"குரு முகமாக கற்க சொன்னிங்க என் குருவை எவ்வாறு நான் தரிந்துகொள்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்க!" என்று நண்பர் அகோரி கேட்டிருந்தார்!
நண்பரே எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்!
குருவின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களது அறிவுரை. ஆனால் தற்காலத்தில் ஆன்மீக தேடலுக்கு விடை கொடுக்கக்கூடிய குரு யார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமானகாரியம். குரு என்பவர் யார் என்பதிலேயே நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
யார் குரு?
தம்மைத்தாமே யோகி என்று கூறிக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் குருவாகிவிடுவார்களா?
தம்மைத்தாமே பரமஹம்சர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக விளக்கங்களைக் கூறி பிரபலமடைபவர்கள் குருவாகிவிடுவார்களா? அல்லது காவியும் கமண்டலமும் கொண்டவர்களும், ஜடாமுடிக்காரர்களும் குருவா?
வேதங்கள், சாஸ்திரங்கள் என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு கேட்கும்போதெல்லாம் விளக்கம் சொல்லி புரியவைப்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?
ஆனால் படித்தவைகளுக்கு விளக்கம் சொல்வது தான் ஒரு குருவாக இருக்கவேண்டியவரின் தகுதி என்றால் அதற்கு கற்றரிந்த பேராசிரியர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?
மூச்சுப் பயிற்சி, யோகாசனம் சொல்லித்தருகிறேன். உங்கள் மன அமைதிக்கு வழி கூறுகிறேன் என்று அழைத்து உடலாசனங்களைச் சொல்லித்தருபவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாமா?
மூச்சுப் பயிற்சி, யோககலைகளில் சிறந்து விளங்கி அதைச் சொல்லித்தரும் தகுதியைக் கொண்டவரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம் எனில் அதற்கு ஒரு உடற்பயிற்சியாளர் போதுமே! அவரை ஆன்மீக குரு என எப்படிக் கொள்ளலாம்?
ஆனால் இவை யாவும் ஆன்மீகத்திற்கான படிக்கட்டுகளே! ஆன்மீக சாதகனுக்கான பாடங்களே! சாதகமும் தேடலும் நமக்குள்ளே நடக்கவேண்டும்! அதற்கு இவைகள் உதவும்.
அக்காலத்தில் குரு எனப்படுபவர்கள் சாதகங்கள் பல செய்து தவம் புரிந்து
தான் உணர்ந்த ஆன்மீக அனுபவங்களை அவ்வழியே கற்றுத்தந்து ஆன்மீக மார்கத்திற்கு சிறப்பாக வழிகாட்டுவார்கள் எனப்படித்திருக்கிறோம். அனுபவத்தை அப்படியே பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பானதாகவும் நிதர்சனத்தை உணர்த்துவதாகவும் உண்மையை மெய்வழியில் விளக்குவதாகவும் இருக்கும். பரம்பரையாக இதைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இக்காலத்தில் படித்த விஷயங்களை கதாபிரசங்கம் மட்டுமே செய்துவிட்டு தன்னைத் தானே யோகி எனவும், பரமஹம்சர் எனவும், குருஜி எனவும் அழைத்துக்கொள்பவர்கள் அதிகரித்திருப்பதால் சாதகத்தின் மூலமாக கற்றுணர்ந்து அதை அப்படியே பயிற்சியாக கொடுக்கும் குரு யாரென்பது தெரியாமல் போய்விடுகிறது.
ஆக, சாதகம் செய்த குருவும் அரிது, அவர் வழியே சாதகம் செய்து வாழ்கை ஓட்டத்திலிருந்து விலகிப் போவது நமக்கும் அரிது. ஆக நமக்கு வாய்த்தது கர்மயோகம் தான்! கீதையைப் படியுங்கள்!
முதலில் ஒரு அடிப்படையை இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டும்! இந்த பிரபஞ்சத்தில் நமக்கு துளியும் தெரிந்திராத ஒரு விஷயத்தை யாரும் நமக்குச் சொல்லித்தந்துவிடப்போவதில்லை!
பிறந்த குழந்தைக்கு பால் குடிக்கவும், வளர்ந்த மனிதனுக்கு காமுறவும் யாரும் கற்றுக்கொடுப்பதில்லல!
