Saturday, May 9, 2009

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 3


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அற்புதமான கலைஞர். மிகவும் நல்ல மனிதராக அறியப்படுபவர். தன்னை அவமதிக்கும் எதிரிகளுக்கும் நட்புக்கரம் நீட்டுபவர். இப்படி எல்லா உயர்ந்த குணங்கள் கொண்ட இந்த நல்ல மனிதரையும் பிராமண கதாநாயகியை மணக்கும் பாத்திரத்தில் நடிக்கும் ஆசை விட்டு வைக்கவில்லை.

வீரா. இவர் நடித்த திரைப்படம். படத்தின் முக்கிய கதையே ரெண்டு பொண்டாடி. இப்படத்தில் கையாளப்பட்ட முக்கிய அம்சம் நகைச்சுவை. இந்த நகைப்புக்கும் முக்கிய கதாபாத்திரமாக பயன்படுத்தப்பட்டது பிராமண அடையாளம். இது இந்திய மொழிகளில் வேறெந்த மொழி திரைப்படத்துறையிலும் இல்லாத துவேஷம். நகைப்புக்கும், கேலிக்கும், துவேஷத்திற்க்கும் பிராமண அடையாளங்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சூப்பர்ஸ்ட்டாரும் இதில் விதிவிலக்கில்லாமல் விளையாடிவிட்டார். இதற்க்கு முன்னரே உழைப்பாளி என்ற படத்திலும் நகைச்சுவைக்காட்சிக்காக "பகவான் போகச்சொன்னார், போனேன்" என்றொரு பிராமணரைப் பயன்படுத்தி சிரிப்பு மூட்டினார். (நடித்தவரும் அசல் பிராமணரே, அதுபற்றிய விமர்சணங்களும் வரும் பதிப்புகளில் பார்க்கலாம்). இப்படி பிராமண அடையாளங்களை சிரிப்பு பொருளாக பயன்படுத்த யாரும் பாரபட்சமே காட்டவில்லை.

ரஜினிகாந்த் அவர்கள் மனதறிந்து யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் என்பது அறிந்ததே. அவர் நல்லவர் தான். கோழி மிதித்து குஞ்சு சாகாது தான். ஆனால் வலிக்கிறதே. அது கோழிக்கு தெரியுமா?ஆர்.பார்த்திபன். பாக்கியராஜ் அடைகாத்து பொறித்தனுப்பியவர் அல்லவா. "இது நம்ம ஆளு" எடுத்து நமது குரு மிகவும் புகழும் பணமும் சம்பாதித்ததைப் போல தாமும் சம்பாதிக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை இருக்காதா?. இவரும் பிராமண கலாச்சார அழிப்பில் தன் பங்கிற்க்கு குதித்தார். பொண்டாட்டி தேவை. இவரது பொழுது போக்கு மற்றும் சென்டிமென்ட் திரைப்படம். ஒரு ஏழை பிராமணப் பெண்ணை கண்டெக்டரான இவர் காதலிப்பார். அந்தப் பெண் வீட்டில் இவளது சம்பளத்தில் தான் குடும்பமே நடக்கிறது. அதை விடுவதற்கு மனமில்லாமல் அவளது அப்பாவே வரும் வரன்களையெல்லாம் கலைத்து விடுகிறார். இப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கும் இந்தப் பெண்ணை பார்த்திபன் எப்படி காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார் என்பது கதை. கூடவே பிராமணர்களுக்கு புத்தி சொல்வதும் தமிழ்ப்பட சட்டப்படி நடக்கும். போதாக்குறைக்கு பிராமணர்களின் பாஷையை பார்த்திபனும் படத்தில் அவ்வப்பொழுது கிண்டலாக பேசுவார்...
இப்படி பிராமணர்களுக்கு புத்தி சொல்லி பிராமண கலாச்சாரத்தை கேலி செய்யும் அற்புதத்தை நிகழ்த்தி பேர்வாங்கினார் பார்த்திபன். நீங்கள் நினைக்கலாம். பெற்றோர்கள் பணத்திற்க்காக பெண்ணிற்க்கு திருமணம் செய்யாமல் இருந்தால் அது இப்படித்தானே முடியும். இதில் பார்த்திபனின் தவறென்ன? தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டும் தான் ஏழைகளாக இருக்கிறார்களா?. ஏன் பார்த்திபன் என்ன ராஜ குடும்பத்து இளவரசனா?. ஏழை பிராமணப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கும் தன் கற்பனையை நிகழ்த்திக்காட்ட. ஏழைக்குடும்பங்கள் எல்லா ஜாதியிலும் இருக்கும் போது பிராமணர்கள் வாழ்வு மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது தமிழ் சினிமாவில். சமீபத்தில் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தைப் பற்றி அமிதாப்பச்சன் கூறிய விமர்சனம் என்ன? இந்தப்படம் இந்தியாவின் ஏழ்மையை கேலி செய்யும் படம் என்று கூறினார். பலரும் இதை ஆமோதித்தனர். வெள்ளையர்கள் இந்தியாவை அவமானப்படுத்தும் அதிகப்பிரசங்கித்தனம் இந்தப்படம் என்று கண்டனக்குரல்களும் வந்தன. அதே போல் தான் இந்தப்படத்திலும் பிராமணர்களின் ஏழ்மை கேலி செய்யப்பட்டது. வியாபாரம் ஆக்கப்பட்டது. பிராமணர்கள் உட்பட பல ஜாதிக்காரர்களின் குடும்பங்களிலும் இப்படி நிலை இருந்தாலும் பிராமண அடையாளங்களே பிரதான வியாபார‌ப்பொருளாகத் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.

