Sunday, September 25, 2011

ராமாயணம் தரும் பாடம் - அனுகூல க்ஷத்ரு!




அனுகூல க்ஷத்ரு என்று சிலரைக் கூறுவார்கள். அப்படியென்றால் யார்?

எப்படி இருப்பார்கள்?

நமக்கு நன்மை செய்வதாகச் சொல்லி தீமைக்குழியில் தள்ளிவிடுபவர் எவரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு என அழைக்கப்படுகிறார்கள்.

சட்டென புரியும் படியாகச் சொல்லவா?

"ரொம்ப ஜலதோஷம் மச்சான். மூக்கடைச்சிக்கிட்டு ரெண்டு நாளா ஒரே தொல்லை" என்று உங்கள் நண்பரிடம் கூறும்போதே 'மச்சி மெளகு பொடியத் தூவி கட்டிங் வுட்டேன்னா எல்லாம் சரியாயிடும்! நான் சொல்லித்தர்ரேன் பாரேன்" என்று ஆரம்பிப்பவர் யாரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு! நம்முடைய ஜலதோஷத் தொல்லை நீங்க வழி செய்யும் உதவி மனப்பான்மையோடு
அவர் சொல்வதாகத் தான் இருக்கும். அது நண்பனின் அடையாளம்.

ஆனால் நமக்கு செய்ய நினைக்கும் நன்மை இன்னொரு தீமையின் ஆரம்பமாக இருந்துவிட்டால் அது நமக்கெதிராக செயல்பட நினைக்கும் க்ஷத்ருவின்
அடையாளம். இப்படி நமக்கு நன்மைசெய்வதாகக் கூறி தீமைக்குழிக்குள் யாரேனும் தள்ளிவிட்டால் அவரே அனுகூல க்ஷத்ரு.

காதலியைப் பற்றி சக நண்பர்களிடம் கூறி புலகாங்கிடம் அடையும் இளவட்டங்கள் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சியது கெஞ்சியது மிஞ்சியது என அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது காதலியுடன் சண்டை, கோபம் என்று வந்தவுடன் தான் இந்த அனுகூல க்ஷத்ருக்களுடைய வேலை ஆரம்பமாகும். 'மச்சி, அவ என்னைய மதிக்கவே இல்லடா, நேத்து என்னாச்சு தெரியுமா?' என சக நண்பர்களிடம் கூறுவர். ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் கூறும் யோசனை தான் அந்த காதலுக்கே சமாதி கட்டும் வேலையாக இருக்கும்.

'அவ எதிர்ல வந்தா கூட பாக்காம போ மச்சான். ரெண்டு நாளைக்கு
ஃபோனை ஸ்விட்ச் ஆப்ல வெச்சிடு. அடிச்சி புடிச்சு உன்னைப் பாக்க ஓடிவர்ராளா இல்லையான்னு பாரு!' இப்படி யோசனைகள் பறக்கும். டவுசர் போட்ட காலத்திலிருந்தே கூடப்பழகும் உற்ற நண்பன் தனக்கு நல்லதைத்தான் சொல்லுவான் என்றும் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றும் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன் அப்படியே செய்தும் பார்ப்பான்.

அவ்வளவு தான் சிறிய ஈகோ பிரச்சனையில் துவங்கியதை, ஒரு கெஞ்சலில் முடிந்து விடக்கூடிய ஊடலை, பெரிய விரிசலாக மாற்றி காதலே உடைந்து காதலர்கள் பிரிந்து போகும் சூழலுக்குத் தள்ளிவிடும், இந்த யோசனைகள். நண்பர்களால் சொல்லப்பட்டவை எல்லாம் நமது நன்மைக்கே என்கிற மாயத்தோற்றம் காதல் முறிந்து காலம் கடந்த பின் தெரியும்.

'பின்னொரு காலத்தில் உங்களால தாண்டா இதெல்லாம் நடந்திச்சி. உங்களை யார்ரா என் காதல்ல குறுக்க வரச்சொன்னது?' என அவர்களிடமே கேட்டு நட்பையும் இழக்கும் அசமஞ்சங்களாக நாம் இருப்போம். எல்லாம் நமது அனுகூலத்திற்காக செயல்படுபவர்கள் என சிலரை நம்பி அவர்களே க்ஷத்ருக்களின் வேலையைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத வினையால் ஏற்படும் விளைவுகள்.

இப்படி பலபேர் பல இடங்களில் பல நேரங்களில் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள். சூழ்நிலை காரணமாக நாம் அவர்களை நம்பிவிட நேரலாம். ஆனால் விழிப்புடன் நடந்து கொண்டால் சில நுணுக்கமான க்ஷத்ரு அவதாரம் அவர்களிடமிருந்து வெளிப்படுவது மெல்லத் தெரியவரும்.

கல்லூரியில் படிக்கும் போது சக நண்பர்கள் உற்சாகப்படுத்துவார்கள். எதற்கு? பரீட்சையில் பெயிலாய்ப் போவதற்கு! 'மச்சி, அரியர்ஸ் வெக்காத மனுஷன் அரை மனுஷன்டா.' என்பான். 'நாமல்லாம் என்னிக்கு மச்சான் ஒரே அட்டெம்ப்ட்ல பாஸாயிருக்கோம்?' என வடிவேலு பாஷையில் பேசி புளகாங்கிதம் அடைந்து கொள்வான். அதையெல்லாம் தாண்டி 'மச்சி, இந்த வயசில தாண்டா என்ஜாய் பண்ணும், க்ளாஸை அப்பறம் பாத்துக்கலாம், உனக்கும் சேத்து டிக்கெட் எடுக்கறேன் மச்சான், படத்துக்கு போகலாம் வா' என்று நட்புணர்வு பொங்க வாஞ்சையாய் அழைப்பான். அவன் தான் மாணாக்கனின் அனுகூல க்ஷத்ரு!

ஒரு மனைவி தன் கணவனிடம் கோபித்துக் கொள்கிறாள் என வைத்துக் கொள்வோம். அதை உடனே தனது தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள். அவள் கருத்தேதும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தால் அவள் தோழி. அல்லது அதெல்லாம் சின்ன சின்ன உரசல் தானே. எல்லாம் சரியாப் போய்டும் என்று ஆறுதல் கூறினால் அவள் தோழி.

ஆனால் அதே தோழி இந்த பிரச்சனையைத் தீர்க்க ஆலோசனை கூறினால்? அங்கே தான் அனுகூல க்ஷத்ருவை அடையாளம் கண்டு கொள்ளவேண்டிய அவசியம் இருக்கும். விழிப்புடனிருக்க வேண்டும். அந்த யோசனைகளைச் செய்யலாமா வேண்டாமா என்று நம் குடும்பச் சூழலை அனுசரித்து பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தோழிக்கு ஆறுதலாக கூறுவதாக நினைத்து "நீ எவ்ளோ கஷ்டம் படற, உன் புருஷனுக்கு அது புரியலியே! நீ பேசாம இரு! அவரே பேசிக்கிட்டு வரட்டும்!  என்ன தான் செய்றாருன்னு பாரு! சமைச்சுப் போடாத! ராவக்கு கிட்ட விடாத! நீ என்ன கொறஞ்சி போய்ட்டியா?" என்று தோழிக்கு வக்காலத்தாக பேசுவதாக நினைத்து குடும்பததையே உடைக்கும் பெண்கள் அனுகூல க்ஷத்ருக்கள்! பலபேருக்கு இப்படிப்பட்ட அனுகூல க்ஷத்ருவால் மோசமான அனுபவம் உண்டாகி இருக்கலாம்! 'சே அவ பேச்சை கேட்டு பண்ணினது எனக்கே வினையா போச்சு!" என்று புலம்பும் குரல்களைக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அனுகூல க்ஷத்ருவின் விளைவுகள் காலம் கடந்து சூழ்நிலை மாற்றம் பெற்றவுடன் தான் மெல்லத் தெரியவரும். அதற்குள் நாம் பல விளைவுகளை சந்தித்திருப்போம்.