பிறப்பின் போதே அந்தராத்மாவில் படிந்திருக்கும் கற்பிதங்களை பிறந்தவுடன் நாம் செயல்படுத்திப் பார்க்கிறோம் அவ்வளவே!
ஆன்மீகமும் அப்படியே! நாம் சிலரிடம் கேள்வி கேட்டு அவர் நமக்கு விளக்கம் கொடுக்கும் போது "ஆங்! நானும் அப்படித்தான் நினைத்தேன்...!" என்போம். காரணம் அதுபற்றிய கேள்வியும் பதிலும் நம் மனதில் ஏற்கனவே பொதிந்திருக்கும். அதை வெளிக்கொண்டுவர ஒரு கருவி தேவைப்பட்டிருக்கும். நாம் யாரிடமிருந்து பதில் பெறுகிறோமோ அவரை கருவியாக்கிக் கொண்டோம், அவ்வளவுதான்!
குருவும் அப்படியே!
பாரதப்போரில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணனும் அதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனனும் அவ்வழியே உரையாடியவர்கள் ஆவர். அர்ஜுனனின் மனதிலும் ஏற்கனவே ஆன்மீகமும் பிறவி மறுபிறவி பற்றிய சிந்தனைகளும் இருந்திருக்கும். போருக்கான அந்த இக்கட்டான சூழலில் அதனை அவன் உணர மறுக்கிறான். அதனால் மனம் பிறழ்கிறான். கண்ணன் உள்ளே புகுந்து ஏற்கனவே அர்ஜுனன் மனதில் பொதிந்திருக்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறான்.
"அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்."
என்று அவன் அந்தராத்மாவின் ஒளியைத் தூண்டி விடுகிறார்.
இதனால் விழிப்படைந்த அர்ஜுனன் கண்ணன் வழியிலேயே போர் செய்து
வெற்றியும் பெருகிறான்.
ஆன்மாவைப்பற்றி அறிய முற்படுவதே ஆன்மீகம். அறிதல் என்றால் தெரிந்து கொள்ளுதல் அல்ல. உணர்தல். நமக்குள் ஆன்மா இருக்கிறது என்பதை உணர்வதும் நாம் ஆன்மா என்பதை உணர்வதும் ஆன்மீகம். அதை நமக்கு உணர்த்துபவர்கள் யாரோ அவரே குரு!
எப்படி உணர்வோம்!
ஆன்மா ஒரு மகாசக்தி! அதே நேரத்தில் மிகவும் நுண்ணிய பொருள்! அதன் அதிர்வுகளை நமக்கு உணர்த்துபவர் யாரோ அவரே குரு! ஒரு தொடுதல் மூலம், ஒரு பார்வை மூலம், ஒரு அருகாமையின் மூலம் நம்மிடம் யார் அதிர்வை உருவாக்குகிறாரோ, நம் உச்சந்தலையில் மொத்த சக்தியும் ஒன்று சேர மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு நம் உடலில் அதிர்வை உண்டாக்கி நம் சக்தியை நமக்கே அடையாளப்படுத்திவிட்டு எதுவும் தெரியாத மாதிரி யாரால் அமர்ந்திருக்க முடியுமோ அவரே குரு!
அர்ஜுனனுக்கு கண்ணன் அவ்விதமே காட்சியளித்தான். தன் சுயரூபங்களின் மகாசக்தியை வெளிப்படுத்தி அர்ஜுனனின் அந்தராத்மாவை அதிரவைத்தான்.
அப்படி ஒரு குரு உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதன் பின் நீங்கள் இச்சமூகத்தில் சஞ்சரிக்க மாட்டீர்கள்!
அப்படி ஒருவர் உங்கள் ஆன்மாவை அதிரவைத்தாரென நீங்கள் உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்! ஏனெனில் தேடுதல் எனக்கும் உண்டு!
அப்படி ஒரு குரு கிடைக்கும் வரை கீதையும், உபநிஷத்துமே உங்களது குருவாக இருக்கட்டும்!
உங்கள் சுய சோதனைகளும் சாதகங்களுமே உங்கள் குருவாக இருக்கட்டும்!
அதுவரை நீங்கள் மன அமைதியுடன் ஆன்மாவை உங்களுக்குள்ளே தேட துவங்குங்கள்!
உங்கள் தேடுதலே உங்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.
தேடுதல் தொடரட்டும்!
தேடுதல் தொடரும் வரை எனக்கு கண்ணனே குரு! உங்களுக்கு?
.