Thursday, May 26, 2011

கடவுள் என்கிற சிசிடிவி! - 2





கடவுள் நம் செயல்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மிடையே ஆழமாக உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் கிராமங்களில் காவல் தெய்வங்களை மக்கள் வழிபடுகிறார்கள். எல்லைச்சாமி என்றும் அழைக்கிறார்கள். ஊர் எல்லையில் கடவுளரை நிறுத்தி அவர்கள் தங்களை காவல் காப்பார்கள் என்றும் தீயசக்திகளை கிராமத்திற்குள் விடாமல் காக்கிறார்கள் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.


மேலும் கிராமத்திற்குள் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, தவறான காரியங்கள் செய்தாலோ எல்லைச்சாமியோ, காவல் தெய்வங்களோ அவர்களை கண்டிப்பாக தண்டிக்கும் என்றும் நம்புவார்கள்.


பலர் கடவுள் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கும், நம்மை தண்டித்துவிடும் என்கிற பயத்திலேயே தவறு செய்ய நேரும் சூழ்நிலைகளைக் கூட தவிர்ப்பார்கள். இந்த நம்பிக்கை பலரையும் நல்வழிப்படுத்தியே வைத்திருப்பதை நாம் சர்வசாதாரணமாகப் பார்த்திருப்போம்.


சாமானிய மனிதர்களிடமிருந்து பல நேரங்களில் இது போன்ற வசனத்தைக் கேட்க முடியும் "உங்க காசு எனக்கெதுக்கு? அநியாயமா உங்காசு அஞ்சு ரூபாய்க்கு ஆசைப்பட்டா... ஆண்டவன் எனக்கு ஐநூறு ரூபாய்க்கு செலவு வெப்பான் சாமி.' என்பார்கள்.


ஆக ஒருவனிடமிருந்து அநியாயமாகப் பிடுங்கித் தின்றால் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பான். நமக்கு அதைவிட அதிக மடங்கு தண்டனை கொடுப்பான் என்கிற நம்பிக்கை இன்னும் சாமானியர்களிடம் இருப்பதைக் காண்கிறோம். (சாமானியர்களிடம் மட்டும்தான் காண்கிறோம் என்பது வேறு விஷயம்)


இவையெல்லாம் வெறும் நம்பிக்கை தானா அல்லது நிஜமா என்றால் நிஜமாக இருக்கும் நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும். அது எப்படி, கண்ணுக்குத் தெரியாத கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்பதை நம்புவதே பெரிய விஷயம். பின் அவற்றைக் குறித்து வைத்து தண்டிக்கிறார் என்றால் அதை விட பெரிய விஷயமாக அல்லவா இருக்கிறது என்று தோன்றக்கூடும்.


ஆனால் அங்கே தான் நம் முன்னோர்களின் மனோவியல் பற்றிய நுண்ணறிவு வெளிப்படுகிறது.


முதலில் கடவுள் பார்க்கிறார் என்ற பதம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.


ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அங்கே சரியாக வேலை செய்யாமல் பேசிக்கொண்டும், இருப்பிடத்தில் இல்லாமலும் இருக்கும் பணியாளர்களை கட்டுப்படுத்த நிர்வாகம் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்துகிறது. இதனால் பணியாளர்களுக்கு நம்முடைய நடவடிக்கைகள் நிர்வாகத்தினரால் கவனிக்கப்படுகிறது என்கிற அச்சம் உண்டாகிறது.


அதனால் வேலை நேரத்தில் வேறு தவறான காரியங்களில் ஈடுபடாமல் இருக்கையில் அமர்ந்து சரியாக வேலையைச் செய்வார்கள். காரணம் பணியாளர்களின் உள்ளுணர்வில் நாம் கவனிக்கப்படுகிறோம் என்கிற எண்ணம் முதலில் பதியச்செய்யப்படுகிறது. பிற்பாடு கேமிராக்கள் வேலை செய்யாவிட்டாலும் உள்ளுணர்வில் பதியப்பட்ட அந்த அச்சம் நிரந்தரப் பதிவாகி விடுவதால் எப்போதுமே தவறிழைக்கும் சூழ்நிலையைத் தாமே களைந்து விடுவார்கள்.


மனிதர்களின் செயல்பாடுகளும் இவ்வாறே கட்டுப்படுத்தப்பட்டன. 'கடவுள்' என்கிற கேமிரா உன்னை பார்த்துக்கொண்டே இருக்கிறது என்று கூறி அதனை ஆழ்மனதில் பதியச் செய்தார்கள் நம் முன்னோர்கள். இதனால் மனிதர்கள் தவறு செய்யும்படியான சூழ்நிலைகளைக் கூட கடவுள் பார்க்கிறார் என்ற ஆழ்மனப் பதிவின் காரணமாக தவிர்த்துவிடுவார்கள்.


மோசமான காரியங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டும் அவர்களை தட்டிக் கேட்க முடியாதவர்கள் கூறும் கூற்றும் இதுதான். 'எல்லாத்தையும் அவன் பாத்துக்கிட்டு தான் இருக்கான். இவன் செய்யிற பாவத்துக்கு தண்டனையையும் அவனே ஒருநாள் கொடுப்பான்' என்று கூறக்கேட்கிறோம்.


ஆக கடவுள் பார்க்கிறார் என்கிற ஆழ்மனப் பதிவு மனிதர்கள் தவறிழைக்கும் சூழ்நிலையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. கடவுள் என்கிற சிசிடிவி வேலை செய்கிறது.


அது சரி, கடவுள் தவறிழைத்தவர்களை தண்டிப்பது எப்படி


பார்ப்போம்..


.

No comments: