Saturday, May 21, 2011

கைது நாடகம்? - பூமித்தாய் பொறுமை இழப்பாள்திகார் ஜெயிலில் ரூம் நம்பர் 6 ல் கனிமொழி அடைக்கப்பட்டாராம். அவர் கூடவே சுற்றிக்கொண்டிருந்த பாதிரியாரையும் கைது செய்து 9 ம் நம்பர் ரூமில் அடைக்க வேண்டும். 100 கோடி மக்களை ஏமாற்றிவிட்டு திமிரோடு வாழ்ந்து விட முடியும் என்கிற எண்ணத்தை எந்த அரசியல் வாதிகளும் கொள்ளக் கூடாது என்பது சாமானியர்களின் விருப்பம்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் கூட்டுக்களவானிகளின் கண்துடைப்பு வேலையாக இது இல்லாமல் அனைத்து குற்றவாளிகளும் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட வேண்டும். முக்கியமாக அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை இதே வேகத்தில் மக்கள் தோற்கடித்தால் திமுக காப்பாற்ற உதவியின்றி தண்டிக்கப்படும்.

காங்கிரஸ் ஊழல்களும் வெளிவரும்.

கீழே உள்ள படங்கள் உங்களுக்கு பரிச்சயமுள்ளதாக இருக்கலாம்!


கொஞ்சம் பால் இருந்தால் இக்குழந்தை பிழைத்துக் கொள்ளும்!நாக்கு வெளியே தள்ள உணவிற்கு ஏங்கும் சிறுவன்!

தனக்குணவில்லாமல் பெற்ற குழந்தைக்கும் ஊட்ட முடியாமல் தவிக்கும் தாய்!

பை நிறைய ஏதோ கொண்டு போகும் இவர் நமக்கும் கொஞ்சம் தரமாட்டாரா என ஏங்கிப் பார்க்கும் சிறுவன்?

பசி மயக்கத்திற்கும் சாவிற்கும் தூரமில்லா நிலை! 


ஊழல் பண்ணிட்டு அவங்க வெளிநாடு போய்ட்டாங்க, எங்க நிலைமை பாத்தீங்களா?


மேலே கண்ட படங்களை இதற்கு முன்பே பலர் பார்த்திருக்கக் கூடும். ஏறக்குறைய 15 வருடங்கள் முன்பு சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் மக்கள் உண்ண உணவின்றி வறுமையில் வாடி பசிக்கொடுமையால் மடிந்து போன மக்கள் கூட்டம் பற்றிய படங்கள் இவை.

இவையெல்லாம் வெறும் இயற்கையின் சதியால் மட்டும் நடந்து விடவில்லை. அந்தந்த நாட்டின் சர்வாதிகாரிகள் முடிந்தவரை மக்களைச் சுரண்டி எதிர்ப்பவர்களைக் கொன்று போட்டு பின் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்ட சுயநல ஆட்சியாளகளால் மக்கள் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாரற்று பட்டினியால் செத்தனர் என்பது வரலாறு!

நாட்டை முன்னேற்றி வளங்களை அதிகப்படுத்தி, மக்களைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் சுயநலமாக அதிகாரத்தில் இருந்துவிட்டுப் போன கயவர்களால் உண்டான நிலை இப்படிப் பல நாடுகளில் நடந்திருக்கிறது.

ஆனால் இந்தியாவில் எத்தனை அரசியல் வாதிகள் எவ்வளவு சுரண்டல்கள்? இருப்பினும் இந்நாடும் நாட்டு மக்களும் வளமாக ஜீவித்திருந்திட முடிகிறதென்றால் அது பாரதம் என்கிற புண்ணிய பூமியில் பூமித்தாய் தந்தருளியிருக்கின்ற இயற்கை வளங்களே காரணம்.

அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள், காடுகள், கடல்கள், ஆறுகள், மலைகள், நிலங்கள் என்று இங்கே ஏராளமான இயற்கை வளங்கள் மக்களை காத்துக்கொண்டு இருக்கின்றன. இங்கே யாரும் ஆளும் மன்னர்களை அதாவது அரசியல் வாதிகளை நம்பி வாழவில்லை. இயற்கையை மட்டுமே முழுதாக நம்பி வாழும் பூமி இது. 

அதனால் தான் இங்கே அரசியல் வாதிகள் லட்சம் கோடிகளில் கொள்ளை அடித்தாலும் , அவற்றை நம் மக்களுக்குக் கொடுக்காமல் ஏதாவது தீவுகளில் கொண்டு ஒளித்து வைத்தாலும் இயறகைத் தெய்வம் மக்களை வாழ வைத்து விடுகிறது. 

ஆயிரக்கணக்கான வருடங்களாக பல்வேறு படையெடுப்புக்களாலும் சுரண்டப்பட்ட பூமியானால் கூட இன்னும் ஆயிரம் தலைமுறைகளுக்கு பொக்கிஷங்களை தன்னுள் வைத்திருந்து குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கும் பூமி பாரத பூமி.

ஆனாலும் எத்தனை நாள் தான் பூமித்தாய் பொறுத்துக்கொண்டிருப்பாள். இருக்கும் வளங்களை காப்பதும் மேம்படுத்துவதும் கைவிடப்பட்டு சுயநல அரசியல் வாதிகளால் சிதைக்கப்பட்டால் நாளை நமது அடுத்த சந்ததியினர் மேலே கண்ட படங்களில் இருப்பவர்களைப் போல கைவிடப்பட்டவர்கள் ஆவார்கள்!

கருணாநிதியானாலும், சோனியா மொய்னோவானாலும் அல்லது வேறு எந்த ஊழல் அரசியல் வாதிகளானாலும் சரி, சுரண்டல் அரசியலும் சுயநல அரசியலும் மேலே கண்டவைகளைப் போல கொடுமையான முடிவுகளைத் தான் கொடுக்கும் என்பதை மனதில் இருத்தி அதன் விளைவுகளைக் கண்டு அஞ்ச வேண்டும்.

ஊழல் அரசியல் வாதிகளால் இப்படிப்பட்ட விளைவுகள் நமக்குத்தான் ஏற்படும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். 

ஊழல் வாதிகளை, அரசியல் வாதிகளிலிருந்து அடித்தட்டு அரசு உத்யோகஸ்தர்கள் வரை அனைத்து இடங்களிலிருந்தும் ஒழிக்க மக்கள் தீர்க்கமான முடிவுகளை ஆண்டாண்டு காலத்திற்கும் மறக்காமல் எடுக்க வேண்டும்.

இல்லையேல் பூமித்தாய் பொறுமை இழப்பாள்!


.

No comments: