Thursday, March 11, 2010

ஜாதி புத்தி! அல்லது, குல தர்மம் - 2





பண்டைய காலங்களில் மக்கள் தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு."

"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே,
மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்"
என்கிறார் வள்ளுவர்.

மேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..

"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்"

அதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த
இனத்தாலே உண்டாகும் என்கிறார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால்
அறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை.
வாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும்
ஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

இன உணர்வு எனப்படும் குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

ராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.
ராவணனின் அதர்மச் செயலை கண்டு பொறுக்காமல் அவனிடமிருந்து விலகி ராமனை நோக்கி அடைக்கலமாக வந்தடைகிறான் விபீஷனன்.

ராமன் விபீஷனனை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சுக்ரீவனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவன் விபீஷனனை சந்தேகிக்கிறான். ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்.

அப்போது ராமன் சுக்ரீவனைப் பார்த்துக் கூறுகிறார். "சுக்ரீவா! நான் அடைக்கலமாக வந்த ஒரு புறாவிற்க்காக தன் கால் சதையையே வெட்டிக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் குலத்தில் வந்தவன். அடைக்கலமாக வந்தவனைக் காத்தல் எனது குல தர்மம். அதிலிருந்து நான் ஒருகாலும் வழுவ மாட்டேன்" என்றும் கூறுகிறார்.

மேலும் ராமன் சுக்ரீவனுக்கு ஒரு கதையைச் சொல்லுகிறார்.


"சுக்ரீவா! உனக்கு ஒரு கதையை எடுத்துச் சொல்கிறேன் கேள். அது ஒரு குரங்கின் கதை. நீ அந்த குரங்கின் குலத்திலிருந்தே உதித்தவன். அந்த குரங்கின் கதையைக் கேட்ட பிறகு நீ அந்தக் குலதர்மத்தில் வந்தவன் தானா என்பதை நீயே சொல்" என்று கூறி அந்தக் கதையைக் கூறத்துவங்குகிறார்.

ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு புலி துரத்தியது. அந்தப் புலியிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். புலி மரத்தின் மீது ஏறவில்லை. அது மரத்தடியிலேயே அவனுக்காக காத்திருக்கத் துவங்கியது.

ஆனால் இந்த ஆசாமியோ, எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை. நான் மரத்தின் மீதே அமர்ந்து தன்னைக் காத்துக் கொள்வேன் என்று பிடிவாதமான எண்ணத்துடன் அமர்ந்து கொண்டான். ஆனால் அவன் மரத்தின் மேலே சற்றி அன்னாந்து பார்க்கும் போது அதில் ஒரு பெரிய மனிதக்குரங்கு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

ஏற்கனவே புலியிடமிருந்து தப்பித்தோமென்றிருந்தால், இப்போது மனிதக் குரங்கிடம்
மாட்டிக்கொண்டது போலிருந்தது அவனுக்கு. அவன் பயத்துடன் அந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருக்கையில் குரங்கு அவனிடம் பேசத்துவங்கியது.

மனிதா நடுங்காதே! நான் உன்னை ஒருநாளும் கைவிட மாட்டேன். நீ என் வீடு தேடி
வந்திருக்கிறாய். வீடு தேடி வந்தவனைக் கைவிடுவது எனக்கு வழக்கம் கிடையாது. எனது முன்னோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தது, யார் வீடு தேடி வந்தாலும் அவர்களை கைவிட்டுவிடக்கூடாது. ஆபத்திலிருந்து காக்க வேண்டும் என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நீ கவலைப்படாமல் உட்கார்ந்திரு, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்" என்று குரங்கு கூறியது.


மனிதனும் கொஞ்சம் பயம் விலகியவனாய் நிம்மதியடைந்தான். ஆனால் கீழே புலி கத்துக்கொண்டு இருக்கிறதே. அதற்கு எப்படியும் இந்த மனிதனைத் தின்னாமல் போக மனமில்லையே. அது இவர்களின் செய்கைகளை கவனித்துக் கொண்டே வந்தது.