இப்படித்தான் அருகிலேயே இருந்த அனுகூலம் செய்வதாகச் சொல்லி ஒரு வம்சத்திற்கே வினையானாள் ஒருத்தி. அந்த அனுகூல க்ஷத்ருவின் பெயர் மந்தரை.

தனக்கு என்றைக்குமே நன்மையைச் சொல்லுபவள் தான் மந்தரை என்று கைகேயி முழுமையாக நம்பினாள். ராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்று மந்தரை வந்துச் சொன்னவுடன் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை கையால் அவிழ்த்து மந்தரையின் கழுத்தில் மகிழ்ச்சி பொங்க போட்டுப் பரிசளித்தள் கனிவான கைகேயி!

மாசுள்ளம் கொண்ட மந்தரைக்கு முத்தாரமும் முத்துமணிகளும் ஏனோ மகிழ்ச்சியளிக்கவில்லை. தான் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் கைகேயிக்கு ராமன் பட்டம் சூட்டிக்கொள்வதால் பெருமையென்ன இருக்கிறது என்று நினைத்தாள். கோசலையின் மகன் ராஜாவானால் கோசலைக்குப் பெருமை. கைகேயி ஏன் கால்கை புரியாமல் குதித்து கூத்தாட வேண்டுமென எண்ணினாள் மந்தரை. அதனால் கைகேயியின் மீது தனது பிரியத்தைக் காட்டுவதாக எண்ணி அவளுகு போதித்தாள்.

'கோசலை மகன் ராமன் 'கோ' மானாக இருப்பதால் உனக்கு என்ன பெருமை?
பெருமையெல்லாம் கோசலைக்கன்றோ?' 'நீயும் நானும் கோசலையின் தாசியாக இருக்கப்போகிறோமா? சக்கரவத்தித் திருமகளும், சக்கரவர்த்தியின் பத்தினியுமான நீ கோசலைமுன் பெருமை ஒன்றுமில்லாமல் சிறுமை பட்டு நிற்பாயோ?' என கைகேயிக்குப் பரிகாட்டுவதாக எண்ணி அவளுக்குப் போதித்தாள்.

இதைக் கேட்ட கைகேயி நற்குலப் பெண்களுக்கே உரிய நற்குணத்தின் வெளிப்பாடாக ராமனைப் புகழ்ந்தே கூறலானாள் 'மந்தியின் புத்தி கொண்ட மந்தரையே! எனக்கு ராமனும் ஒன்றுதான், பரதனும் ஒன்றுதான், இருவரில் மகுடம் யாருக்கெனினும் மன்னவனாவது என் மகன் தான்!'

தம்பிகளுக்கொரு குறையென்றால் தாளமாட்டாத தனையன் என் மகன் ராமன். கோசலையின் மீதிருக்கும் பாசத்தை விட கோடிப்படிகள் உயர்வாக என்மீது பாசம் காட்டுபவன் என்மகன் ராமன். பெரியோர்களிடம் அன்பும் பக்தியும் உடைய ராமன் முடிசூட்டிக்கொள்வது இந்த நல்லுலகிற்கு கிடைத்த பாக்கியமன்றோ?' என்றாள்.

ஆனால் மந்தரை விடவில்லை. என்ன தான் ராமன் மீது அதிக பாசம் கொண்டவள் கைகேயி என்றாலும் பரதன் அவள் புதல்வன் தானே. அவன் மீதும் அவனது எதிர்காலம் மீதும் சிந்தனை கொண்டவள் தானே. அந்த இடத்தை தட்டிவிட்டாள் மந்தரை.

