Saturday, September 10, 2011

நாம் தெய்வீகமானவர்கள்!




விதி என்று எதுவும் கிடையது. நமது வாழ்க்கை நமது முன்வினைப் பயனின், நமது கர்மத்தின் விளைவு இவற்றால் உண்டான பலனே விதி எனப்படுகிறது. இவ்வாறு நாமே நமது கர்மத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றால், அதை அழிக்கவும் நம்மால் முடியும் என்பதே உண்மை.

'வண்ணத்துப் புழு தன் உடலிலிருந்து சுரக்கின்ற பொருளால் தன்னைச் சுற்றித் தானே கூடமைத்துக் கொண்டு அதில் தானே நிறைப்படுகிறது. அங்கே கிடந்தவாறு அது அழலாம், கதறலாம், ஓலமிடலாம். ஆனால் அதன் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். இறுதியில் அதுவே ஞானம் பெறுகிறது, அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

அதுபோலத்தான் நமது தளைகளைப் பொறுத்தவரையிலும் யுக யுகங்களாக நாமும் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருகிறோம். இப்போது துன்பத்தை உணர்கிறோம். நாம் கட்டுண்டிருப்பதை எண்ணி அழுது புரள்கிறோம். ஆனால் அழுவதாலும் புரள்வதாலும் எந்தப் பயனும் இல்லை. இந்தத் தளைகளை உடைப்பதில் நாம் முனைந்து செயல்பட வேண்டும்.

'எல்லா தளைகளுக்கும் முக்கியக் காரணம் அறியாமை, மனிதன் இயல்பிலேயே தூயவன், முற்றிலும் புனிதமானவன். ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நீ காண்கின்ற ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே கடவுள் தான்.

இந்த இயல்பு அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறியாமையே நம்மைக் கட்டுண்டவர்களாக ஆக்கியிருக்கிறது. எல்லா துன்பங்களுக்கும் அறியாமையே காரணம். அறிவு உலகை நல்லதாக்குகிறது. அறிவு எல்லா துன்பங்களையும் ஒழிக்கிறது, அறிவு நம்மைச் சுதந்திரர்களாக்குகிறது. எந்த அறிவு? வேதியலா? இயற்பியலா? வான இயலா? பூமியியலா?

அவை எல்லாம் நமக்குச் சிறிது உதவுகின்றன, மிகச்சிறுது உதவுகின்றன. ஆனால் முக்கியமான அறிவு என்பது உங்கள் இயல்பே, "உன்னை அறிந்துகொள்," நீங்கள் உண்மையில் யார், உங்கள் உண்மையான இயல்பு எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த எல்லையற்ற இயல்பை உங்களுக்குள் உணர வேண்டும். அப்போது தளைகள் எல்லாம் தானே நொறுங்கிப்போகும்!

நாம் தெய்வீகமானவர்கள், எப்படி? ஏன் தெய்வீகமானவர்கள்?

நாம் மூலசக்தியும் மகா சக்தியுமான தெய்வத்திடமிருந்து தோன்றியவர்கள். தெய்வம் என்னும் மாபெரும் ஜோதியிலிர்ந்து தோன்றிய சுடர்கள் நாம். பாலில் செய்த பண்டங்கள் அனைத்திலும் பாலின் தன்மை இருப்பது போல தெய்வத்திலிருந்து தோன்றிய நம்மிடமும் தெய்வீகம் உள்ளது. நாம் தெய்வீகமானவர்கள்.

நாம் மட்டுமல்ல, உயிரினங்கள் மட்டுமல்ல; மகாசக்தியிடமிருந்து தோன்றியதான இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொன்றும், மரமும், செடியும், மண்ணும் விண்ணும், கடலும் மலையும் எல்லாம் தெய்வீகமே!

- ஸ்வாமி விவேகானந்தர்


.

No comments: