Sunday, August 29, 2010

ஜாதிகளை இணைத்தால் பிரச்சனை!



ஜாதிகளை எல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் தான் சண்டை ஜாஸ்தியாகிறது. வாதத்தால் ஒற்றுமை ஏற்படுத்த முற்படாமல், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்று கூட இல்லாமல், பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லோரும் சேர்ந்து செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் உண்டாகி விடும்.

தானம் தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனசின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் நீர் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபஹ்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

"பாடும் பணி" யினால் ஜனங்களின் நெஞ்சம் உருகி பரமேஸ்வரனிடம் சேருமாறு செய்தது, அப்பர் ஸ்வாமிகளின் கைவண்ணம். அதோடு, தேக உழைப்பாக ஓர் உழவர் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் ப்ராகரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கினார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி, அம்மையப்பரிடம் பக்தி வைத்து எல்லோரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்ற அன்பில் ஒன்றுபட்டு சேவை செய்யும் போது களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமை ஏற்படும்.

'தனக்கு மிஞ்சி தானம்' என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் "தனக்கு" என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தருமத்திற்குச் செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தானம்". நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் அத்தனையையும் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரிதான் ஆசை. எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். 'நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்" என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


கீதோபதேசம் - புத்தியில் சமநிலை கொள்!


உணர்வுகளுக்கு ஆட்படாமல் கர்மங்களை எப்படிச் செய்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் சந்தேகத்திற்கு கண்ணன் இவ்வாறு பதில் கூறுகிறார்.

அர்ஜுனா! நீ யோகத்தில் நிலைபெற்று, பற்று இல்லாது, வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதி காரியம் செய். அத்தகைய சமத்துவ புத்தியே யோகம் எனப்படுகிறது.

சமநிலையான புத்தியை விட காரியங்கள் மீதுள்ள பற்றுதல் மிகவும் தாழ்ந்தது. சம நிலையான புத்தியில் மனதைச் செலுத்திடு, பயன் விரும்பி காரியம் செய்பவர்கள் கீழோர் ஆவர்.

சம நிலையான புத்தி உடையவன் நல்வினை, தீவினை ஆகிய இரண்டிலும் கட்டுப்பட மாட்டான். எனவே அத்தகைய உயர்ந்த ஞானத்தில் நீ கலந்து விடு. கர்மாவைச் செய்தலில் வல்லமை பொருந்தி இருத்தலே யோகம் எனப்படும்.

அர்ஜுனா! சம நிலையான புத்தியுடன் கூடிய விவேகிகள் கர்மங்களைச் செய்து வந்தாலும் அதன் பலனைத் துறந்து பிறவித் துயர் நீங்கி ஆனந்த நிலையை அடைகின்றனர்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

பொருத்தமாக ஒரு ஜென் கதை!

ஒரு கிராமத்தில் ஜென் துறவி வசித்துவந்தார். அந்தக் கிராமத்தில் மிகவும் அழகான ஒரு பெண் இருந்தாள். திருமணம் ஆகாத அவள் ஒருநாள் கர்ப்பம் தரித்தாள். பெற்றோரும் உற்றோரும் அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்று அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்திக் கேட்டனர். கிராமத்தில் யார் வம்புக்கும் போகாது பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் கழித்து வரும் ஜென் துறவி ஒருவரைக் கை காண்பித்தாள் அந்தப் பெண்.

மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த ஜென் துறவியிடம் சென்று உன்னால் தான் இவள் கர்பம் ஆகிவிட்டாள் என்றார்கள். அவர் சிரித்துக் கொண்டே "அப்படியா?'' என்று கேட்டார். "என்ன திமிர் பாருங்கள் இவனுக்கு?'' என்று கோபம் கொண்டு குழந்தை பிறந்ததும் அந்தத் துறவியின் கைகளில் ஒப்படைத்து "இந்தக் குழந்தைக்கு நீ தான் தகப்பன். இதனை வளர்ப்பது உன் பொறுப்பு'' என்று குழந்தையை அவரிடம் கொடுத்தனர். "அப்படியா?" என்று வாங்கிக்கொண்டார்.

அந்தக் குழந்தையைத் தன் குடிசையில் அன்புடன் வளர்க்கலானர் துறவி.

சில நாட்களுக்குப் பிறகு, குற்ற உணர்வு தாளாத அந்தப் பெண் அழுது கொண்டே, அந்தத் துறவி அப்பாவி என்றும் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் தான் அக்குழந்தைக்குத் தகப்பன் என்றும் அந்தப் பையனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான் ஊருக்குள் பொய் சொன்னதாகவும் தெரிவித்தாள்.

ஊரே மீண்டும் திரண்டு போய் அத்துறவியின் குடிசை முன்பு நின்றது. எல்லோரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். ஐயா வயதின் வேகத்தில் இந்தப் பெண் தவறிழைத்து விட்டாள். உண்மையில் குழந்தயின் தகப்பன் இந்த இளைஞன் தான் என்று கூறி அவனை கைகாட்டினார்கள் கிராமத்தினர்.

"அப்படியா?' என்றார் துறவி.

தத்துவம்:- புத்தியில் சமநிலை


Saturday, August 28, 2010

இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கியதா? - 1





வாழும் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதில்லை. பிறப்பும் இறப்பும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றாகவே விதிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையால் உண்டான படைப்பில் எதுவும் உயர்ந்ததும் இல்லை எதுவும் தாழ்ந்ததும் இல்லை. இவற்றில் உயர்வு தாழ்வு, விருப்பம், வெறுப்பு என்று தோன்றுவது அவரவர் மனக்கண் மாயையே அன்றி வேறில்லை.

ஆனால் பொதுவாக இந்து மத எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நாத்திகர்களும் மத மாற்றுப் பேர்வழிகளும் ஒரு விஷயத்தில் ஒன்றாக ஒத்து ஊதுவார்கள். அதாவது இந்து மதத்தில் தான் ஜாதிகள் உள்ளது என்றும் இந்து மதம் தான் ஜாதிகளை உண்டாக்கி கீழ் ஜாதி மேல் ஜாதி என்ற ஏற்றத்தாழ்வை உருவாக்கியது என்றும் கூறுவர். இதற்கு இவர்கள் உதாரணமாக கூறும் விஷயம் இந்து தர்மத்தில் கூறப்பட்டிருக்கும் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணங்களின் வகைகளைப் பற்றி. இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் வர்ணங்கள், ஜாதிகள் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் என்ன என்பது பற்றி இவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இந்துக்களை பிரித்தாள்வதற்கும் பிரிவினையை தூண்டி இந்தக்களிடம் உள்ள ஒற்றுமையை நிரந்தரமாக குலைப்பதற்கும் அரைகுறையாக எவற்றையெல்லாம் கூறி குழப்ப முடியுமோ அவற்றைக் கூறி இந்துக்களுக்குள்ளே பகைமையை மட்டுமே வளப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை நாம் புரிந்து கொள்ள, வர்ணங்கள் என்றால் என்ன? ஜாதிகள் உண்டானது எப்படி என்பதை பற்றிய ஒரு அலசலைப் பார்ப்போம்.

வர்ணங்களும் ஜாதிகளும் ஒன்றா?

வர்ணங்கள் என்றால் பிரிவுகள் என்று பொருளுண்டு. வகைகள் என்றும் பொருள் கொள்ளலாம். கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.

சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:|

"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"

தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்||

"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."

என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர். இந்து தர்மத்தில் கடவுளே தான் ஜாதிகளைப் படைத்தான் என்று மக்களை ஏமாற்றி மூளைச் சலவை செய்து வருபவர்கள் பிடித்துக்கொள்ளும் கீதையின் வரிகளும் இவைகளே! அவ்வாறு அவதூறு கூறுபவர்கள் இந்தச் ஸ்லோகத்தின் முதல் வரியின் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைச் சொல்லாமல் விட்டு விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நான்கு வகைகளை நான் தான் உண்டாக்கினேன் என்று கூறும் பகவான், அதைத் தொடர்ந்து "குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில்" என்று கூறுகிறாரே ஒழிய 'பிறப்பின் அடிப்படையில் இந்த வகைகளை உண்டாக்கினேன்' என்று கூறவில்லை. மேலும் இவற்றில் உயர்ந்த வர்ணம் எது தாழ்ந்த வர்ணம் எது என்றும் கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இங்கே வர்ணங்கள் என்று அழைக்கப்படுவதை க்ளாஸிஃபிகேஷன் (Classification) என்று கருத்தில் கொள்க. அதாவது various types of human society என்றே அர்தம் கொள்ள வேண்டும். இவ்வாறான வகைகள் குணங்களால் அறியப்பட்டு அது இந்த வகையைச் சேர்ந்தது என்று கருதிக் கொள்ளப்படுமே அன்றி பிறப்பால் பிரிக்கப்படுவதில்லை என்பது தெளிவு.

மனிதர்கள் தங்கள் குணம் மற்றும் செயல்களின் காரணமாக வகைப்படுத்தப் படுகிறான். இவ்வாறான வகையை தாமே உண்டாக்கியதாக ஸ்ரீ க்ருஷ்ணர் கூறினாலும் கூட இவை எந்த ஒரு சமூகத்திலும் காலத்தின் போக்கினாலும் சமூக்கக் கூட்டங்களுக்கிடையே ஏற்படும் சார்பு நிலையை சமப்படுத்திக் கொள்ளவும் தாமாகவே உண்டாக்கப்படுபவையே.

உதாரணமாக ஒரு தொழில் நிறுவனத்தில் சீராக தொழில் இயங்க வேண்டுமென்றால் அதில் பல அடுக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொது மேலாளர், மேற்பார்வையாளர், தொழிலாளர், கணக்கர் என்று பல்வேறு பிரிவுகள் உண்டாக்கப் படுகிறது. எல்லோருமே தொழிலாளியாக இருந்தால் கணக்கெழுதுவது யார்? எல்லோருமே கணக்கராக விரும்பினால் தொழிலுக்குப் பணம் போடுவது யார்? எல்லோருமே பணம் போட்டு உட்டார்ந்து விட்டால் மற்ற பணிகளை செய்வது யார்? ஆனால் இவை அனைத்துமே ஒரு அடுக்கு முறை உருவாக்கத்தினால் சீராக நடைபெறுகிறது. இது தவிர்க்க முடியாதது.

இந்த அடுக்கு முறைகளை வர்ணங்கள் என்று ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஒரு தொழிளாலி சார்டர்ட் அக்கவுண்டட் படிப்பை படித்துத் தேரிவிட்டார் என்று கொள்வோம். அதே கம்பெனியில் அவருடைய திறமையின் அடிப்படையில் கணக்கர் பணி தரப்படலாம். ஒரு கணக்கர் மேலாளராகவும் திறமையை வெளிப்படுத்தினால் அவரே தனது திறமையால் பொது மேலாளராக உயரவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பொது மேலாளர் செல்வந்தராக இருந்து நிறுவனத்திற்கு பணம் கொடுத்தால் அவர் பங்குதாரராக அதாவது முதலாளியாகவும் முடியும். ஒரு தொழிலாளி படித்தாலும் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் எந்த நிறுவனத்திலும் இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் அந்த நிறுவனத்திலிருக்கும் மனிதர்களின் கோளாறே அன்றி அது நிறுவனத்தின் கோளாறாக அறிய முடியாது. நிறுவனத்தின் கொள்கையிலும் தொழிலாளி கணக்கராகக் கூடாது என்று எழுதப்பட்டிருக்காது. ஆக எப்படி ஒரு தொழிலாளி தனது திறமையால் கணக்கராக அங்கீகரிக்கப்படுவாரோ அதுபோலவே ஒருவர் தாம் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையால் அந்தந்த வர்ணங்களாக வாழும் வகையினராக அறியப்படுகிறார் அன்றி பிறப்பால் இல்லை.

ஆக இந்து தர்மத்தின் ஜாதி ஏற்றத்தாழ்வு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே என்று நிரூபிக்க நினைப்பவர்கள் பகவத் கீதையையே ஆதாரமாகக் கொண்டாலும் பிறப்பால் இவன் இன்ன வகையைச் சேர்ந்தவன் என்று எங்குமே கூறப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் மனிதன் பிரிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

சரி அப்படியெனில் ப்ராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன், என்ற பிரிவுகள் எதைக் குறிக்கின்றன?

ப்ரம்மத்தை அறிந்தவன் அல்லது அறியும் முயற்சியில் அதற்கான சாதகங்களைச் செய்து வாழ்க்கை நடத்துபவன் ப்ராமணன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். தர்மங்களை அனுசரித்து மக்களை காக்கும் பொறுப்பை ஏற்று சமூகத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்பவர்கள் க்ஷத்ரியன் என்ற பிரிவாக அழைக்கப்பட்டனர். சமூகத்திற்கு பயன்படும் விதமாக ஏதாவது தொழிலைச் செய்து அதன் மூலம் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் நன்மை அளிக்கும் விதமாக வாழ்க்கை நடத்துபவர்கள் வைசியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பிரிவினருக்கும் உதவும் வகையிலான பணிகளை செய்து அதனால் தானும் பலன் பெற்று சமூகத்திற்கும் பயனாக வாழும் வகையினர் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு மனிதர்கள் தங்கள் குணத்தின் அடிப்படையில் எந்த மாதிரியான வாழ்வின் மீது உணர்வுப்பூர்வமாக லயிக்கிறார்களோ அத்தகைய வாழ்வை மேற்கொள்ளவார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் வாழ்வின் அடிப்படையிலேயே அவர்கள் எத்தகைய வகையின் மனிதர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். பிறப்பால் அல்ல.




உதாரணமாக இறைசிந்தனையிலும் ப்ரம்மத்தை அறிவதற்கான வாழ்வை மேற்கொள்ளும் ப்ராமண வகையைச் சேர்ந்த தம்பதியருக்குப் பிறந்த ஒரு ஆண் மிகுந்த போர்குணம் கொண்டவனாகவும் மக்களை வழிநடத்தும் தலைமை குணம் கொண்டவனாகவும் தர்மத்தை காக்கும் பொருட்டு போரிடத் துணிந்தவனாகவும் இருப்பானேயானால் அவன் க்ஷத்ரியனாக கருதப்படுவான். அவன் ப்ராமண வகையிலான வாழ்வைத் துறந்து க்ஷத்ரியர்களின் தர்மத்தை கடைபிடித்து அவர்களின் வாழும் வழியைப் பின்பற்றலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை. ப்ராமண தந்தைக்குப் பிறந்ததாலேயே ராவணன் ப்ராமண வாழ்க்கையை மேற்கொள்ள வில்லை. மக்களை தலைமை தாங்கி நடத்திச் செல்லும், நாடாளும், போர்புரியும் க்ஷத்ரியனாக வாழ்ந்தான். பழிவாங்கும் குணத்தாலும் கண்ணை மறைத்த கோபத்தாலும் சீதையை கடத்திச் சென்றதைத் தவிர்த்துப் பார்த்தால் ராவணன் தனது குடிமக்களை துன்புறுத்தாத தர்மங்களை அனுசரித்து ஆட்சி புரிந்த க்ஷத்ரியனாக அறியப்படுகிறான்.

ஒரு ப்ராமணருக்குப் பிறந்த ஆண்மகனுக்கு தங்கத்தை உருக்கி நகை செய்யும் கலையில் அதீத விருப்பம் கொண்டு அவன் நகை வியாபாரி ஆக நினைத்தால் வியாபார குணம் கொண்ட அவன் வைசியன் என்று அழைக்கப்படுவான். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.

ஒரு ப்ராமணருக்கு பிறந்த ஆண்மகனுக்கு வேதங்களைக் கற்கவும் புரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. ஆனால் சமையல் கலையில் ஆர்வம் மிகுந்து அதையே தொழிலாகக் கொண்டால் அவன் சூத்திரன் என்று கருதப்படுவான். சமையலும் தொழில் தானே, அவன் வைசியன் என்றழைக்கப் படலாமே என்று தோன்றலாம். நாம் ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் என்று பிரித்துக் கொள்கிறோம் அல்லவா. ப்ரொடக்ஷன் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் வைசியர்கள் என்றும் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்தவர்கள் சூத்திரர்கள் என்றழைப்பட்டார்கள் என்று கொள்ளலாம். பிறப்பால் அவனது வகை நிர்பந்திக்கப்படுவதில்லை.

இவ்வாறு குணத்தால் வகைப்படுத்தப்பட்டவர்களைப் பற்றிய பல உதாரணங்கள் புராணக் கதைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

விஸ்வாமித்திரர் கேள்விப்பட்டிருப்போம். அவர் பிறப்பால் க்ஷத்ரியன். நாடாண்ட அரசன். வஷிஷ்டரிடம் இருந்த காமதேனு பசுவை தன் நாட்டு மக்களுக்காக யாசகம்கேட்டு அதை அவர் தர மறுத்தார் என்ற காரணத்தால் தானும் அந்தணர்களைப் போல தவம் இருந்து அந்தத் தவ வலிமையால் வஷிஷ்டரை வெல்வேன், காமதேனு பசுவொன்றை பெறுவேன் என்று சபதம் மேற்கொண்டு நாடு துறந்து தவமிருந்து முனிவரானார். ப்ராமணர்களுக்கு உபணயனத்தின் போது ப்ரம்மோபதேசம் என்று போதிக்கப்படும் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு உபதேசித்தார். தவ வலிமையால் இறைவனது அருளைப் பெற்று வஷிஷ்டர் வாயாலேயே ப்ரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார் என்பது நாம் அறிந்ததே. பிறப்பால் க்ஷத்ரியர் ஆனாலும் தான் மேற்கொண்ட தவ வாழ்க்கையால் ப்ராமணராகவே ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஆக பிறப்பால் இவரது வாழ்க்கை இத்தகையதாகத்தான் இருக்கவேண்டும் என்பது நிர்பந்திக்கப் படவில்லை.

மற்றொரு புராணக் கதை, ஒரு பெரிய மகரிஷி இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். ஒரு நாள் ஒரு சிறுவன் அவரிடம் வந்து தன்னையும் மாணவனாக மகரிஷி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். புதிதாக வந்த சிறுவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனுடைய தந்தையின் பெயர் என்னவென்று விசாரித்தார் மகரிஷி. பையனோ 'தெரியாது' என்றான்.

சரி தாயார் பெயர் என்ன என்று வினவினார் மகரிஷி. "ஜாபாலிகை" என்றான். உன் தாயாரிடம் சென்று உன் தந்தையின் பெயரைக் கேட்டு அறிந்து வா என்றார் மகரிஷி.

அச்சிறுவனும் அதே போல தன் தாயாரான ஜாபாலிகையிடம் சென்று தனது 'தந்தை யார்?' என்ன குலம்? என்று விசாரித்தான். ஜாபாலிகை திகைப்படைந்தாள். பிறகு அவள் கூறினாள் 'நான் ஓரிடத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எனக்குப் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் நீ யாருடைய மகனாக இருக்ககூடும் என்பது எனக்குத் தெரியாது' என்றாள். சற்று வினோதமாக தோன்றினாலும் சிறுவன் இதை கேட்டுக்கொண்டான்.

ரிஷியிடம் சென்ற சிறுவன் ஜாபாலிகை கூறியவற்றை அப்படியே தெரிவித்தான். 'பல ஆண்களில் நான் யாருக்குப் பிறந்தவன் என்பது என் தாயாருக்கே தெரியாது' என்று சிறுவன் கூறியதைக் கேட்டு மாணவர்கள் சிரித்தனர். ஆனால் அந்த ரிஷி "எவ்வளவு பயங்கரமான உண்மையை சிறிதும் அச்சமில்லாமல் பேசியிருக்கிறாய்? உண்மையைப் பேசுவது; உண்மையைத் தவிர வேறு எதையுமே பேசாமல் இருப்பது இவை ஒரு ப்ராமணனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள். இவைகள் உன்னிடம் இயல்பாகவே குடி கொண்டிருக்கின்றன. ஆகையால் நீ ஒரு உண்மையான ப்ராமணன். உன்னை என் சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி ஏற்றுக்கொண்டார். ஆக "சத்தியத்தைத் தயங்காமல் பேசிய அந்தச் சிறுவன் சத்தியகாம ஜாபாலி என்ற பெயருடன் பிற்காலத்தில் மிகச்சிறந்த அந்தணனாக அங்கீகரிக்கப்பட்டார்.

இவ்வாறு புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களும் அவர்களது வகையை நிர்ணயிக்கிறது என்பது தெளிவாகிறது.




சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?

தொடர்ச்சி!


Sunday, August 22, 2010

ஓனம் ஆஸம்ஷகள்!


மகாபலி சக்ரவர்த்தியும் வாமண அவதாரமும்


நடனமாடி கொண்டாடும் பெண்கள்


ஓணப்பூக்கோலம்


பாயாஸம்



ஓணத்திருநாள் விருந்து



'தெய்யம்' ஆட்டம்


ஓடப்போட்டி!


அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் திருஓணம் வாழ்த்துக்கள்!

Saturday, August 21, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!




நாம் வாழும் காலத்தில் நன்மை செய்தால் இறந்த பின் சொர்கத்திற்குச் சென்று இன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் தீமைச் செய்தால் நரகத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பெறியோர்களால் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொர்கம் நரகம் என்று இருக்கிறதா என்றால் இல்லை. இவைகள் எல்லாம் அரியாத மக்களுக்கு ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக பெரியவர்கள் சொல்லி வைத்த கற்பனைக் கதைகள்.

மனோதத்துவப்படி, மனிதன் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஒரு ஆதாயத்தை எதிர்பாக்கிறான். மனிதனுடைய இந்தத் தன்மையைப் பயன்படுத்தி ஞானிகள் சில கதைகளைக் கற்பித்தார்கள்.

"நீ நல்லது செய்தால் சொர்கத்திற்குச் செல்வாய் என்றும் தீமையைச் செய்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவாய் என்றும் எமலோகத்தில் துன்பத்தை அனுபவிக்க நேருமென்றும்" சொல்லி வைத்தார்கள். மக்கள் தீமையைச் செய்வதிலிருந்து தவிர்த்து அவர்களை நல்வழிப்படுத்தவே இது போன்ற தோற்ற மாயைகள் உருவாக்கப்பட்டன. இவைகள் யாவும் ஒரு வகை மனோவியல் காரணங்களுக்காகவே உண்டாக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகள் இருப்பதால் தீங்கில்லை மாறாக நன்மைகளே விளைகின்றன.

'மரணம்' என்பது உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டால் அது பற்றிய கேள்விகளும் அச்சங்களும் நீங்க வாய்ப்பிருக்கிறது. மரணம் என்பது உடலியக்க விதியில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். வித்து, ஜீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்குகிறது. அதுவே வாழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையையே மரணம் என்கிறோம்.

அதாவது உடல் தனது இயக்கத்திலிருந்து தளர்வடையும் போது அதனோடு இயங்கிக் கொண்டிருக்கும், அதன் இயக்கத்திற்குத் தேவையான கூட்டனுக்களும் இந்த உடலோடு இனி கூட்டாக இயங்க முடியாது என முடிவு செய்து விலகிச் சென்று தனித்தியங்கத் துவங்குகிறது. உதாரணமாக ஒரு நிறுவணம் நஷ்டத்தால் கலைக்கப்படுகிறது என்று கொள்வோம். அந்நிறுவனம் என்ற அமைப்பு கலைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் இருந்த பதவிகள் இல்லாமல் போகின்றன. ஆனால் அந்தப் பதவிகளில் பணி புரிந்து கொண்டிருந்த மனிதர்கள் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து தனித்தியங்க துவங்குகிறார்கள். அது போலதான் மரணம் என்பதும். உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து தனித்து இயங்க்குகின்றன. அவ்வளவே.


ஆக முற்றிலுமாக மரணம் என்பது நிகழ்வதே இல்லை. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயர்கையின் நியதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி




Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18

ஒரு ஜென் தத்துவக் கதை!


ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.

அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான்.

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன். "அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?" என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி.

தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.

இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.

போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.

மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்.

அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.

இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!

ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று விட்டான்.

தத்துவம் - (ஆளில்லாத கடைக்கு டீயாற்றுவது பிரச்சனைக்கு வழிவகுக்காது! அவ்வ்...) தத்துவங்கள் உங்கள் முடிவிற்கு, முடிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


Friday, August 13, 2010

உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது!




"எனது வீரக் குழந்தைகளே, நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப்பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைபைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம். எழுந்து நின்று வேலை செய்யுங்கள்."

