ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஒழுக்கமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில் ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.
சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.
ந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.
பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும்.
தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும்.
எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
4 comments:
வெகு நாட்களாக தேடிக்கொண்டுருந்த விசயங்கள். உங்களுக்கு நன்றி.
நன்றி ஜோதிஜி. அடிக்கடி வாங்க. நிறைய பகிர்ந்துப்போம்.
அன்புடன்
ராம்
ரொம்ப நல்ல பதிவு ...
மதங்கலுக்கு அப்பார் பட்ட பதிவு...
கிருபானத்த வாரியாரின் ஆடியோ தொகுப்பு இருந்தால் போடுங்கள்....
thanks malar. i vil try.
Post a Comment