குகை முழுவதும் சிலந்திகளின் வலைகளால் பின்னப்பட்டிருந்தன. கூரிய வாளை வெளியே எடுத்து அத்தனை வலைகளையும் வெட்டிப் பிய்த்துக்கொண்டு உள்ளே சென்றான். முனிவன் சொன்னதைப் போலவே ஒரு முருங்கை மரமும் தென்பட்டது.
அதன் அருகே மெதுவே சென்ற விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான மிக உயர்ந்த முருங்கை மரம். அதில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது பெரிய உருவத்துடன் ஒரு வேதாளம்.
அங்கே பெருத்த நிசப்தம் நிலவியது. அசைவற்ற நிலையில் தொங்கியது வேதாளம். விக்கிரமாதித்தன் ஒரு கனம் திகைத்தான். வேதாளத்தின் அருகிலே மெதுவாக அடியெடுத்து வைத்தான். அசைவில்லாமல் அமைதியாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தின் முகத்திற்கருகே குனிந்து பார்த்தான்.
சட்டென்று கண்களை அகலத்திறந்த வேதாளம் லக லக லக லக வென சப்தமாக அலறியது. வேதாளம் கர்ஜனை செய்த சப்தம் காடு முழுவதும் எதிரொலித்தது. சரசரவென நிமிர்ந்த வேதாளம் குகை முழுவதும் பறந்து அலறியபடி சுற்றியது. பிறகு முருங்கை மரத்தின் உச்சியில் சென்று நின்று கொண்டு விக்கிரமாதித்தனை ஏளனமாகப் பார்த்தது.
கடும் கோபத்துடன் விக்கிரமாதித்தன் மீது மரக்கிளைகளை ஒடித்து எரிந்தது. விக்கிரமாதித்தன் சற்றும் பயப்படாமல் மரத்தின் மீதேறி வேதாளத்தை பிடிக்க முயன்றான். வேதாளம் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து விழுந்தது.
விக்கிரமாதித்தனும் விடாமல் கீழிறங்கி வந்தான். வேதாளம் சளைக்கவில்லை. பருத்த உடலைக்கொண்டு விக்கிரமாதிதனின் உடலை இறுக்கிப் பிடித்து தலைகீழாய்ச் சுற்றி வீசியது. தூரச்சென்று விழுந்த விக்கிரமாதித்தன் அசராமல் எழுந்து ஓடி வந்தான்.
வேதாளத்தின் மீது மிக ஆக்ரோஷமாக மோதி அதன் கழுத்தில் தன் கைகளிரண்டையும் சுற்றி சங்கிலியைப் போல பிடித்துக் கொண்டான். சும்மா விடுமா வேதாளம். தன்னைத்தானே சரசர வென சுற்றி உடலைச் சிலுப்பியது. அவ்வளவு தான் மீண்டும் விக்கிரமாதித்தன் குகையின் மூலையில் சென்று சடேரென விழுந்தான்.
இந்த முறை விக்கிரமாதிதனின் உடலில் வலி ஏற்பட்டது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத, நினைத்ததை முடிக்கும் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தைப் பிடிப்பதில் உறுதியாக இருந்தான்.
அப்போது வேதாளம் மறுபடியும் மரத்தின் மீது ஏறத்துவங்கியது. இம்முறை விக்கிரமாதித்தன் கடும் கோபத்துடன் ஒரே சுழற்றலில் அகன்ற முருங்கை மரம் முறியுமாறு வாளைச் சுளற்றி வீசினான்.
அவனது பராக்கிரம பலத்தால் முருங்கை மரம் சட சட வென்ற சத்ததுடன் முறிந்து விழுந்தது. முருங்கை மரத்தில் பாதியில் ஏறிக்கொண்டிருந்த வேதாளம் முறிந்து விழுந்த முருங்கை மரத்தின் அடியில் வசமாகச் சிக்கிக் கொண்டது. அதனால் விருட்டென்று பறக்க முடியாமல் தடுமாறியது. ஆனாலும் பலசாலியான வேதாளம் முருங்கை மரத்தை அப்படியே தூக்கி எறிய முற்பட்டது.
