'ஜுனூன்' என்று
ஒரு தொலைக்காட்சி டப்பிங் தொடரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழில் 'பிடிவாதம்' என்று மொழி மாற்றி போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த டப்பிங் தொடர் அதன் கதையை விட அதில் பேசப்பட்ட தமிழாலேயே ப்ரபலானது எனலாம். அப்படி ஒரு சிரிப்பை வரவழைக்கும் கேலிக்குரிய தமிழாக்கமாக இருந்தது.
இன்றைக்கும் நண்பர்களை மிரட்டும் தொனியில் பேசிவிளையாடினால், "போடா போ, நாங்கல்லாம் தாத்தா நகர்க்கரையே பாத்தவைங்க, எங்கிட்டயேவா" என அந்தத் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்திப்
பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த தொடரின் பாத்திரங்கள் பழகிப்போய் இருந்தன. ஜுனூன்
தமிழ் என்றே ஒரு தமிழ் ப்ரபலமானது தனி கதை. சரி இப்போது எதற்கு அந்த விவரணங்கள்
என்று கேட்கிறீர்களா?
ஒன்றுமில்லை, பிடிவாதம் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில்
ஏனோ இந்த தொலைக்காட்சித் தொடர் ஞாபகம்
வந்தது.
பிடிவாதம் என்பது மனிதர்களுக்கு இயற்கையாகவே
உடன் பிறந்த ஒரு குணம். அந்த உணர்ச்சியை பயன்படுத்தி காரியம்
சாதிக்காதவர்கள் இருக்க முடியாது. கூடவே அதே குணத்தால் தானே அழிவதும்
அல்லது பிறரது அழிவுக்கு வழிவகுக்கவும் கூட முடியும். பிடிவாதம் என்கிற உணர்வை நாம் எந்த நோக்கில் செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமைகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!
பிடிவாதம் என்றவுடன் நினைவுக்கு வரும்
நபர் திரு.காந்தி! அவரது பிடிவாதம் உலகம் முழுவதும் ப்ரசித்தம்!
அந்தப் பிடிவாதத்தின் விளைவுகளை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக அனுபவித்தார்கள். அவரது பிடிவாதமே அவருக்கு எதிர்தரப்பாளர்களை எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருந்தது. விமர்சிக்கப்படவும் வைத்தது! ஆனால் அவர் பிடிவாதமாக தனது பிடிவாத குணத்தைத் தொடர்ந்தார்.
காரணம் அவரது நோக்கம் சமூகத்தின் நலன்கருதியதாக
இருந்ததே காரணம். சிலர் ஏதாவது ஒரு சித்தாந்தத்தை அல்லது
கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு சித்தாந்தமோ
கொள்கைகளோ நீண்ட நாட்களுக்கு சரியானதாக இருப்பதில்லை. அவை மாறுதலுக்கு உட்பட்டதாகவே
இருந்திருக்கிறது. காந்தியாரும் தனது வாழ்க்கையில் அஹிம்சை என்கிற
கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு அவரது
கடைசி காலங்களில் யாருக்கும் பிரயோஜனப்படாமல் அவர் கண் முன்னாலேயே ரத்த ஆறுகளும்
வன்முறைகளுமே பிரச்சனைக்குத் தீர்வாகக் காணப்பட்டது. இதை அஹிம்சையின்
தோல்வியாக கொள்ள முடியாவிட்டாலும் நீண்ட நாளைக்கு எந்த ஒரு கொள்கையும்
ஒரே மாதிரியாக தட்டையான சிந்தனையில் எடுபடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அஹிம்சாவாதியின் மரணம் ரத்தத் துளிகளால் முடித்துவைக்கப்பட்டது வினோதம்!
காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போடும்.
எந்த ஒரு மனிதனின் சிந்தனையின் படி உலகம் செல்வதில்லை! அது தன்னைத் தானே செதுக்கிக்
கொள்கிறது. இந்திய தேசியத்தை தட்டியெழுப்பி மிகப்பெரிய நிலத்து மக்களையெல்லாம்
ஒரே குடையின் கீழ் ஒன்றாக நிறுத்தி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆட்டம் காணவைத்த ஒரு
மாபெரும் ஆத்ம சக்தி அதன் கடைசி காலங்களில் இயலாமையின் பிடியில் சிக்கி
தான் வளர்த்த சக்திகள் தம்மையே பதம் பார்க்க, சோகத்தில் மடிய நேர்ந்தது காலத்தின் கோலம்
தான்!
இது காந்தியின் ஜுனூன்!
காந்தியடிகள் இந்தியாவில் சுதந்திரப்போராட்டத்தை
முழுவீச்சில் துவங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம்
வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அங்கேயே வெள்ளையர்களுக்கு எதிரான தனது போராட்டத்தை துவங்கியுமிருந்தார்.
ஒரு முறை ஜொஹனஸ்பர்க் செல்லும் வழியில்
தனக்கு நேர்ந்த அவமதிப்பையும் அவர் அதை எவ்வாறு எதிர் கொண்டார்
என்பதையும் அவரே தன் சுயசரிதையில் விளக்குகிறார்.
"அப்போதெல்லாம் சார்லஸ் டவுனிலிருந்து
ஜொஹனர்ஸ்பர்க் செல்ல குதிரைகள் பூட்டிய கோச் வண்டி தான்
இருந்தது. அதில் என்னைப் போன்றவர்களை ஒரு கூலியாகக் கருதினார்கள். பிரயாணிகளை வண்டிக்குள்ளே உட்காரவைக்க வேண்டும். ஆனால் புதியவனாக தென்பட்ட
என்னை வெள்ளைக்காரப் பிரயாணிகளுடன்
உட்கார வைக்காமல்கோச் வண்டிக்கு வெளியே வண்டியோட்டிக்கு இரு பக்கங்களிலும் இருக்கும்
ஆசனங்களில் ஒன்றில் என்னை உட்காரவைத்தார். சாதாரணமாக அது வண்டித்
தலைவர் உட்காரும் இடம்.
ஆனால் என்னை வெளியே உட்கார வைக்க வேண்டுமென்பதற்காக
அவர் உள்ளே அமர்ந்து கொண்டு அந்த இடத்தில் என்னை உட்காரச் செய்தார்.
அது எனக்கிழைத்த பெரிய அநியாயமும் அவமதிப்பும் என்பதை உணர்ந்தேன், என்றாலும் அதையும் சகித்துக்கொள்ள முடிவு
செய்தேன். ஒருவேளை கட்டாயப்படுத்தி நான் உள்ளே போய்
உட்கார்ந்து கொள்ள முயன்றால் என்னை ஏற்றிக் கொள்ளாமலேயே
வண்டி போயிருக்கும்.
இந்த சூழலில் வண்டி போய்க்கொண்டிருந்தது.
ஓரிடத்தை அடைந்ததும் வண்டியின் தலைவர் நான் உடகார்ந்திருந்த
இடத்தில் தாம் உட்கார்ந்துகொள்ள விரும்பினார். அதனால் அவர் வண்டியோடியிடமிருந்து ஒருகோணித்துண்டை
எடுத்து, வண்டியில் ஏறும்
கால்படிமீது அதை விரித்து என்னைப் பார்த்து "இதன் மீது
நீ உட்காரும், வண்டியோட்டியின்
பக்கத்தில் நான் உட்கார வேண்டும்" என அதிகாரம் செய்தார்! இந்த
அவமதிப்பு இன்னும் அதிகம். அதனை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
நான் அந்த அவமதிப்பை ஏற்க பிடிவாதமாக
மறுத்தேன். அவரிடம் கூறினேன் "என்னை உள்ளே உட்கார வைக்கவேண்டி
இருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்காரவைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்போது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புதற்காக என்னை உமது
காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்காரமாட்டேன்.
வேண்டுமானால், வண்டியின் உள்ளே
உட்காரத் தயார்" என்றேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாரிச் சொல்லிக்
கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார்.
என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை
நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள்
முறிந்தாலும் பிடியை விடமாட்டேன் என்று உறுதியாயிருந்தேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும், நான் நான் பிடிவாதமாகவும் அதே நேரத்தில் சும்மா இருப்பதுமாகிய அக்காட்சியை சகப்பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ
பலசாலி, நானோ பலவீனமானவன். பயணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
"அவரை விட்டுவிடு. அடிக்காதே! அவர் மீது குற்றம் இல்லை. அவர் செய்தது. சரியே! அவர் அங்கே இருக்க முடியாதென்றால் இங்கே வந்து எங்களுடன் உட்கார்ந்து கொள்ளட்டும்" என்றனர்.
"அது முடியாது" என்று வீம்புக்கு
மறுத்தார் வண்டியின் தலைவர். அவருடைய இனவெறி அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. ஆனாலும் பயணிகள் தடுத்ததால் என்னை தொடர்ந்து தாக்க முடியவில்லை. என்னை அடிப்பதை
நிறுத்திக் கொண்டார். கொஞ்சம் அவமானம் அடைந்து விட்டவர் போலவே காணப்பட்டார்.
என் கையை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் திட்டிக் கொண்டிருந்தார்.
பிறகு வண்டிப் பெட்டியின் அந்தப் பக்கத்தில் இருந்த மற்றொரு பணியாளை அங்கிருந்து எழுப்பி விட்டு தான் அங்கே உட்கார்ந்து கொண்டார். இப்படியாக ஊர்போய்ச் சேர்ந்தேன்."
ஆக, பிடிவாதமாக நினைத்ததை சாதிக்கும் தனது உள்ள உறுதியினால் அவர்
தன்மானத்தை இழக்காமல் அன்று இனவெறியை வென்றார்.
அதே போன்று இன்னொரு சூழலில் தன்னை
கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியே தீருவது என்று கங்கனம் கட்டி வந்தவர்களிடம்
தனது பிடிவாதத்தால் மதம் மாறாது காத்துக் கொள்ள வேண்டி வந்தது.
அது பற்றி அடுத்த பதிவில் பிடிவாதமாகப்
படிப்போம்!
ஜுனூன் ஜுனூன்... ஜுனூன் ஜுனூன்!