Wednesday, September 2, 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்


தியான நிலையே மிக உயர்ந்த நிலை என்று யோகிகள் கூறுகிறார்கள். மனம் புறப் பொருட்களை ஆராயும் போது அந்தப் பொருட்களுடன் தன்னை

ஒன்றுபடுத்திக் கொள்கிறது. அந்தப் பொருட்களின் மயமாக ஆகிவிடுகிறது. அதாவது நீ எதை அதிகம் சிந்திக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற கூற்றுப்படி மனம் செயல்படவே செய்யும்.

பண்டைய இந்தியத் தத்துவ ஞானி ஒருவர் இதற்கு ஓர் உவமை கூறியுள்ளார்: மனிதனின் ஆன்மா ஒரு பளிங்கு போல் உள்ளது. பளிங்கு தன் அருகில் உள்ள எந்த நிறத்தையும் ஏற்றுக் கொள்கிறது அது போலவே, ஆன்மா எதனுடன் சேர்ந்தாலும் அதன் தன்மையை அடைகிறது. நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி, நாம் யார் என்பதை மறந்து விட்டோம். புற அழகில் மயங்கி அகத்தைப் பற்றி நினைக்கத் தவறுகிறோம்.

அழியக்கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன.
நமது கவலை, சஞ்சலம், தொந்தரவு, தவறு, பலவீனம், தீமை எல்லாம் நாம் உடம்பே என்று கருதும் ஒரு பெரும் தவறிலிருந்தே உண்டாகின்றன.

ஆக தியானம் இந்த மனம் வேறு உடல் வேறு என்ற நிலையை உணர்த்தும் அற்புத மூலமாக இருக்கிறது. உங்களுக்கு தியானத்தில் மூலத்தைச் சொல்லித்தருகிறேன். நல்லவைகளை நினைத்து தியானித்தால் நன்மையே உண்டாகும்.

இதோ தியானிக்க சூத்திரம்..

"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவரான அந்தப் பரம் பொருளின் மகிமையைத் தியானிக்கிறேன். அவர் என் உள்ளத்தை ஒளிரச் செய்வாராக!"

மேலே நீங்கள் படித்தது காயத்ரீ மந்திரத்தின் திரண்ட பொருளாகும்.

"ஓம் பூர்புவஸ்வ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி! தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

இதனைப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் வரை தியானம் செய். உனக்குக் கிடைக்கும் அனுபவக் காட்சிகளை உன் குருவைத் தவிர யாரிடமும் சொல்லாதே.

இயன்றவரை குறைவாகப் பேசு.

நல்லவற்றின் மீது உன் நினைவுகளை வைத்திரு. நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

புனிதமானவற்றை நீ தியானிப்பது எல்லா மன அழுக்குகளையும் எரித்துவிட உதவும்.

- சுவாமி விவேகானந்தர்.

2 comments:

தேவன் said...

"இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவரான அந்தப் பரம் பொருளின் மகிமையைத் தியானிக்கிறேன். அவர் என் உள்ளத்தை ஒளிரச் செய்வாராக!"


நன்றி அண்ணா!

hayyram said...

தம்பி கேசவன்,
வாழ்க வளமுடன்