அதற்குள் விக்கிரமாதித்தன் மின்னல் வேகத்தில் சென்று வேதாளத்தை இறுகப் பிடித்துக் கொண்டான். மரத்தின் பாரமும் விக்கிரமாதித்தனின் வேகமும் தடுமாற்றத்தைக் கொடுத்ததால் வேதாளம் சற்று அமைதியாக நடப்பதை கவனிக்கத் துவங்கியது.
விக்கிரமாதித்தன் வேதளத்தை அருகே இருந்த கயிறு கொண்டு இறுகக் கட்டினான். பின்னர் மரத்தை அவனே அகற்றிப் போட்டு வேதாளத்தைத் தூக்கி தோளில் போட்டு நடக்கலானான்.
இப்போது வேதாளம் பேசத்துவங்கியது. "சளைக்காத வீரனே! நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே உன் தலை வெடித்து நீ இறக்கும்படிச் செய்ய முடியும். உன் வீரமும் வேகமும் என்னை கட்டுப்பட வைத்து விட்டது. சொல்! நீ யார்? எதற்க்காக என்னோடு சண்டையிட்டாய்? என்னை இவ்வளவு பிரயத்தனப்பட்டு எங்கே கொண்டு போகிறாய்?" என்றது.
விக்கிரமாதித்தனும் வேதாளத்திடம் மறுமொழியளித்தான். "ஏய் அடங்காத வேதாளமே! என் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினியின் அரசன். உன்னை கொண்டுவரும்படி ஒரு முனிவர் எனக்கு உத்தரவிட்டதால் நான் உன்னைத் தூக்கிச் செல்கிறேன்!" நீ முரண்டு பிடிக்காமல் என்னுடன் வர வேண்டும்" என்றான்.
விக்கிரமாதித்தனின் பேச்சை மதித்த வேதாளம் அவனுக்கு ஒரு நிபந்தனை விதித்தது. "வீரனே விக்கிரமாதித்தா! நான் உன்னுடன் வருவதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அதன் படி நீ நடந்தால் தான் வருவேன். சம்மதமா சொல்?"
"என்ன நிபந்தனை?" என்றான் விக்கிரமாதித்தன்.
வீரனே "வழி நெடுகிலும் நீ வாய் திறந்து பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நான் மீண்டும் பறந்து போய் மரத்தில் தொங்கி விடுவேன். பிறகு போராட்டம் உனக்குத்தான் எனக்கில்லை. அதே நேரத்தில் நான் வழியில் உனக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவேன். நீ அதனை நன்றாகக் கேட்க வேண்டும்."
"அப்படியே செய்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.
"பொறு, நான் வெறுமனே கதை மட்டும் சொல்ல மாட்டேன். கதையின்முடிவிலே புதிரான கேள்வி ஒன்று கேட்பேன். அதற்கு நீ சரியாக பதில்சொல்ல வேண்டும். நன்றாகக் கேள் வீரனே! நீ தவறாகப் பதில் சொன்னால் உன் தலை சுக்கு நூறாக வெடுத்துச் சிதறிவிடும். என் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாயா? அல்லது நான் இப்போதே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளவா?" என்றது.
எப்படியாவது வேதாளத்தை அந்த இடத்தை விட்டு கொண்டு போய் விட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டதால் விக்கிரமாதித்தன் வேதாளத்தின் நிபந்தனையை மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான்.
விக்கிரமாதித்தன் வேதாளத்தை முதுகில் சுமந்தவாறு குகையை விட்டு வெளியேறி
காட்டுக்குள் நடக்கலானான். இருண்ட காட்டில் அமைதியான பாதையில் வேதாளத்துடன்
தனியே வந்து கொண்டிருந்தான். சற்று தூரம் சென்ற பின் வேதாளம் பேசத்துவங்கியது.
"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின்
முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.
கேட்கலாம்..பொறுங்கள்...
லக லக லக லக லக லக.....