குரங்கும் மனிதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதாக தீர்மானித்து, குரங்கு உறங்கும் போது மனிதன் விழித்திருந்து பார்த்துக்கொண்டிருப்பதும் மனிதன் உறங்கும் போது குரங்கு விழித்திருந்து அவனைப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புலி இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டாலொழிய நான் பசியாற முடியாது என்று எண்ணி ஒரு திட்டம் போட்டது.

அதனால் மனிதன் முழித்துக் கொண்டிருக்கும் போது புலி மனிதனைப் பார்த்துப் பேசியது.."ஏ மனிதனே! இந்த குரங்கை நம்பி நீ உன் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறாயே! அது இப்போது ஒரு மாதிரி இருக்கும். விடிந்த உடன் ஒருமாதிரி ஆகிவிடும். குரங்கு புத்தி என்பது தெரியாதா உனக்கு. அதனால் உன் உயிரை நீ காத்துக் கொள்ள நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்" என்றது.

மனிதன் அதை கவனித்தான். புலி கூறியது "இப்போது குரங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது.
நீ ஓசைப்படாமல் அதைக் கீழே தள்ளி விடு. நான் அந்தக் குரங்கைத் தின்று பசியாறி விடுகிறேன். உன்னை விட்டு விடுகிறேன். நீயும் தப்பித்துப் போய்விடு" என்றது வஞ்சகமாக.


மனிதனுடைய புத்தி நமக்குத்தான் தெரியுமே! குரங்கே பரவாயில்லை என்றாகிவிடுமே!

மனிதன் யோசித்தான். புலி சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. குரங்கை தள்ளி விட்டு
விடுவோம். அது போய் மாட்டிக்கொள்ளட்டும். நாம் தப்பித்துக் கொள்வோம் என்று நினைத்தான். தனக்கு அடைக்கலம் கொடுத்த குரங்கை மரத்தின் மீதிருந்து புலியிடம் தள்ளிவிட்டான். உறங்கிக் கொண்டிருந்த குரங்கு உருண்டு விழுந்தது. விழும் வேகத்திலேயே விழித்துக் கொண்ட குரங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தது. அதற்கு மனிதன் தான் தன்னைத் தள்ளி
விட்டிருக்கிறான் என்று புரிந்து போனது.

இனிமேல் புத்திசாலித்தனத்தோடு நடந்தால் தான் நாம் தப்பிக்க முடியும் என்று தீர்மானித்தது குரங்கு. கீழே விழுந்த குரங்கு உடனேயே புலியிடம் பேச்சுக்கொடுக்க துவங்கியது. புலியும் மெதுவாக குரங்கிடம் சென்று கூறியது "எனக்கு குரங்கு மாமிசம் பிடிக்கவே பிடிக்காது. எனக்கு மனிதனின் மாமிசம் தான் பிடிக்கும். ஆனால் ஏன் உன்னைத் தள்ளி விடச்சொன்னேன் தெரியுமா? மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகத்தான்.

மனிதனுடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்று இப்போது பார்த்தாயா? அவனுக்கு
அடைக்கலம் கொடுத்த உன்னையே தலைகுப்பற கீழே தள்ளி விட்டுவிட்டான். அவனுக்குப்
போய் நீ அடைக்கலம் கொடுத்திருக்கிறாயே! அதனால் நீ ஒரு காரியம் செய். எனக்கு எப்படியும் உன் மாமிசம் பிடிக்காது. நர மாமிசம் தான் பிடிக்கும். எனவே உன்னை இப்போது விட்டு விடுகிறேன். நீ மேலே சென்று அந்த மனிதனைக் கீழே தள்ளி விடு" என்றது.

குரங்கும் தலையை ஆட்டியது. கண்டிப்பாக நான் அவனைத் தள்ளி விடுகிறேன். இனிமேலும் அவனுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேனா?" என்று கூறிவிட்டு புலியிடம் இருந்து விடுதலைப் பெற்றுக்கொண்டு மரத்தின் மீது ஏறியது.


குரங்கு மரத்தின் மீது ஏறி வர வர மனிதன் நடுங்க ஆரம்பித்தான். குரங்கு நம்மைப் பிடித்து தள்ளிவிடப்போகிறது என்று பயந்தான். ஆனால் குரங்கு அப்படிச் செய்யவில்லை. மேலே ஏறி மனிதனுக்குப் அருகிலே சென்று அமர்ந்து அவனைத் தடவிக்கொடுத்து, "கவலைப்படாதே உன்னை நான் ஒருநாளும் காட்டிக் கொடுக்க மாட்டேன், என் உயிரைப் பணையம் வைத்தாவது உன்னை நான் காப்பேனே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டேன். இது எங்கள் குல தர்மம். எங்கள் மூதாதையர்கள் கற்றுக்கொடுத்தது" என்று குரங்கு பேசியது.

மனிதன் திரும்பிக் கேட்டான் "ஆனால் புலியிடத்தில் என்னை தள்ளிவிடுவதாக ஒத்துக்
கொண்டு வந்தாயே! அதைக்கேட்டுத்தான் பயந்தேன்" என்றான்.

அதைக்கேட்ட குரங்கு "அப்படிச் சொன்னால் தானே புலி என்னை விடும். அதனால் தான் அப்படிச் சொன்னேனே தவிற உன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது" என்றது.

மனிதன் வெட்கிப் போனான்.

இதைச் சொல்லிவிட்டு ராமன் சுக்ரீவனைப் பார்க்கிறான். "ஆக நிலையில்லாத குணம் கொண்டது என்றென்னக்கூடிய விலங்கினமாம் குரங்கினமே தனக்கென்று ஒரு குல தர்மம் இருப்பதை அறிந்து அதை விடாமல் பற்றிக் கொண்டு தர்மத்தைக் கடைபிடிக்கிறது என்றால் சுக்ரீவா நீ அந்தக் குலத்தில் இருந்து வந்தவன் தானே!

அப்படி இருக்கும் போது நம்மை அடைக்கலமாக வந்திருப்பவனைக் கைவிடவேண்டும் என்று நீ பேசுகிறாயே, இது உனக்கே ஞாயமாக இருக்கிறதா?' என்று ராமன் சுக்ரீவனிடம் கேட்டார். அப்போது தான் சுக்ரீவனுக்கு சமாதானம் உண்டாகி விபீஷனனை தங்களோடு ஏற்றுக்கொண்டான் என்று சொல்லப்படுகிறது.

ஆக எல்லோருக்கும் ஒரு குலம் இருக்கிறது. குறைந்த பட்சம் வழிவழியாக வந்த குடும்பமாவது இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது குடும்ப மேன்மைக்காகவாவது இப்படித்தான் நாங்கள் வாழப்போகிறோம் என்று தர்மத்தைக் கடைபிடித்து குல தர்மம் ஒன்றை வழிவகுத்தால் நாமும் நமது சந்ததியினரும் உயர்ந்த வாழ்க்கையை இப்பூமியில் வாழவோம்.

தீய நடத்தைகளை மேற்கோள் காட்டி இது இவனின் ஜாதி புத்தி என்று சொல்லும் காலம்
போய் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நல்ல விஷயங்களை அடையாளப்படுத்தி இது அவன் குல தர்மம் என்று கூறும் காலம் உண்டாகுமாறு வாழ்வோம்.

ஆக குடும்பம் குடும்பமாய் தர்மத்தை கடைபிடித்து வாழ்வோம். உயர்ந்த குல தர்மத்தை உண்டாக்குவோம்.

நம் குலம் உலகினில் உயர்ந்ததென்று அகிலத்திற்க்குக் காட்டுவோம்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.


1 comment:

திவாண்ணா said...

அருமையான கதைக்கு நன்றி!