Tuesday, May 10, 2011

ஆத்ம பேராணந்தத்தை அடைவது எப்படி?





புத்தியை நிலையாக நிறுத்த முடியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய பூர்வ கர்மாதான். பல தினுசான தப்புத் தண்டாக்கள், பாபங்கள், ஜன்ம ஜன்மமாகப் பண்ணிவிட்டோம். அந்தப் பாபங்கள் தீருகிற வரை நமக்கு ஆத்மாநுபவம் என்கிற பேரானந்தம் கிடைக்காது. கர்மாக்களுக்கெல்லாம் பலன் தருகிற ஈஸ்வரன் நம் பாபத்துக்கெல்லாம் தண்டனை கொடுத்துத் தீர்த்து வைத்த பிறகுதான் நமக்கு அந்த சாசுவதமான பேரின்பம் கிடைக்க முடியும். பாபத்தை எப்படித் தீருத்துக் கொள்வது என்றால், புன்ணியத்தால் தான் தீர்த்துக்கொள்ள முடியும்.

"ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலிருந்து தீர்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகா கருணையால்தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இந்த புது ஜன்மாவில் பழைய பாபங்களுக்கு நிவிருத்தியாகப் புதிய புண்ணியங்களைப் பண்ணாமல்
இருப்பதோடு வேரு புதிய பாபங்களைச் செய்து பாப மூட்டையை சேர்த்து விடுகிறோம்.

ஆசையின் வயப்பட்டு ஒரு லட்சியத்தைப் பிடிக்கப் போகிறபோது தான், இந்த லட்சிய பூர்த்திக்காக எந்தத் தப்பையும் செய்யத் துணிகிறோம். இதனால் சித்தத்தில் துவேஷம், துக்கம், பயம் மாதிரி அழுக்குகளை ஏற்றிக் கொண்டு விடுகிறோம். அதனால் பாப கர்மாக்கள் உண்டாகி விடுகின்றன.

சரி, புண்ய கர்மா என்றால் என்ன?

சொந்த லாபத்தைப் பெரிதாக நினைக்காமல், உலக நன்மைகருதியே கர்மாக்களைச் செய்கிற போது அவை எல்லாம் புண்ணிய கர்மாக்களாகி நமக்கு உள்ளூர நன்மை செய்கின்றன. வெளியில் உலக வாழ்க்கையில் அவை சமூகம் முழுவதற்கும் நன்மை உண்டாக்குவதோடு, உள்ளே நம்முடைய பாப
கர்மங்களையும் கழுவித் தீர்க்கின்றன.

அதாவது புண்ணியச் செயல்களே நமது புத்தி சுத்துமாவதற்குப் படிப்படியாக உதவுகிறது.

பாப சிந்தனைகளைப் போக்கும் புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக இதை அன்பு எனச் சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பிவிடுவது தான் பக்தி.

அதாவது அன்பு, கருணை, தியாகம் போன்றவற்றை ஜீவன்களிடம் காட்டினால் புண்ணியகாரியம், அதையே இறைசக்தியிடம் காட்டினால் பக்தி.

இரண்டையும் ஒருசேர நிகழ்த்தி வந்தால் ஆத்மாவின் பேராணந்தத்தை அடைய முடியும்!

- ஸ்ரீ சங்கர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


.

No comments: