Sunday, January 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 5



_________________________________________________________________________________________
நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா".

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.
________________________________________________________________________________________


தன்னை இன்னும் சிறிது நேரத்தில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போகிறான் அந்தச் சிறுவன் என்று தெரியாமலே நசிகேதனை வரவேற்கச் செல்கிறான் எமன்!.

வாயிலைக் கடந்த எமன் அங்கே சிறுவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். நசிகேதனிடம் அன்புடன் பேசலானான்.

"தூயவனே, விருந்தாளியாக என் இருப்பிடத்தை வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை உடனே வரவேற்க்க முடியாத நிலையில், நீ உணவின்றி என் இடத்தில் மூன்று இரவுகள் வசிக்க நேர்ந்தது. பசியால் உடல் வாடி இருக்க நேர்ந்தது. பாலகனே! உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

பொதுவாக எமன் என்றால் உயிரை எடுப்பவன் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் எமன் தர்மவான் ஆவதும் சிறந்த மான்புகளால் மட்டுமே என்பது இங்கே தெளிவாகிறது. அதனால் தான் 'எமதர்மன்' என்று அழைக்கிறோம். விருந்தினரை உபசரிக்கும் மாண்பு எமதர்மனாக இருந்தாலும் மீறப்படக்கூடாது என்பது இங்கே அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்..

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

என்றார் வள்ளுவர். அதாவது அனிச்ச மலர் மோந்து பார்த்தாலே வாடிவிடுமாம். அதுபோல நம் முகம் மாறுபட்டு நோக்கினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடுவார்கள் என்கிறார் வள்ளுவர் பெருந்தகையார்.

அப்படி உள்ளம் வாடியவனாக நசிகேதன் நின்று விடக்கூடாது என்ற பதற்றத்திலேயே எமதர்மனும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்க முன்வருகிறான்.

எனவே உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

இதனால் உளம் மகிழ்ந்த நசிகேதன் எமதர்மனிடம் வரங்கள் கேட்க துவங்கினான். பொதுவாக எமலோகம் செல்பவர்கள் யாராக இருப்பார்கள்? இறந்தவர்கள் மட்டும் தான் எமலோகம் செல்ல முடியும். ஆனால் நசிகேதனோ தந்தையின் கட்டளைக்கினங்கியே எமதர்மனிடம் செல்கிறான்.

இறந்து மேலுலகம் செல்பவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவரே ஆனால் அவரை ஆவியாக வந்திருப்பவர் அதாவது துர் தேவதையாகவே கருதுவர். அதனால் நசிகேதன் தனது முதல் வரத்தை அது குறித்து கேட்க முடிவு செய்தான்.

"எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தை புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒதுக்கத்தக்கவன் அல்ல என்றும் துர் ஆத்மா என்றும் நினையாமல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நான் அவரிடம் திரும்பிச் செல்லும் போது என் தந்தை என் மீது கோபம் இல்லாதவராகவும், தவறுகள் களைந்து தெளிந்த மனதுடையவராகவும் இருக்க வேண்டும். எனது தந்தையைப் பற்றிய இந்த கோரிக்கையை எனது முதல் வரமாக ஏற்றுக் கொள்வாயாக" என்று எமனிடம் தனது முதல் வரத்தைக் கேட்டான் நசிகேதன்.

இதனை ஏற்றுக் கொள்கிறான் எமதர்மன். "ஏ பாலகா! உன் விருப்பப் படியே உனது தந்தை உன்னைக் காணும்போது உன்னைப் புரிந்து கொள்வார். கோபங்கள் இல்லாமல் உன்னை அன்புடன் ஏற்றுக்கொள்வார். எனது அருளால் இரவில் சுகமாக உறங்குவார். உன் விருப்பப்படியே அவை நடந்தேறும்" என்றான்.

நசிகேதன் தனது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்!" என்றான்.

நசிகேதன் எமதர்மனை சங்கடத்தில் ஆழ்த்தப்போகிற வரத்தை இப்போது கேட்கலானான்.

"மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மரணத்திற்கு அப்பால் நடப்பது என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள். இதை எனது மூன்றாவது வரமாக கேட்கிறேன்" என்றான் நசிகேதன்.

சற்றே துனுக்குற்ற எமதர்மன் நசிகேதனை உற்றுப் பார்த்தான். திகைப்பில் பதில் சொல்ல சற்று தாமதித்தான். பின் நசிகேதனிடம் எடுத்துச் சொன்னான் "நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது. இது முகவும் நுண்மையான விஷயம். எளிதாகப் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டு விடு. நீ பாலகன், எனவே வேறு வரம் ஏதாவது கேள் தருகிறேன்! " என்றான்.

"ஓ, தேவர்களுக்கும் இந்த விஷயம் பற்றி சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். அப்படியென்றால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் நசிகேதன்.

"ஓ பாலகா, புரிந்துகொள். பல நூறாண்டு ஆயுளைக் கேள் தருகிறேன். நூற்றாண்டு காலம் வாழும் மகன்கள் பேரண்களைக் கேள் தருகிறேன். ஏராளமான பொன்னும் பொருளும் கேள் தருகிறேன். ஆயிரக்கணக்கான பசுக்கள், யானை, குதிரைகள் போன்றவற்றைக் கேள் தருகிறேன். பூமியில் பரந்த அரசைக் கேள் தருகிறேன். நீ விரும்பும் வரை மரணம் உன்னைத் தழுவாது என்றும் வரம் கொடுக்கிறேன், ஏற்றுக்கொள். இதை மட்டும் கேட்காதே" என்றான் எமதர்மன்.

ஆனால் நசிகேதன் தனது நிலையில் உறுதியாக இருந்தான். "வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் மீண்டும்.

அகண்ட தேகமும், மிகப் பெரிய உருவமும், முகத்தை மறைக்கும் மீசையும் சிவந்த கண்களும் கொண்ட எமன் நசிகேதனின் பிடிவாதமான இந்த நிலையை கண்டு திகைப்படைந்தான். நசிகேதனை அமைதியாக உற்றுப் பார்த்தான்...

(நாமும் பார்த்திருப்போம்...பொருங்கள்..)



மரணத்திற்கு அப்பால் - 6

No comments: