Thursday, May 19, 2011

புராணமும் வரலாறு தான்!







நம் தேசத்தில் சரித்திரம் இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது.
புராணமும் சரித்திரம் தான். இக்காலத்தில் கல்விகற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் புராணங்களில் சொல்லியிருப்பவைகளை வரலாறாக மதிப்பதில்லை. 


புராணங்கள் பொய் என்று கூறுபவர்கள் தங்களுக்குபிடித்த ஆர்ய, திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் எல்லாவற்றையும் கட்டுக்கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள். 


புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் எதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த புராணக்கதைகளை வரலாறாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். 'மிஸ்ட்ரி' நிறைய இருப்பதால்
அது 'ஹிஸ்ட்ரி' இல்லை என்று ஆகிவிடுமா?


புராணம் என்பது வேதத்திற்கு பூதக்கண்ணாடி மாதிரி. சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் பெரியதாகக் காட்டுகிறது அல்லவா? அப்படி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்ம விதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணி காட்டுவது தான் புராணம்.


ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனசில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாகச் சொன்னால் நன்றாக மனதில் பதியும். 


கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை, புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாக பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும் கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.


உண்மையில் வெறும் காலவாரியாக எந்த ராஜாக்கள் எங்கெங்கே ஆண்டார்கள் என்பதையும் யார் யாரோடு சண்டை போட்டார்கள் என்று தெரிந்து கொள்வதாலும் யாருக்கு என்ன பயன்? 


நம் வாழ்க்கைக்கு உதவாதனவாகவும் உபதேசம் இல்லாததாகவும் இருக்கும் சரித்திரம் நமக்கு வேண்டாம். 'ஆத்ம லாபமான சரித்திரங்களையே சொல்வோம்' என்ற அர்த்தத்துடன் எழுதப்பட்டவைகளே புராணங்கள்!

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 


.

No comments: