Monday, March 21, 2011

ஏ குருவி , சிட்டுக் குருவி!





முன்பெல்லாம் அதிகாலை ஆனால் காக்கை சப்தத்தை விட வீட்டு தின்னையில் சிட்டுக்குரிவியின் சப்தம் நம்மை எழுப்பும். இந்த அருமையான சின்னப் பறவை காணாமல் போவது நம் உறவுகளில் ஒன்றை கண் முன்னே தொலைத்துவிட்டோம் என்ற வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. அது பற்றிய ஒரு செய்தி இதோ!

--------------
தினமலர்: மார்ச் 21,2011

பழநி : சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையும் என, சிட்டுக்குருவி தினத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.பழநி மலை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் அக்ஷயா கலையரங்கில் "குருவிகள் தினம்' கொண்டாடப்பட்டது. பழநி மலை பாதுகாப்பு மன்ற தலைவர்கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.இங்கு பேசியவர்கள் குறிப்பிட்ட விபரங்கள்: 
60 கோடி மொபைல் போன்கள் உள்ளன. இதற்காக 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

--------------------------


அந்த காலத்தில் வீட்டின் மொட்டை மாடியில் புறா கூடு போல ஒரு மாடம் கட்டி வைப்பார்கள். பறவைகள் இளைப்பாறிச் செல்லவும் கூடு கட்டவும் அது உதவும். அது போல இக்காலத்திலும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் குருவி கூடு கட்ட உதவுவது போல சிறி மாடம் ஒன்றை வீட்டு மொட்டை மாடியில் கட்டி வைக்கலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கூட மரத்தாலான கூடு போல செய்து மொட்டை மாடி ஓரத்தில் வைக்கலாம். குடியிருப்புப் பகுதிகளில் செல் போன் டவர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!

அது சரி, குருவி என்கிற இனமே அழிந்து போகும் அளவிற்கு செல்போன் டவர் அலைகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? பாதிப்பு நிறைய நமக்குத் தெரியாமலேயே ஏற்பட்டுக் கொண்டு இருக்கலாம். அது பற்றி அறிவியலாளர்களுக்கும் அரசுக்கும் கூட தெரிந்திருக்கலாம். ஆனால் இப்போதே வெளியிட்டால் இவர்கள் தொழில் பாதிக்கும் என்று வெளியிடமாட்டார்கள்.  மிக வித்தியாசமான நோயினால் மனித இனம் ஒரு கட்டத்தில் பாதிக்கப்படும் போது வெளியே சொல்வார்கள். அறிவியலின் வளர்ச்சியை அனுபவிக்கும் நாம் அதையும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

சரி நமக்குத்தான் அந்த தலையெழுத்து! சிட்டுக்குருவிக்கு என்ன தலையெழுத்து!

நம்மால் புலியைக் காப்பாற்ற முடியுமோ இல்லையோ, சிட்டுக்குருவியைக் காப்பாற்ற முடியும் என்றே நினைக்கிறேன். முயற்சி செய்வோம்! நமது உடன் பிறப்புக்களான சிட்டுக் குருவிகளைக் காப்போம்!



.

4 comments:

Pandi A said...

திரு ராம்,

மனதில் நினைத்து புழுங்கி கொண்டு இருந்தேன் இந்த செய்தியை படித்த போதிலிருந்து !
எனது சிறுவயது ஞாபகங்கள் வந்து வந்து செல்கின்றது.
சின்ன வயதில் சிட்டுகுருவிக்கு அரிசி இறைத்து என் தாயாரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.
எங்கள் வீடு மேற்கூரையிலும் ஒரு பெரிய குடும்பம் (சிட்டு குருவியின் ) வாழ்ந்து வந்தது.
இப்பொழுது மிகவும் சிரமம் ...கிராம புறங்களிலும் இந்த பறவை இனம் காணாமற் போய்விட்டது அல்லது முன்பு போல பார்க்க முடியவில்லை.

இந்த செய்தியை படித்த போது தங்களுடைய மன நிலையும் அவ்வாறே இருந்துள்ளது போல, எழுதி தீர்த்து கொண்டீர்கள்.

கட்டுரைக்கு மிக்க நன்றி ராம்.
அன்புடன்,
பாண்டி

R.Gopi said...

உண்மை தான் பாஸ்....

அழகாய் சத்தமெழுப்பி, சிறு சிறகுகளை விரித்து பறந்து திரியும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் எங்கே??

இது பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இதோ :

இன்று எதை எதை இழந்தோம் !!!
http://edakumadaku.blogspot.com/2010/07/blog-post.html

hayyram said...

பாண்டி, நான் கூட சிறுவயதில் மொட்டை மாடியில் அட்டைப் பெட்டியால் கூடு கட்டி அதன் ஓட்டை வழியே சிட்டுக் குருவி உள்ளே போவதையும் மீண்டும் மூக்கை நீட்டி வெளியே வந்து பறந்து போகும் அழகையும் , கையில் அரிசி வைத்து நம் கையிலிருந்தே கொத்தித் தின்பதை பார்த்தும் ரசித்திருக்கிறேன். அவைகள் உண்மையிலேயே நம் உடன்பிறப்புக்களே! அவைகளின் இழப்பு வருத்த்தை கொடுக்கிறது. அறிவியல் மூலமாக நாம் இழக்கும் பல இயற்கை நுண் விஷயங்களில் கண்ணுக்குத் தெரிந்த முக்கியமான அழிவு இது என்றால் மிகையாகாது.

hayyram said...

கோபி உங்கள் பதிவை ரசித்தேன்! அலைபேசி அலைகளில் சிறகொடிந்த பறவை நம் சிட்டுக்குருவி. வருத்தம் தான்!