Monday, September 21, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 7


ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது புத்திசரீரன் ராஜகுமாரனை சமாதானப்படுத்தி நடந்ததை முதலில் அறிந்து கொள்வோம் பிறகு யோசிப்போம் என்று தடுத்தான்.

கிழவி நடந்ததைக் கூறலானாள் "சென்ற முறை அவள் என்னை அடித்ததால், நான் இன்றைக்கு பத்மாவதி முன் மவுனமாக அமர்ந்திருந்தேன். அவள் என்னை வம்புக்கு இழுத்து, உங்களிடமிருந்து ஏதோ செய்தி கொணர்ந்திருப்பதாக வாதம் செய்தாள். மூன்று விரல்கலைச் செம்பஞ்சுக் குழம்பில் நனைத்து, அதனால் என் மார்பில் அடித்து அனுப்பி விட்டாள்.

அது மட்டுமில்லாமல் தெருவிலே மதம் பிடித்த யானை ஒன்று தறிகெட்டு ஓடுவதாகவும் அதனால் என்னை வாசல் வழியாக போக வேண்டாம் என்றும் கூறி, ஓர் ஆசனத்தில் அமர்த்தி கயிறு கொண்டு கட்டி பின்புற ஜன்னல் வழியாக இறக்கி விட்டாள். நான் அருகிலுள்ள மரத்திலேறி தோட்டத்தின் வழியாக வெளியேறி கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தேன் " என்றாள்

கிழவியின் வார்த்தையைக் கேட்ட புத்திசரீரன் புன்னகைத்தான். அவன் ராஜகுமாரனைப் பார்த்து "நண்பா, கவலை கொள்ள வேண்டாம். உன் ஆசை நிறைவேறப் போகிறது" என்றான்.

ராஜகுமாரனோ ஆச்சரியமாக அவனைப் பார்த்து அர்வத்துடன் கேட்டான் "நீ, என்ன சொல்கிறாய், அவள் என்னைப் பார்க்க சம்மதித்தாளா? என்ன சங்கேத மொழி அனுப்பியிருக்கிறாள்? விளக்கு நண்பா" என்றான்.

புத்திசரீரன் விளக்கினான் "நண்பா!, அவள் மூன்று விரல்கள் பதிய கிழவியை அடித்து அனுப்பியதால், உன்னை இன்னும் மூன்று இரவுகள் பொறுத்திருக்குமாறு செய்தி கூறியிருக்கிறாள். மேலும் கிழவியை மாற்றுப்பதையில் போகச் சொல்லி அனுப்பியிருப்பதால், நீ எந்த வழியாகச் சென்று அவளைப் பார்க்க வேண்டும் என்றும் உணர்த்தி அவளை அடையும் வழியை உனக்குக் காட்டிவிட்டாள்" என்றான்.

ராஜகுமாரனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. செய்தியைக் கொண்டுவந்த கிழவிக்கும் புத்திசாலித்தனத்தால் பத்மாவதியின் சங்கேத மொழிகளை கண்டுபிடித்து புரியவைக்கும் புத்திசரீரனுக்கும் பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தான்.

மூன்று இரவுகள் சென்றன. அடுத்த நாள் இரவு ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் பத்மாவைதியைப் பார்க்க சென்றான். கிழவி வந்த வழியாகவே தோட்டத்தை அடைந்தான். வீட்டின் பின்புறம் கயிற்றால் கட்டியபடி ஆசனம் ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்தான். அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராக இருந்த பணிப்பெண்கள் ராஜகுமாரன் அமர்ந்த ஆசனத்தை மேலே தூக்கினார்கள்.

மாடியில் சிரித்த முகத்துடன் பத்மாவதி நின்று கொண்டிருந்தாள். ராஜகுமாரனைக் கண்டவுடன் ஆவலுடன் வந்து அவனைகட்டி அனைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர். மனதால் இணைந்த இருவரும் கந்தர்வ விவாஹம் செய்து கொண்டனர்.

உலகையே மறந்து மணிக்கணக்கில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பத்மாவதி ராஜகுமாரனிடம் கேட்டாள் "நான் காட்டிய ஜாடைகளின் உட்பொருளையெல்லம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்களே, எப்படி?" என்றாள்.

ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் தனது நண்பனைப் பற்றி எடுத்துச் சொன்னான். "அன்பே! எமது அரசின் மந்திரி குமாரனாகிய புத்திசரீரன் என்னுடன் வந்துள்ளான். அவன் என் நண்பன். எனக்கு நீ அனுப்பிய சங்கேத மொழிகள் எதுவும் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் அவன் தான் சாதுர்யமாக சிந்தித்து அத்தனைப் புதிர்களையும் புரியவைத்தான். அதனால் தான் என்னால் உன்னைச் சந்திக்க முடிந்தது" என்றும் கூறினான்.

இதைக் கேட்ட பத்மாவதியின் முகம் மாறியது. ஒரு பெரிய அரசாங்கத்திற்கு ராஜாவகப்போகும் ஒரு ராஜகுமாரன் தனது அந்தரங்க விஷயத்தில் கூட நண்பனைச் சார்ந்திருக்கிறானே என்று எண்ணத்துவங்கினாள்.

நண்பனின் சொல்லே வேதவாக்கு என்று ராஜகுமாரன் நம்பினால், நாளை நண்பனுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் அவன் சொல் கேட்டு இவர் என்னை விலக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலானாள். இதனால் ராஜகுமாரனிடம் சுதந்திரமாகப் பழகமுடியாது என்றும், மந்திரி குமாரனுக்கும் தாம் நல்லவளாக நடந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் வந்து விடும் என்பதையும் கணக்குப் போட்டாள்.

ஆக ராஜகுமாரன் நிரந்தரமாக தம்மீது காதலுடன் இருக்க வேண்டுமானால், மந்திரி குமாரன் அவருடன் இருக்கக் கூடாது. ஆனால் புத்திசரீரனை முழுவதுமாக நம்பும் ராஜகுமாரனிடமிருந்து அவனை எளிதில் பிரிக்கவும் முடியாது. எனவே எப்படியாவது புத்திசரீரனை தீர்த்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று க்ஷனப் பொழுதில் தீர்மானித்து விட்டாள் பத்மாவதி.

அவள் ராஜகுமாரனைப் பார்த்து "அன்பே! நீண்ட நேரம் ஆகிவிட்டதால். நீங்கள் இப்போது புறப்படுங்கள். நாளை நேரம் பார்த்து நானே பணிப்பெண்களை அனுப்பி உங்களை அழைத்து வரச் செய்கிறேன்" என்றாள்.

வீட்டுக்குச் சென்ற ராஜகுமாரன், புத்திசரீரனிடம் பெரு மகிழ்ச்சியுடன் நடந்தவை யாவற்றையும் சொல்லத்துவங்கினான். அப்போது சங்கேத மொழிகளை விளக்கியது யாரென்பதையும் அவளிடம் சொன்னதாய்ச் சொன்னான்.

இதைக் கேட்ட புத்திசரீரன் அதிர்ச்சியுற்றான். அவன் மேலும் கூறினான் "நண்பா! இது முறையில்லை. நல்லதும் இல்லை. உங்களின் அந்தரங்கத்தை அறிந்தவன் நான் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியிருக்கும். இது எங்கே போய் முடியுமோ!" என்றான்.

அதற்கு ராஜகுமாரன் அவள் மிகவும் நல்லவள். அவ்வாறு நினைக்க மாட்டாள் என்றும் வாதிட்டான்.

மறுநாள் காலை பத்மாவதியின் பணிப்பெண்கள் கிழவியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கள் வணக்கத்தை ராஜகுமாரனுக்குச் சொன்னார்கள். பின் புத்திசரீரனிடம், "பத்மாவதி தங்களிடம் தனது மரியாதையை தெரிவிக்கச் சொன்னார்கள்" என்றும் கூறினார்கள். பின்னர் ஒரு தட்டில் பழம் பக்ஷனங்கள் வெற்றிலை முதலியவைகளை வைத்து விட்டு, ராஜகுமாரனை நோக்கி பத்மாவதி அவனுக்காக உணவு ஏதும் உட்கொள்ளாமல் காத்திருப்பதாகவும் நீங்கள் உடனே வரலாம் என்றும் தெரிவித்து நகர்ந்தனர்.

அப்போது ராஜகுமாரன் கூறினான் "பார்த்தாயா நண்பா! பண்புள்ள பெண்ணாய் இருப்பதால் உனக்கு தனது மரியாதையைத் தாம்பூலத்தட்டில் வைத்து தெரிவிக்கிறாள்." என்றான்.

அப்போது புத்திசரீரன் புன்னகையுடன் கூறினான் "பொறு நண்பா, இப்போது பார் வேடிக்கையை" என்று சொன்னபடி பலகாரத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து அருகில் இருந்த நாய்க்கு போட்டான். அதைத்தின்ற, நாய் அவ்விடத்திலேயே விழுந்து துடித்து இறந்து போனது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

1 comment:

பின்னோக்கி said...

தொடருங்கள் நன்றாக இருக்கிறது.