Saturday, May 2, 2009

அக்பர் பீர்பால் கதைகள்



பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார். 

வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  

அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.  

மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். இது வரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கல் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பால் கண்டறிய முடியவில்லை. 

ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, "மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  


இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா "பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?" என்று கேட்டார். "அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்" என்றார் பீர்பால்.  


பாரசீக மன்னர் பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.