'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.
குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை" இது நடிகர் கமல்ஹாஸனின் சமீபத்திய மேடைப் பேச்சு.
ஆதீத பகுத்தறிவாளராக பேசுவதில் கமலுக்கு நிகர் அவர் மட்டுமே. தமிழ் திரைப்படங்களில் இது குழந்தைகள் படம் இது எல்லோரும் பார்க்கும் படம், இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்று தரம் பிரித்து காமக்களியாட்ட திரைப்படங்களையும் வெளியிடலாம் என்பது இவரது நீண்டகால கருத்து.
நமக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாம், இப்பொழுது சமூகத்தில் காமத்திற்க்கு அப்படி என்ன பஞ்சம் வந்து விட்டது? சரி அப்படியே அதற்க்கென்று தனி சான்றிதழ்களோடு படம் வெளியிட்டால் உடல் ரீதியான எந்த பயனும் இல்லாமல் வெறும் கண்களால் பார்த்து மனத்தில் காமப்பித்தேறி வீட்டுக்குச் செல்லும் ஒரு இளைஞன் திருமணமாகாதவனாக இருந்தால் அவனது காமத்தீயைத் தனிக்க என்ன செய்வான். சொந்த வீட்டில் வடிகால் இல்லாதவன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தால் பரவாயில்லையா? கமல் இதையும் நாகரீகம் என்று சொல்வாரா?
ஒரு மனிதன் காதல் முதல் முதலாய், காம உனர்ச்சிகளை புரிந்து கொண்டு அல்லது அனுபவிக்க நினைக்கும் வயது 15 வயதிலிருந்து 19 வயது வரை. இந்த வயதிற்குள் பாலினச்சேர்க்கை இயற்க்கையாகவே தேவைப்படும். இதைப் புரிந்து தான் நமது முன்னோர்கள் இந்த பதின் வயதில் திருமணம் செய்வதை தேவையான வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இதை குழந்தை திருமணம் என்றும் சட்ட விரோதம் என்றும் கூறி தள்ளி விட்டார்கள். பணத்தேவை திருமண வயதை 30 வரை கொண்டு சென்று விட்டது. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பாலுணர்ச்சியின் சமநிலையற்ற வெளிப்பாடு, கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான குற்றங்கள் என்று பட்டியல் நீள்கிறது.
ஏற்கனவே தொலைக்காட்சியைத் திறந்தால் தொப்புள் நடனங்களும், மார்புக்குலுக்கல்களும் நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சமூகச் சீரழிவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றன. இன்டர்நெட்டில் இளைஞர்களுக்கு கிடைக்காத பாலியல் காட்சிகள் உண்டா? கையளவு செல்பேசியில், கால் இன்ச் சிப்பில் கப்ளிங்ஸ் விளையாடி களைத்துப் போகின்றனர் இன்றைய சிறார்கள். பள்ளிகூடத்திலேயே பத்திக்கொள்ளும் காமம் ஏன் எதற்கு என்று புரிவதற்க்குள் அவை பாலியல் வக்கிரங்களுக்கும், குற்றங்களுக்கும் சென்று முடிந்து விடுகிறது. பள்ளிக்கூட படிப்பின் போதே அக்கம்பக்கத்து பெண்களை அரைக்கண்ணால் பார்த்து விட்டு "ஆண்டி" சூப்பர் டா என்று நாகரீக உறவு முறைகள் எல்லாம் "ஆன்டி க்ளைமாக்ஸில்" முடியும் கதை நமக்கு தெரியாததா?
இவை எல்லாம் தெரிந்தும் அடுத்த தலைமுறையை, தர்மங்களைப் புரிந்து கொண்டவர்களாகவும் , கலாச்சாரத்தை புரிந்து கொண்டார்வர்களாகவும் எப்படி உருவாக்குவது என்று பார்ப்பதை விட்டு விட்டு காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல் காமத்திற்கும் கடைவிரியுங்கள் என்று பேசுவது சமூக பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
கஜுராஹோ கோவிலில் பாலியல் சிற்பங்கள் இல்லையா? என்று கேட்கும் அறிவு ஜீவிகள் அந்த காலத்தில் நமது பூமியில் வாழ்ந்த மக்கள் தொகை என்ன? அவர்கள் கடைபிடித்த தர்மங்கள் என்ன? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். காமத்திற்கு ஆசைப்படும் போதே முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்ததால் அனைவருக்கும் வீட்டுக்குள்ளேயே வடிகால்கள் இருந்ததையும் மறுக்க முடியாது. முறையற்ற உறவுக்கு அவசியமே இல்லாத காலம் அது. ஆனால் தற்காலத்தில் அப்படியா? வாழும் முறையில் இருக்கும் வடிகால்களை எல்லாம் அடைத்து விட்டு சினிமாவில் அதை கட்டவிழ்த்து விட்டால் கற்பனை வாழ்க்கையிலேயே இன்றைய இளைய சமூகம் திருப்தி அடைந்து விடுமா? என்பதையும் கமல் தனது அறிவு ஜீவித்தனம் மூலமாக சிந்திக்க வேண்டும்.
கமலஹாசன் அவர்கள் காப்பி, டீ போன்ற வஸ்த்துக்களை குடிப்பதில்லை. அதற்கு அவர் சொல்லும் காரணம் எந்த ஒரு மிருகமும் இன்னொரு மிருகத்தின் பாலை குடிப்பதில்லை, நாம் ஏன் குடிக்க வேண்டும் என்பதாகும். இதையே அவருக்கு திருப்பி கேட்கலாம். எந்த ஒரு மிருகமும் சக மிருகங்கள் செய்யும் உடலுறவை கூட்டமாக உட்கார்ந்து பார்ப்பதில்லை. எந்த மிருகமும் தங்கள் பாலியல் உறவை வியாபாரமாக்குவதில்லை. இதை மட்டும் மனிதன் செய்தால் நாகரீகம் என்று இவரது பகுத்தறிவுக்கு எப்படி தோன்றியது என்பது விளங்கவில்லை.
பெண்ணாசையால் சாகதே என்று கூறும் இராமாயணத்தையும், மன்னாசையால் சாகாதே என்று கூறும் மஹாபாரதத்தையும் மூடநம்பிக்கை என்று முடக்கியாகி விட்டது. எனவே நாழிதழ்களை திறந்தால் தினம் இரண்டு கற்பழிப்பு பாலியல் குற்றங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாமல் உள்ளன. இவற்றில் பாலியல் திரைப்படங்களை தாரை தப்பட்டையுடன் வரவேற்க்க வேண்டுமாம்.
கொக்கு கொண்டு வந்து போடாமலே இத்தனை ஜனத்தொகை என்றால் இனி தமிழ் சினிமாவில் தமிழ் கலைஞர்களே எடுத்து நடித்து வெளிவரும் பாலியல் படங்களால் கொக்கு வாழ கூட இந்தியாவில் இடம் இல்லாமல் போகுமோ? ஈஸ்வரோ ரக்ஷது:!