இத்துடன் விட்டாரா பார்த்திபன். அதற்குப் பிறகு இவரது சில திரைப்படங்கள் சரியாகப் போகவில்லை. வியாபாரத்தில் வெற்றி பெற மீண்டும் கையிலெடுத்தார் பிராமண ப்ராஜெக்டை. "சரி கம பத நீ" என்று இவர் எடுத்த படத்தில் மீண்டும் பிராமண குடும்பம் நாற‌டிக்கப்பட்டது. ஒரு திருமண வீட்டில் இவர் பிராமணப் பெண்ணிடம் சிலுமிஷம் செய்ய அதை அரசல் புரசலாக பார்க்கும் யாரோ ஒருவர் பின்னாளில் தெரியாத்தனமாய் அந்த வீட்டிற்கே பெண்பார்க்கப் போக, அந்த வீட்டில் நடக்கும் களேபரம் , அதனால் ஏற்ப்பட்ட அவமானம் போன்றவை அந்த பிராமணக் குடும்பம் கூண்டோடு தற்க்கொலை செய்து கொள்வது கதை. படத்தின் முக்கியத் திருப்பத்திற்க்கு பயன்படும் களமாக இதை உபயோகித்திருப்பார் பார்த்திபன் . படம் இவருக்கு பணத்தைத் தந்தது. பிராமணர்களுக்கு முகச்சுளிப்பைத் தந்தது. அதாவது இவர்களது ஃபார்மலாப்ப‌டி பிராமணர்களை கவுரவமான கதாபாத்திரத்தில் காட்டவேக் கூடாது. இப்படி மிகவும் அபத்தமாக காட்டினால் தான் அப்பாடா என்றிருக்கும். ஏன் என்று தெரியாது. பிராமணர்கள் என்றால் ஒரு அலர்ஜி, ஒரு வகை சாடிசம். அதன் வெளிப்பாடே இவ்வகையில் பிராமணர்களைச் சித்தரிக்க வைக்கிறது.

பகுத்தறிவு மாயை இவர்களுக்கு இந்தவகை சாடிச மனநோயை உண்டாக்கி ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இப்படி ஒரு மனநோயுடன் காணப்படுகிறார்கள். சிலவகைக் காய்கறிகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அது போல தான் இதுவும் . தகுந்த மனோவைத்தியரைப்பார்த்தால், நல்ல முறையில் கவுன்சிலிங் செய்தால் சரி செய்யலாம்.

தமிழகத்தில் யாரும் அவரவர் ஜாதிகளை , அடையாளங்களை விடுவதற்க்குத் தயாராக இல்லை. ஜாதி சுவர் எழுப்பியர்களில் பிராமணர்கள் கிடையாது. இந்த நூற்றாண்டில் கிராமங்களில் கோவில்களில் பிற ஜாதிக்காரர்களை நுழையக்கூடாது என்று பிராமணர்கள் சொல்லவில்லை. ஜாதிக்காக வெட்டிக் கொலை செய்வதில் பிராமணர்கள் இல்லை. கொடியங்குளம் ஜாதி மோதல் பிராமணர்களாலோ அல்லது பிராமணர்களுக்காகவோ நடக்கவில்லை. சமூகத்தில் யாரும் அவ‌ரவர் ஜாதிகளை விட்டுக் கொடுக்க தயாரில்லை. ஆனால் பிராமணர்கள் மட்டும் தங்கள் ஜாதியை விட்டு விட வேண்டும். தங்கள் கலாச்சார அடையாளங்களை விட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களது பிராமண பாஷையும் ஏளனம் செய்யப்படுகிறது.

வித்தியாசமாக பேசப்படும் தமிழாக பிராமண பாஷை இருக்கிறது. ஆனாலும் அது தமிழ் தான் வேறில்லை. எப்படி கோயமுத்தூர் தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் , நெல்லைத் தமிழ் என்று இருக்கிறதோ அது போல இதுவும் ஒரு வட்டாரத் தமிழ். ஒரு இனத்தால் பேசப்படுகிறது. அவ்வளவு தான். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் ஹிந்தி அல்லது உருது அல்லது அரபி இப்படித்தான் பேசுகிறார்கள். மசூதிகளில் வெளிநாட்டு பாஷையில் தான் ஓதுகிறார்கள். எந்த சினிமாக்காரனுக்கு இதை கேலி செய்ய ஆண்மை இருக்கிறது. கோவில்களில் தமிழில் தான் ஓதவேண்டும் என்று சொல்பவர்கள் மசூதிகளுக்கும் அந்தச்சட்டம் பொருந்தும் என்று ஏன் சொல்லவில்லை.

பிறரை அவமதிக்கவேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. ஆனால் எப்படி அவர்களின் ஜாதிகளை, அடையாளங்களை கேலி செய்யத் தயங்குகிறீர்களோ, மனிதத்தன்மை பார்க்கிறீர்களோ (பயம் என்பதே உண்மை) அதுபோல பிராமணர்கள் விஷயத்திலும் பார்க்கலாமே.

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்......தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 4