடங்கினாள். "ஐயோ! என் கை வலிக்கிறதே. என்னால் தாங்க முடியவில்லையே!" என்று துடிக்கத் துவங்கினாள். இதைப் பார்த்த மன்னர் பயந்து போனார்.

அவர் ராணியின் கைகளைப் பார்த்தார். மெல்லிய பூ விழுந்த இடம் மிகவும் சிகப்பாக சிவந்து போய் இருந்தது. ஒரு மலர் விழுந்ததால் கை சிவந்து போகுமா என்று குழம்பிப்போன மன்னர் ராணியை அரைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்.

பிறிதொரு நாள் மன்னர் தனது இரண்டாவது மனைவியுடன் ஜன்னலோரமாக காற்றாட அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஜன்னலின் திரைச்சீலை விலகியது. உடனே ராணி திடீரென சப்தமிடத் துவங்கினாள். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. ராணியோ "அய்யோ! என்னால் தாங்க முடியவில்லை. இந்த நிலவின் ஒளி என்னைச் சுட்டு எரிக்கிறது" என்றாள். மன்னர் திகைத்துப் போனார்.

"என்ன நிலவின் ஒளி சுடுகிறதா?" என்றார்.

ராணியின் முகம் முழுவதும் நிலவின் ஒளிபட்டு கொப்பளங்கள் உண்டாகிப் போனது. மன்னர் திகைப்புடன் ராணியை தனது அரைக்கு அழைத்துப் போய் அமரச்செய்து ஓய்வெடுக்கச் செய்தார்.

மற்றொரு நாள் தனது மூன்றாவது மனைவியுடன் அரண்மனை முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராணிக்கு எங்கோ தூரத்தில் யாரோ அரிசியை உரலில் போட்டு உலக்கையால் இடிக்கும் ஓசை கேட்டது. திடீரென்று ராணி அலறத்துவங்கினாள் "ஐயோ, நிறுத்துங்கள். என்னால் இந்த சத்தத்தைக் கேட்க முடியவில்லை. தயவு செய்து யாராவது நிறுத்தச் சொல்லுங்கள். என் தலை இந்த சப்தத்தால் வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று கூறிக்கொண்டே மயங்கி விழுந்து விட்டாள். அவளது கைகளும் முகமும் வேதனை தாங்காமல் சிவந்து விட்டது.

மன்னர் ராணியை பத்திரமாக அவளது அரையில் உறங்கச் செய்தான்.

இதோடு கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமாதிதனைப் பார்த்து கேள்வி கேட்டது.

"விக்கிரமாதித்தா! இப்போது சொல். இந்த மூன்று ராணிகளில் யார் மிகவும் மென்மையானவள்?"

"மூன்றாவது ராணி தான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

"ஆம். மலர் மற்றும் நிலவின் ஒளி போன்றவை முதல் இரண்டு ராணியின் உடலையும் தீண்டுவதாக இருந்தது. ஆனால் உடலைத் தீண்டாத சப்தம் கேட்டதற்கே மூன்றாவது ராணியின் உடல் சிவந்து போனது. எனவே மூன்றாவது ராணிதான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் போகிறேன்" என்று கூறி மீண்டும் முருங்கை மரத்தை நோக்கிப் பறந்து போனது.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

No comments: