இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.
"இங்கே என்ன நடக்கிறது நண்பா எனக்கு ஒன்றுமே புரியவில்லை, தலை சுற்றுகிறது" என்றான் ராஜகுமாரன்.
புத்திசரீரன் நிதானமாக "நான் அப்போதே சொன்னேனே நண்பா, நீ என்னைப் பற்றி சொல்லியிருக்கக் கூடாது என்று. ஒரு பெண்ணின் ரகசியங்களை அவளுக்கு உரியவனைத் தவிற வேறொருவன் தெரிந்திருப்பதை எந்தப் பெண் தான் விரும்புவாள்? அதன் விளைவே இது. சரி போகட்டும் விட்டு விடு" என்றான்.
ஆனால் புத்திசரீரன் மனதிற்குள் பத்மாவதியைப் பழிவாங்க திட்டமிட்டான். ஆதே நேரத்தில் நண்பனின் ஆசையும் கெட்டுவிடக்கூடாது, அவன் மனவருத்தம் கொள்ளுமாறு எதுவும் நடக்கக் கூடாது என்றும் தீர்மானித்தான்.
"சரி இப்போது என்ன செய்வது? அவளை நான் எப்படி எந்நாட்டிற்கு கொண்டு செல்வது? என்றான் ராஜகுமாரன்.
அப்போது வெளியே அந்நாட்டு அரசனின் ஆண்குழந்தை இறந்து போயிற்று என்று ஊர் மக்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டது புத்திசரீரன் காதில் விழுந்தது.
இது தான் சமயம் என்று புத்திசரீரன் ஒரு திட்டம் தீட்டினான்.
அவன் ராஜகுமாரனைப் பார்த்துக் கூறினான், "நண்பா, நான் இருக்கும் வரை அவள் உன்னுடன் மனப்பூர்வமாக வரமாட்டாள். அதனால் நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். இன்றிரவு நீ பத்மாவதியின் மாளிகைக்குச் செல். அவளுடன் குதூகலமாய் இருக்கும்போது அவளுக்கு நல்ல போதையூட்டி அவளை மதிமயங்கச் செய்துவிடு. தன் நிலைமை மறந்து பிணம் போலப் படுக்கையில் படுத்துத் தூங்கும் போது அவளுடைய நகைகளை எடுத்துக் கொண்டு, அவள் இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போல் கீறல் அடையாளம் செய்து விட்டு வந்துவிடு. அதற்கு மேல் நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
அந்த விதமாக ராஜகுமாரனும் பத்மாவதியைப் பார்க்கச் சென்றான். அவளுடன் காதல் மொழி பேசிக்கொண்டே அவளுக்கு போதையூட்டி மயக்கமடையச் செய்தான். அவளது நகைகளை எடுத்துக் கொண்டான். அவளது இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போன்ற தடத்தை உண்டாக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
அவர்களது திட்டப்படி மறுநாள் காலையில் மந்திரிகுமாரன் அவ்வூர் மயானத்தில் ஒரு தபசி வேஷம் போட்டுக் கொண்டு அமர ராஜகுமாரனும் அவனது சீடனாக வேஷம் தரித்து அமர்ந்தனர். புத்திசரீரன் பத்மாவதியின் ராஜகுமாரனிடம் கொடுத்து "நண்பா, இந்த நகைகளை எல்லோரும் பார்க்கும் படி கையில் எடுத்துச் செல். இதை கடைத்தெருவுக்குச் சென்று விலை பேசு. ஆனால் யாரும் வாங்க முடியாதபடி அதிக விலை சொல். காவலாளிகள் உன்னைப் பிடித்து விசாரித்தால் என் குருநாதர் தான் இதை விற்கச் சொன்னார் என்று சொல்லிவிடு" என்றான்.
அதன் படியே ராஜகுமாரனும் கடைத் தெருவுக்குச் சென்றான். அன்று காலை தான் பத்மாவதியின் தந்தயான தந்த சிற்பி தனது வீட்டில் நகைகள் காணவில்லை என்று அரசரிடம் புகார் அளித்திருந்தான். அதன் பேரில் திருடனைத் தேடிக்கொண்டிருந்த காவலாளிகளின் கண்களில் ராஜகுமாரன் சரியாகச் சிக்கிக் கொண்டான்.
ராஜகுமாரனும் இந்த நகை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தனது குருநாதர் தான் விற்கச் சொன்னார் என்றும் கூறிவிட்டான். காவலாளிகள் சீடன் வேஷத்தில் இருந்த ராஜகுமாரனைத் திருடன் என்றே நம்பிவிட்டனர். மேலும் அவனது குருவான புத்திசரீரனையும் பிடித்து அரசன் முன் நிறுத்தினர்.
அரசர் புத்திசரீரனிடம் "இந்த நகை உன்னிடம் எப்படி வந்தது" என்று விசாரித்தார்.
புத்திசரீரன் "நான் ஒரு தபசி. எந்த இடத்திலும் நிரந்தரமாக வசிப்பவன் அல்ல. தற்செயலாக நேற்று இவ்விடம் வந்தேன். இரவு நேரம் இம்மயானத்தில் தங்கியிருக்கையில் நடு நிசியில் மோகினிகளின் கூட்டம் ஒன்று இங்கே வந்தது. அவர்களுள் ஒருத்தி அரசரின் மகனான இளவரசனின் உடலைத் தாங்கி வந்தாள். அவள் அந்த உடலை கிழித்து, பைரவனுக்கு நிவேதனமாக வைத்தாள். அவள் மோகன வித்தையில் வல்லவள். நன்றாக மது மயக்கத்தில் இருந்த அவள் என்னிடம் நெருங்கி வந்து என் ஜபமாலையை பிடுங்க முயன்றாள். என் மந்திர சக்தியால் சூலாயுதத்தை பழுக்கக் காய்ச்சி அவள் இடுப்பில் சூடு போட்டுத் துரத்திவிட்டேன். அவள் கழுத்திலிருந்த இந்த முத்து மாலையை பிடுங்கிக் கொண்டேன். தபசிக்கு முத்து மாலை எதற்கு? அதனால் தான் அதை விற்று வரச்சொல்லி சீடனை அனுப்பினேன்" என்றான்.
இதைக் கேட்ட அரசர் இந்த முத்துமாலை தந்த சிற்பி வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது. தந்த சிற்பியின் வழக்கமான முத்திரை இதில் இருக்கிறது. எனவே தந்த சிற்பியின் மகள் பத்மாவதி ஒரு வேளை மோகினியாக இருக்கலாம் என்று சந்தேகித்தான்.
காவலாளிகளிடம் சொல்லி பத்மாவதியை அரன்மனைக்கு அழைத்துவரச் செய்தான். பணிப்பெண்களைக் கொண்டு பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத்தால் காயம் பட்ட தடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான்.
பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத் தடம் இருப்பதை பணிப்பெண்கள் உறுதி செய்தனர். அரசர் கடும் கோபமுற்றான். "என் மகனைக் கொன்ற மோகினிப் பிசாசே உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று தனது வாளை உருவுகையில் புத்திசரீரன் குறுக்கிட்டு தடுத்தான்.
மோகினியைக் கொன்று நீங்கள் பாவம் செய்யவேண்டாம். அது உங்களை மட்டுமல்லாமல் இந்நாட்டு மக்களையெல்லாம் பாதிக்கும் என்றான். அதனால் இவளை இந்த நாட்டை விட்டே துரத்தி விடுங்கள் என்றான். இதைக் கேட்ட அரசன் அதுவும் சரிதான். எனக்கு என்னைவிட நாட்டு மக்கள் தான் முக்கியம் என்று கூறி பத்மாவதியை நாட்டுக்கு வெளியே காட்டில் விட்டு வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான்.
அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அழுதும் அரசர் இதைக் கேட்கவில்லை. காவலாளிகள் பத்மாவதியை காட்டுக்கு இழுத்துச் சென்று ஆடையாபரணங்களை உருவிக்கொண்டு நடுக்காட்டில் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.
புத்தி சரீரன் தான் நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்ச்சியை மவுனமாக அனுபவித்தான்.
பெற்றோர்களையும் நாட்டையும் சுகமான வாழ்க்கையையும் இழந்து விட்ட சோகத்தில் நடுக்காட்டில் அழுது கொண்டிருந்தாள் பத்மாவதி. அவளுக்கு இத்தனையும் செய்தது புத்திசரீரன் தான் என்பதும் விளங்கியது.
அந்த வேளையில் தங்களது வேஷத்தைக் கலைத்து விட்டு குதிரையில் ஏறி ராஜகுமாரனும், புத்தி சரீரனும் அவள் இருக்கும் இடத்தை அடைந்தனர். புத்திசரீரன் தான் ராஜகுமாரனுக்கு உண்மையான நண்பன் என்றும் தங்கள் வாழ்க்கை என்னால் பாதிக்கும் என்று பயப்பட வேண்டாம் என்றும் கூறி பத்மாவதியை சமாதானப் படுத்தினான். தன்னால் பத்மாவதியின் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கூறினான். பிறகு இருவரும் பத்மாவதியை அழைத்துக் கொண்டு தங்கள் நாடு திரும்பினர்.
பத்மாவதியின் பெற்றோரோ மகளை இழந்த சோகத்தில் மனமுடைந்து மிகச் சில நாட்களிலேயே இறந்து போயினர்.
இவ்விதம் கதையைக் கூறி முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனைப் பார்த்து "இந்தக் கதையில் எனக்கு ஒரு சந்தேகம் அதைத் தீர்த்து வைக்க வேண்டும். தந்த சிற்பியும் அவன் மனைவியும் இறந்த தோஷம், ராஜகுமாரன், மந்திரிகுமாரன், பத்மாவதி இம்மூவரில் யாரைச் சாரும்? என்று கூறவேண்டும். பதில் தெரிந்து நீ கூறாமல் தவிர்த்தால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும். அதை நினைவில் வைத்துக் கொள்" என்றது.
விக்கிரமாதித்தன் தனது பதிலைச் சொன்னான் "உண்மையில் மூவர் மீதும் பழியில்லை. மந்திரி குமாரன் தன் எஜமானன் நன்மையை உத்தேசித்தே நடந்து கொண்டான். ராஜகுமாரனும், பத்மாவதியும் காமன் கணையால் தாக்குண்டு தங்கள் வயதின் மயக்கத்தில் அவர்கள் எண்ணம் ஈடேறும் ஒரே நோக்கத்தோடே நடந்து கொண்டனர். ஆனால் அந்நாட்டின் அரசனோ ராஜ தர்மத்தைச் சரியாக உணராமல், வழக்கைத் தீர விசாரித்து உண்மையரியாமல், ஒருவன் சொன்னான் என்பதற்க்காக
தவறாக முடிவு கட்டித் தீர்ப்புக் கூறியதால் இந்தப் பழி மன்னனையேச் சாரும்" என்றான்.
"நீ உண்மையில் சிறந்த புத்திசாலி. சரியாகச் சொன்னாய். ஆனால் விக்கிரமாதித்தனே, நீ என் நிபந்தனையை மீறி வாய் திறந்து பதிலளித்து விட்டாய். அதனால் உன்னை விட்டு நான் பறக்கிறேன். இனி உன்னால் என்னைப் பிடிக்க முடியாது" என்று கூறி வேதாளம் மீண்டும் குகைக்குள் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டது.
விக்கிரமாதித்தன் மறுபடியும் குகை தேடி நடக்கலானான்.
முற்றும்.