Wednesday, May 11, 2011

நாய்குட்டியும் நானும்!


இந்த பிரபஞ்சத்தில் எதற்கும் நிரந்தர வசிப்பிடம் என்பதே கிடையாது.
பூமி சூரியன் நட்சத்திரமென்று எத்தனையோ இருந்தாலும் அவைகளும் நிரந்தரமாக ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றன. அதுமட்டுமா? குறிப்பிட்ட கோடி வருடங்களுக்குப் பிறகு அவைகள் அழிந்தும் போகக்கடவது என்பதும் நிதர்சனம். எனவே பிரபஞ்சம் முதல் ஜீவராசிகள் அனைத்திற்கும் நிரந்தரமான இடமென்பதே கிடையாது என்றே தெரிகிறது.

சரி, பூமியில் மரம் செடி கொடி எல்லாம் ஒரே இடத்தில் தானே இருக்கின்றன. அவைகள் இடம் பெயர்வதில்லையே என்று நினைக்கலாம். ஆனால் மனிதன் என்கிற வஸ்து பிறந்த பின்னர் அவைகளது இடங்களுக்கும் ஆபத்து வந்து
விட்டனவே! காடுகளை அழிப்பதும் கடல்பரப்பை நகர்த்துவதும் என்று நிரந்தரமாக உலகில் எதற்கும் இடமில்லை என்பதை மனிதன் நிரூபித்தான்.

பேரளவு விஷயங்களிலிருந்து மிகச்சிறிய விஷயங்கள் வரை இந்த நிரந்தரமின்மை என்பது ஒரு வாழ்க்கைப் பாடமாகவே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. நிலையாமையின் வடிவம் நிதர்சனம்!

'கீய் கீய்' எனச்சத்தம் கேட்டு வீட்டின் பின்புறத்தில் எட்டிப் பார்த்தேன். ஆகச்சிறிய நாய்க்குட்டி. பெற்ற தாய் எங்கோ தொலைந்து போக சுற்றம் கண்டு பயந்த குட்டி ஒரு வட்டத்திற்குள் ஒதுங்கி இருக்க எங்கள் வீட்டு சுற்றுச்சுவருக்குள் சுற்றி வரக்கண்டேன். சத்தமிட்டு சுற்றி வந்து தனக்கென்று சுற்றம் ஒன்றைத் தேடக்கண்டேன்.

எட்டிப்பார்த்த என்னைப் பார்த்து குட்டி நாய் கூச்சலிட அதன் சத்தம் கேட்டு நெகிழ்ந்து போய் தாழ்திறந்து கை கொடுத்தேன். வாலை ஆட்டி உற்சாகமாய்க் கூச்சலிட்டது நாய்க்குட்டி. ஆசையோடு தோசைத் துண்டைப் போட்டபோது தன்னை ஆதரிக்க ஒருவன் கிடைத்து விட்டான் என்று வாலை ஆட்டி ஆடிய நாய்க்குட்டி இன்னும் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறது.

கொள்ளைப்புற கதவருகே எப்போதும் தவம் கிடக்கும். தெருநாய் என்றாலும் சிறுநாய் தானே அதுபாட்டும் இருந்து விட்டுப் போகட்டும் என்று இன்பமாய்த் தாண்டிச் செல்வேன். சின்னஞ்சிறு நாயை விரட்டினால் எங்கேதான் போகும் என்று காலடியில் படுத்துக்கிடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தேன்.

அன்று காலை 'கால் காலென' ஒரு கதறல் சத்தம். அந்தச் சின்னஞ்ச் சிறு நாயின் அலறல் சத்தம். ஒதுங்க இடம் தெரியாமல் தனக்கென்று ஒரு இடமில்லாமல் ஒரு தோசைத் துண்டு கிடைத்த சுகத்தில் தன் தாய்வீடே இதுதான் என்றென்னி தூங்கிக்கிடந்த அந்த நாய்க்குட்டி கத்திக் கதறி தெருவழியின் வழிப்போக்கர்களையெல்லாம் நின்று நிலைத்துப் பார்க்கச்
செய்த இயலாமையின் ஓலம்.

வீட்டுக்குள் இருந்த எங்களைப் பதறச் செய்தது. நாய்க்குட்டின் அழுகை வாசலுக்கு இழுத்தது. வந்து பார்த்தோம். வெட்கிப் போனோம். கண்கள் கலங்கின கையாலாகாதனத்தை எண்ணி.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமைக்காரி அந்தச் சின்னஞ்சிறு நாய்க்குட்டியை பிரம்பால் அடித்து காம்பவுண்டு கதவைத் தாண்டி செல்லுமாறு அடித்து விரட்டிக் கொண்டிருந்தார். அதைத் தடுக்க முடியாது. காரணம் வீடு அவருக்குச் சொந்தம். வருத்தப்பட முடிந்தது. காரணம் மனது எனக்குச் சொந்தம். கண்கள் கலங்கியது. காரணம் கண்ணீர் கண்களுக்குச் சொந்தம்.

போக்கிடம் இல்லாத சின்னஞ்சிறு நாய்க்குட்டி, தனக்கென ஒதுங்கக் கிடைத்த கொள்ளைப்புற சுவரோரத்தையும் தனக்குச் சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தர் தன்னிடமிருந்து பறிக்கிறார்களே என்று கதறியதை இன்றும் மறக்க முடியவில்லை. எத்தனை அடித்தாலும், விரட்டினாலும் விடாப்பிடியாக 'என் இடத்தை விட்டுப் போக மாட்டேன்' என அழிசாட்டியமாக தன் இடத்தை நோக்கி ஓலமிட்டுக் கொண்டே முன்னே சென்ற நாய்க்குட்டியின் போராட்டம் இன்னும் நினைவில் நிற்கிறது.

கதவிற்கு வெளியே வீட்டு சுற்றுச்சுவருக்கு வெளியே என முழுவதுமாக தனது இருப்பிடம் விட்டு அகற்றப்பட்ட நிலையில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது போல எங்களைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே அந்த நாய்க்குட்டி சென்றதை என்னும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

வீட்டுகாரி, நாய்க்குட்டியின் அலறலையும் அதை விரட்டிய பாங்கினையும் பலர் பார்த்துவிட்டதால் உள்வெட்கம் கொண்ட அம்மையார் அவராகவே சுயவிளக்கம் கொடுத்தார். 'தேவையில்லாம இதையெல்லாம் காம்பவுண்டுக்குள்ள விடக்கூடாதுங்க. இங்கேயே உண்டு ஒறங்கி கண்ட எடத்துல கழிஞ்சு வெக்கும். இப்பவே தொறத்திட்டா அப்பறம் உள்ள வராது. அது திரும்பி வந்தாலும் வெரட்டிடுங்க' என்று எங்களையும் கல்லாயிருக்கச் சொல்லிச் மாடியேறி சென்றுவிட்டார்.

'சே! ஒரு சின்ன நாய்க்குட்டி, ஓரமா ஒண்டிக்கிடந்தா என்ன வந்திரப்போகுது இந்த கெழவிக்கு. அதுபாட்டும் தானே இருந்திச்சு! இவ்ளோ பெரிய இடத்துல ஒரு நாய்க்குட்டியை இருக்கவிட மனசில்ல. இவங்களுக்கெல்லாம் ஆண்டவன் பெரிய பெரிய வீடு கட்ற அளவு வசதிய குடுத்து வாழவெச்சிருக்கான் பாரேன்!' என்று இயலாமையால் எங்கள் குடும்பமே அங்கலாய்த்து.

தனது உறைவிடமே தனது அடையாளம் என வாழ்வது நாயின் குணம். அதன் எல்லையை விட்டு ஒருமுறை வேறிடம் சென்று விட்டால் மீண்டும் பழைய இடத்தைத் திரும்பிக்கூட பார்க்காது. அதுவும் நாயின் குணம்.

ஆனால் பார்த்தது. வீட்டுக்காரியால் விரட்டப்பட்ட நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது. வீட்டுக்கு எதிரே இருந்த குப்பைத் தொட்டியின் பின்புறம் இருந்து என்னை எட்டிப் பார்த்தது. தோசைத்துண்டு கொடுத்த முகத்தை இன்னும் அடையாளம் வைத்திருக்கிறது. நான் மதில் சுவர் தாண்டி முகம் தெரிய எட்டிப்பார்த்தால் சப்தமிட்டது. காதுகளைத் தூக்கி வாலை ஆட்டியது. நிலையாமையை முழுவதுமாக சுவீகரித்திருந்தது அந்த சின்னஞ்சிறிய நாய்க்குட்டி.

பின்னர் சில மாதங்களில் அந்த வீட்டுக்கார அம்மையார் காலமானார். வீட்டையும் வாடகையையும் நிர்வகிக்கும் பொறுப்பு அவரது மகனிடம் வந்து சேர்ந்தது.

