Tuesday, May 5, 2009

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


சச்சிதானந்தப் பரம்பொருள் என்னும் மரத்தில் எண்ணற்ற இராமர்களும் கிருஷ்ணர்களும் புத்தர்களும் வாழ்கிறார்கள். இவர்களுள் ஓரிருவரே அவ்வப்போது உலகில் வந்து பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறார்கள்.  

பெரிய நீராவிக்கப்பல் பல படகுகளையும் கட்டுமரங்களையும் எளிதாக இழுத்துச் செல்லும்; அதுபோல அவதார புருஷரும் ஆயிரக்கணக்கானவர்களை மாயை என்னும் பெருங்கடலிலிருந்து கரையேற்றித் தம்முடன் அழைத்துச் செல்கிறார்.  

லௌகீக எண்ணங்களும் சிந்தனைகளும் உன்னைக் குலைக்க அனுமதிக்காதே. வேண்டியவற்றைக் குறித்த நேரத்தில் செய், மனத்தை மட்டும் எப்போதும் இறைவனிடமே வைத்திரு.  

ஒருவன் தமக்கு எவ்வளவு பொருட்களைச் சமர்ப்பிக்கிறான் என்பதை இறைவன் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை; மாறாக அன்பையும் பக்தியையும் தருபவனிடமே இறைவன் தமது அருளைப் பொழிகிறார்.  

மரண வேளையில் ஒருவனின் மனத்தில் எழும் எண்ணங்களே அவனது மறுபிறவியை நிர்ணயிக்கின்றன. எனவே ஆன்மீக பயிற்சிகள் மிகவும் தேவை. தொடர்ந்த பயிற்சியின் மூலம் உலக எண்ணங்களை நம் உள்ளத்திலிருந்து மாதிரி இறைநினைவே எப்போதும் இருக்குமாறு செய்தால் மரண வேளையிலும் அது மாறாமல் இருக்கும்.  

இறைவனின் திருநாமங்களும் தெய்வீக வடிவங்களும் எண்ணற்றவை; எதன் மூலமாகவும் அவனை அடையலாம்.  

மரத்தின் அடியில் நின்று கைகளைத் தட்டினால் மரத்தில் வாழும் பறவைகள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. அதுபோல இறைவனின் திருப்பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டிப் பாடினால் தீய எண்ணங்களாகிய பறவைகள் பறந்தோடிவிடுகின்றன.  

இறைவனே எல்லோருக்கும் வழிகாட்டி அவனே உலகனைத்திற்கும் குரு. இறைவனின் திருநாமத்தைக் கேட்ட உடனே யாருக்கு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வழிகிறதோ அவனுக்கு அதுவே கடைசிப் பிறவி.  

இறைவனது திருநாமத்தில் நம்பிக்கை வைத்தல், உண்மையையும் உண்மையற்றவைகளையும் பிரித்தறியும் ஆற்றல் இவையே இறைவனை அடையும் வழிகள்.



சுவாமி விவேகானந்தரின் அறிய புகைப்படம்