குற்றால சீசன் துவங்கியது, குற்றாலத்தில் சாரல் துவங்கியது. சாரல் நின்று போனது. மீண்டும் சீசன் களைகட்டியது. மக்கள் வரிசையில் நின்று குளித்தனர் என்று மாறி மாறி செய்திகள் வருகிறது. வரிசையில் நின்று மக்கள் குளிப்பதைப் பார்த்தால் நமக்கும் ஏக்கம் வந்துவிடும்.
தெய்வீகக் குளியல் என்று பேர் வாங்கிய குற்றாலக் குளியலை குளிக்க ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது. தூரத்திலிருந்து வரும் போதே காணப்படும் பொங்குமாங்கடலும், மேலே தொட்டு தடவிச் செல்லும் அருவியின் சாரலும், தொப் என்று தலையில் விழும் தண்ணீருக்குள் எப்போது நுழைவோம் என்ற ஆவலைத் தூண்டிவிடும்.
ஆனால் சீசனுக்கு போய்க் குளிப்பதென்றாலே ஒரு வித அலர்ஜி வந்து விடுகிறது. வரிசையில் நின்று குளிக்க வேண்டும் என்பதில் துவங்கி கூட்டம் , நெரிசல் , போட்டி என்று எல்லாமே பிடிக்காத அம்சமாகிவிடுகிறது. அது மட்டுமில்லாமல் கூட்டங்களைக் கடந்து நெருங்கிச் சென்று அருவிக்கு கீழே நின்று தண்ணீர் முதுகில் பட வேண்டுமானால் கேள்விக்குறி போல கொஞ்ச நேரம் வளைந்து நெளிந்து நிற்க்க வேண்டும். முதலில் மற்றவர்கள் உடலில் பட்டு தெரிக்கும் தண்ணீரில் தான் நமது ஜலக்கிரீடை இருக்கும்.
பக்கத்தில் நிற்கும் பிரகஸ்பதி எந்த நிலையில் குளிக்கிறாரோ அந்த தீர்த்தம் தான் நம்மை முதலில் குளிப்பாட்டும். அவர் சோப்பு போட்டுக் கொண்டிருந்தால் அந்த சோப்புத்தண்ணி, எண்ணை தேய்த்து அப்போது தான் வந்தால் கொஞ்ச எண்ணையை நம்மீதும் வழிய விடுவார். அது எந்த கம்பெனி எண்ணையாக இருந்தாலும் ஐ எஸ் ஐ முத்திரையை ஆராய்ச்சி செய்யாமல் கொஞ்சம் அதையும் நம் மீது தெளித்துக் கொள்ள வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி எங்கே நின்றால் தண்ணீர் நம் மீது நன்றாக விழும் என்பதை ஓரிரு முறை தண்ணீர் விழும் பகுதியை அந்நாந்து பார்த்து நிற்க்க வேண்டும். ஒரு உருவம் நகர்ந்து கரையேரியது என்பதைக் கண்டால் உடனே அந்த இடைவெளியில் நுழைந்து தலையைக் காட்ட வேண்டும். அப்போது தான் தலையில் குற்றாலத் தண்ணீர் தட தட வென்று தம்பட்டம் அடிக்க நிற்க்க முடியும்.
அப்பாடா இப்போதாவது இடம் கிடைத்ததே என்று நின்றால், அடுத்தடுத்து வரும் கூட்டம் நம்மை மூச்சு தினற உள்ளே தள்ளும். சரி போகட்டும் , கொஞ்ச நேரம் குளிக்கலாம் என்று மனசு லயிக்க நிற்க்க முடியாது. மூஞ்சிக்கு முன்னாடி ஒருத்தர், முதுகுக்கு பின்னாடி இன்னொருத்தர், பக்கவாட்டுகளில் பக்காவாக அனைகட்டிக் கொண்டு மற்றவர்கள் என்று நம் உடம்போடு உடம்பாக ஒட்டி ஈஷிக்கொண்டு நிற்ப்பார்கள். அப்படியே மாநகராட்சிப் பேருந்தில் குளித்துக் கொண்டே அலுவலகம் போவது போல ஒரு உணர்வு வந்து விடும். சே! இங்கே வந்து கூட பஸ்சுல போறமாதிரி நெரிசலா என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி வெளியே நகர்ந்தால் நன்கு செய்யப்பட்ட நான்கு பீரோக்கள் டாஸ்மாக்கில் முங்கி எழுந்து ஆடிக்கொண்டே வரும்.
மூச்சு முட்டுகிறதே என்று நாம் கொஞ்சம் வெளியே தலை காட்டினால் போதும், இவன் குளித்து முடித்துவிட்டான் என்று அவர்களே முடுவுசெய்து விடுவார்கள். மப்பு செய்யும் வேகம் வேறு கூடி இருப்பதால் தீவிரவாதமாக உள்ளே நுழைந்து தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ...என்று உரிமையோடு நம்மை அருவியில் இருந்து பிய்த்து எடுத்து தள்ளி வைத்து விடுவார்கள். மூலிகை மருந்து நிறைந்த அருவியென்று ஆசையோடு குளிக்க வருபவர்கள் எல்லாம் டாஸ்மாக் மருந்து வாடையுடனேயே குளிக்க வேண்டியிருக்கும்.
மது அருந்தி விட்டு குளிக்ககூடாது ன்னு போடக்கூடாதா?
குடித்து விட்டு குளித்து விட்டு அது தெளியும் போது மீண்டும் குடித்து விட்டு மீண்டும் குளிக்கவந்து அடேயப்பா இப்படி தெளியத் தெளிய குடித்துக் குளிப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம். குடித்ததாலும் குளித்ததாலும் கண்கள் சிவந்து இவர்கள் காணப்படுவார்கள். செக்கச் செவேலென்ற கண்களுடன் இவர்கள் அருகில் வந்து நம்மைப் பார்க்கும் போது பயந்து போய் நாமே நம்மை நகர்த்திக் கொள்வோம். அதிலும் இந்த கும்பல் எல்லாம் கூட்டமாகவே வருவதால் தொந்தியும் தொப்பையுமாக புல்டோசர்கள் புல்லோடில் வந்து நம் மீது உருளுவது போலவே இருக்கும். சாரய துர்நாற்றம் தாங்காமலே பல முறை குளியலை பாதியில் முடித்துக் கொண்டதுண்டு.
சில போதை ஜந்த்துக்கள் அப்படியே அந்த சிமென்ட் தடுப்பு மீது ஏறி மப்பில் பெண்கள் பகுதியில் குதிப்பதும் செய்திகளில் வரும் அளவிற்க்கு நடப்பதும் உண்டு.
தயவு செய்து குற்றாலத்தில் குடித்து விட்டு யாரும் குளிக்கக் கூடாது என்று சட்டம் போடுங்கப்பா. புண்ணியமாப் போகும்.
சீசன் மட்டும் இல்லாமல் எப்பொழுது போனாலும் நிம்மதியைக் கொடுப்பது குற்றாலநாதர் கோவில் தான். குற்றால நாதரையும், அம்பாளையும் தரிசித்து விட்டு அப்படியே பூரண புஷ்கலாம்பாள் சமேத தர்ம சாஸ்த்தாவையும் பிரார்த்தனை செய்து வந்தால் மனதுக்கு ஒரு நிம்மதி அடுத்த சீசன் வரை குடியிருக்கும்.
குற்றாலத் தண்ணீர் பல மூலிகைகளைத்தொட்டு தாங்கி வருவதால் ஒர் நல்ல மருந்து. தோல் வியாதிகள் அல்லது தோல் அலர்ஜி உள்ளவர்கள் ஒரு முறை குற்றாலத்தண்ணீரில் நன்றாக (முடிந்த வரை அடுத்தவர் தோல் மீது தேய்த்துக்கொண்டிருக்காமல்) குளித்து வந்தால் உடனே குணம் காணலாம். சொந்த அனுபவம் மூலம் சொல்கிறேன்.
குற்றாலத்தில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் காலத்தில் அந்தப் பிரம்மாண்டமான பாறைகளைப் பார்த்தால் மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். ஓங்கி உயர்ந்த அந்தப் பாறைகளில் சிவலிங்கம் மற்றும் பல உருவங்களும் பொரிக்கப் பட்டிருக்கும். மேலே இருந்து விழும் தண்ணீர் பாறைகளில் வரையப்பட்டிருக்கும் சிவலிக்கத்திற்கு சுயமாகவே அபிஷேகம் செய்து அந்த அபிஷேகத் தண்ணீரே நம் மீது விழுவது போன்று செய்யப்பட்டிருக்கும். நினைத்தாலே தெய்வீகமான ஒரு இடம் குற்றாலம்.
இப்படிப் பெருமைமிக்க குற்றால அருவி சுற்றுலாத் தலம் என்று சொல்லப்பட்டு இப்போது குடிகாரர்களால் கூத்தடிக்கப்படும் இடமாகவே மாறிவிட்டது. சாராய வாடையில்லாமல் குளிக்க முடியவில்லை.
தெய்வீக சிந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல் எந்த ஒரு இடமும் முழுமையாகப் பாதுகாக்கப்படமாட்டாது. தெய்வீகமான குற்றாலத்தை புனிதத்தலமாக நினைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குடிகாரர்கள் கூத்தடிக்கும் குளியலறையாக இல்லாமல் பாதுகாத்தாலாவது மற்றவர்கள் முகம் சுளிக்காமல் குளிக்க முடியும்.
ஆனால் இதை யார் செய்வது. இந்துத்தலம் என்றாலே கேட்பதற்க்கு நாதி கிடையாதே! என்ன செய்வது?. குற்றால நாதரே, நீரே காப்பீர்.