அன்று மாலை அழைப்பான் ஒலிக்க வாசற்கதவைத் திறந்தால் வீட்டுக்கார அம்மையாரின் மகன் நின்றுகொண்டிருந்தார். உணர்சிகளற்ற வெற்றுப் பார்வை. உறவற்ற உணர்ச்சியில் வார்த்தைகள்.

'சார், இந்த ஏரியால வாடகையெல்லாம் கூடிப்போச்சு. அந்த வாடகை கண்டிப்பா உங்களால குடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால நீங்களே கொஞ்ச கால அவகாசத்துல வேற வீடு பாத்து போயிட்டீங்கன்னா நல்லது. நான் அதிக வாடகைக்கு வேற ஆள குடிவெக்கனும். அவசரமில்லை. பாத்து செய்ங்க' என்று கூறிச் சென்றார்.

எதிர்பாராமல் விழுந்த இடியால் குடும்பமே ஒரு கனம் நிலைகுலைந்து போனோம். நாம் வசிக்கும் இடம் என்று நம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்ள ஆகும் காலம் கொஞ்ச நஞ்சமல்ல. ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் தொடங்கி தொலைபேசி, எரிவாயு, காப்பிட்டு நிறுவனம், வங்கி, இதர உறவினர்கள் நண்பர்கள் வரை அனைவருக்கும் இருப்பிட மாற்றம் தெரியப்படுத்தல் வரை அனைத்தும் செய்து முடிக்க ஒருவருடத்திற்கும் மேல் முழுதாய் ஆகும்.

பழைய இடத்தின் ஒட்டு மொத்த வாழ்விட அனுகூலங்கள் அத்தனையையும்
துறந்து அடையாள வேர்களை அடியோடு பிடுங்கி ஒரு புதிய இடத்திற்கு வலுக்கட்டாயமாக நம்மை நாமே நாடுகடத்திக்கொள்ளும் இந்தக் கொடுமை அடிக்கடி நடப்பது என்பது நகர வாழ்வில் தவிர்க்க முடியாத கதையாகவே இருக்கிறது.

அந்தக் குடும்பம் அமைதியாக தனது ஜீவிதத்தை நடத்திகொண்டிருக்கிறதே என்கிற பச்சாதாபம் எல்லாம் யாருக்கும் இருக்கப்போவதில்லை. மனிதன் தனது தேவைக்கேற்ப எதையும் பந்தாடுவான். எதையும் மாற்றியமைப்பான். ஒரு குடும்பத்தை இடமாற்றம் செய்வது அவனது தேவை என்றால் அதில் மட்டும் இரக்கம் காட்டுவானா என்ன? நிலையாமையை நாம் தான் பழகிக்கொள்ள வேண்டும். அந்த நாய்க்குட்டியைப் போல.

விரட்டியவன் மீது கோபம் இல்லை. இழந்த அடையாளம் மீது பிடிப்பு இல்லை. இறந்தகால வசிப்பிடம் பற்றிய வருத்தம் இல்லை. ஒதுங்கக் கிடைத்த இடம் எதுவோ அதுவே தன் அடையாளமாக ஏற்று அங்கேயே வாழுந்து விடும். நிலையாமையை பக்குவமாக நாய் ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பக்குவம் மனிதனுக்கும் வரவேண்டும்.

வாசலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதே குப்பைத் தொட்டியிலிருந்து தலையை நீட்டியது நாய்க்குட்டி. இப்போது கொஞ்சம் பெரிதாகி இருந்தது. என் தலையைப் பார்த்தவுடன் பழைய மாதிரியே காதுகளை தூக்கி வாலை ஆட்டி லேசாக குரல் கொடுத்தது.

அதன் ஆடிய வாலை பார்த்துக்கொண்டே இருந்தேன். 'என்ன, அடுத்தது நீங்களா?' என்று என்னைப் பார்த்து கேட்டது போல இருந்தது.

குப்பைகளை உற்சாகமாக கிளறிப்போட்டது. எனக்கும் அங்கே ஒரு இடம் கொடுப்பதாக நாய்க்குட்டி கூறுவதைப் போலவே தோன்றியது.

வாடகை வீட்டில் குடியிருந்தால் நாய்குட்டிக்கும் நமக்கும் ஒரே மரியாதை தான்!"என்ன?, நீங்க வாடகை வீட்டுல குடியிருக்கீங்களா? நீங்க நம்மாளு!"

.

2 comments:

dondu(#11168674346665545885) said...

இன்று நான், நாளை நீ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

அப்படித்தான் வாடகை வீட்டுக்காரர்கள் நிலைமை இருக்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!