Friday, May 15, 2009

அக்பர் பீர்பால் கதைகள்


ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது குருடர்களும், உடல் ஊன‌முற்றவர்களும், வயோதிகர்களுமாகப் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அக்பர் மிகவும் வேதனை அடைந்தார். பீர்பாலைப் பார்த்து, "பீர்பாலே, இவர்களைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

இருவரும் ஆலோசனை செய்து அரசாங்க சார்பில் அவர்களுக்கு இலவ‌சமாக உணவு வழங்குவது என்று முடிவு செய்தனர். 

அதன் படி ஊனமுற்றோருக்கும் ஆதரவ‌ற்ற முதியவர்களுக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் கூட்டம் கணக்கில்லாமல் அதிகமாகியது. உழைக்க விரும்பாத சோம்பேறிகள் ஊனமுற்றவர்கள் போல் வேடமிட்டு இலவச உணவை உண்டு காலத்தைப் போக்க ஆரம்பித்து விட்டனர்.  

அரசு உணவிற்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் பெருகி கருவூலமே காலியாகும் நிலை ஏற்பட்டு விட்டது. பயந்து போன அக்பர் அவசரமாக பீர்பாலுடன் ஆலோசனை நடத்தினார். போலிப் பிச்சைக்காரர்களைக் கண்டறிவது எப்படி என்று பீர்பால் சிந்தித்தார். "அரசே, நாளை மதியம் இதற்கு முடிவு கட்டி விடுவோம்" என்றார். 

மறுநாள் இலவச உணவு உண்பதற்காக எண்ணற்றவர்கள் கூடினர். அப்போது உணவு அளிப்பது ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. 

அப்போது ஒரு அதிகாரி கூட்டத்தினரைப் பார்த்து "இன்று முதல் வடக்கேயுள்ள புதிய சத்திரத்தில் உணவளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட போலிப் பிச்சைக்காரர்கள் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு அலறியடித்து புதிய சத்திரத்துக்கு ஓடினர்.  

உண்மையாகவே கண்பார்வையற்றவர்களும், ஊனமுற்றவர்களும் மட்டுமே அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு போலிப் பிச்சைக்காரர்கள் எவருமே அங்கு வருவதில்லை. 

பீர்பாலின் சமயோசித அறிவாற்றலை எண்ணி அக்பர் வியந்தார்.