'இன்றைக்கு ராமன் நாடாளலாமடி கைகேயி, ஆனால் நாளை நீ யார்? உன் மகன் யார்? அவன் மகன் என்னவாக இருப்பான்? ராமனுக்குப் பிறகு பரதன் அரசாள்வானா? ராமனுக்குப் பிறகு அவன் மகன் முடிச்சுட்டிக் கொள்வான், பிறகு அவன் மகன்.. அப்படியே போனால் பரதனுக்கென்று என்ன மிஞ்சும்? உன் மதி கெட்ட தனத்தால் 'நம் பிள்ளை' பரதன்' நாடாளும் வாய்ப்பைக் கெடுத்து நீயே அவனது நல்வாழ்விற்கு நாசம் விளைவிக்கிறாய். காரியத்துடன் சொல்லி விட்டேன், அவனை வீரியத்துடன் காப்பது உன்கடன் கைகேயி, உன் கடன்' என்று போதித்து நகர்ந்து விட்டாள் அனுக்கூல க்ஷத்ரு.

மந்தரை கைகேயி மீது பிரியம் கொண்டவள். அவளது அனுகூலத்திற்காகவும், அவள் பெற்ற பிள்ளையின் அனுகூலத்திற்காகவும் பேசியவள் தான். பிரியம் கொண்டதால் உரிமை வந்ததெனப் பேசலாம் தான். ஆனால் அவற்றைக் கேட்ட கைகேயி அதன் படி நடக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்திருக்க வேண்டும். ஒரு கணம் அமைதியாக சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் தனது அனுகூலத்திற்காகத் தான் மந்தரை சொல்வதாக எண்ணி அதனுள்ளிருக்கும் க்ஷத்ரு குணத்திற்கு தானே பலியானாள். மந்தரையின் பேச்சைக் கேட்டு
மதிகெட்டுப் போனதை எண்ணி பின்னாளில் மனம் வருந்தினாள்.

கைகேயின் அனுகூல க்ஷத்ருவானாள் மந்தரை. அவள் பேச்சைக் கேட்டதால் தசரதன் மடிந்தான், ராமனும் சீதையும், லக்ஷமனனும் காடு சேர்ந்தனர். பரதன் நாடேற்க மறுத்தான். லங்காபுரி அழிந்தது. ராவண குடும்பம் மாண்டது!


எல்லாம் நம் கூடவே இருக்கும் அனுகூல க்ஷத்ருக்கள் யாரென்று புரிந்து கொள்ளாததால் வந்த வினை.

உங்களைச் சுற்றியும் உங்களுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடியவர்களாக சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் இக்கட்டான சூழலில் மற்றவர்கள் யோசனையைக் கேட்க நேரிடும் போது அவற்றை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை நாமே சரியானபடி தீர்மானித்துக் கொள்ள வேண்டும்! நமக்கு நன்மை செய்வதாக நினைத்து தீமைக்கு வித்திடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இல்லையேல் காலம் கடந்து ஞானம் பிறக்கும்.

நாம் இருப்பது அயோத்தியும் இல்லை! நமக்கு ஒதுங்க இங்கே காடுகளும் இல்லை!

அனுகூல க்ஷத்ருக்கள் ஜாக்கிரதை! இது ராமாயணம் தரும் பாடம்!
.

3 comments:

Madhusudhanan D said...

Good one Ram. By the way I would like to add some information on the Ramayana how Kaiukeyi was convinced:

http://madhusudhanand.blogspot.com/2011/07/ramayana-and-psychology.html

hayyram said...

thanks for the link madhu...

nice lines are..

**** Kaikeyi was intelligent and a she was a good warrior. She cannot accept all irrational speech by Manthara. then Manthara used a last chance to convince kaikeyi psychologically. Kaikeyi belongs to the kingdom of Kekaya. Her father is the king of Kekaya kingdom. A married woman can easily be convinced if she gets a fear that something happens to her parents, or the place she was born and brought up. In that case she cannot think and differentiate good and bad ****

நமக்கு நெருக்கமானவர்களாக இருந்து நமக்கு அனுகூலமாக பேசுபவர்கள் பெரும்பாலும் நம்முடைய பலவீனக்களைத் தெரிந்தே பேசுவார்கள். அதனால் எதிரிகளை விட நெருங்கியவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கூறும் யோசனையைக் கேட்பதில் தான் அதிக கவனம் வைக்க வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இராஜராஜேஸ்வரி said...

ராமஜெயம்!