"மிருகபலத்தால் அல்லாமல், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது. அழிவு முறையின் மூலமாக அதன் எழுச்சி உண்டாகப் போவதில்லை. மாறாக, அமைதி, அன்பு, ஆகிய முறைகளின் மூலமாகத்தான் இந்தப் பணி நடைபெறும்."

"புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும் பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியை பட்டப்பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் ப்ரகடனப்படுத்துங்கள்."

"சமய சாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமய சாதனையின் முழு உண்மையாகும். கடவுளே! கடவுளே! என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். ஆனால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆவான்."

"ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ மனதிற்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன் கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்."

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்."




சில சுவாரஸ்யங்கள்.:

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மைசூர் மகாராஜா, “நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை
விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தாராம். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார். சத்தியத்தின் வீரியம் இது தான் போலும்.


இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை, பிரிட்டனின் அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார் சுவாமி விவேகானந்தர். குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார். “கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக முழங்கினாராம். இன்றைக்கும் கிறிஸ்தவ அரசாங்கத்தின் பிடியில் தான் இந்தியா இருக்கிறது என்று
தெரிந்தால் மேலுலகத்திலும் அவர் நிம்மதி இழக்கலாம்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார். அதை வெளிப்படையாக விவாதித்தும் இருக்கிறார்.

அன்றைக்கே கூட கிறிஸ்தவ மத வெறியர்கள் இந்து சாமியார்களை அவமதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்பதற்கு சுவாமி விவேகானந்தரின் வரலாறே சாட்சி எனலாம். சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை. மும்பையில் பிறந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப் பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப் பற்றி அமெரிக்காவிலேயே அவதூறாகப் பேசவைத்தனர். அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லையாம். இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப் பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர். இந்த கொள்ளைக்கூட்டத்தை நம்பி இன்றைய இந்தியாவில் மந்தை மந்தையாக மதம் மாறும் கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

சுவாமி விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எடுத்தால் அதைப் பத்தி பத்தியாகப் படிப்பாராம். நம்மைப் போல் வார்த்தை வார்த்தையாக இல்லை.

சிறப்பு தானே!




"அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுந்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளோ அல்லது வேறு காரனங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்போது சிந்திக்கவேண்டியது ஒன்று தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து அந்தக் கப்பலைப் பழுது பார்க்கப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து இந்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் பணிக்கு தருவோம். அல்லது அந்தப் பணியிலே தோல்வி கண்டால் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி மடிவோம். புறப்படுங்கள். நடைபோடுங்கள், தேசம் காக்க உங்களை அர்ப்பணியுங்கள்"

- சுவாமி விவேகானந்தர்


Thursday, August 12, 2010

பதின் வயது திருமணம் குற்றமில்லை!



இயற்கையின் நியதிப்படி இணைசேரும் பருவம் வந்தால் பாலுறவு கொள்வது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அதை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துவது மட்டும் எவ்வாறு சட்டப்படி குற்றமாகும் என்ற கருத்தை எனது பதின்வயது திருமணம் குற்றமா? என்ற பதிவில் எழுதியிருந்தேன். இப்போது நீதிமன்றம் குற்றமில்லை என்றொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் வழக்கம் போல சட்டக்குழப்பங்களும் வாதங்களும் இது குறித்து தொடர்கின்றன என்பது வேறு விஷயம்.

செய்தி
இங்கே !

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.


அதாவது இணைசேரும் பருவத்தில் திருமணம் புரிந்து கொள்வது தவறில்லை என்கிறது தீர்ப்பு. இயற்கையாக இணை சேரும் பருவத்தில் உறவாட உந்தப்படும் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சடங்கின் மூலம் அதை முறைப்படுத்திக் கொள்வது மட்டும் சட்டப்படி தவறா என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

உணர்ச்சிகள் உண்டாகும் பருவத்தில் திருமணம் செய்துகொள்வதை சட்டத்தால் தடுப்பது இயற்கைக்கு மாறானது என்ற கருத்தை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது என்றே கூறலாம். பதின்வயதில் பாதுகாப்புடன் உடலுறவு கொள்ளலாம் ஆனால் திருமணம் செய்து கொள்வது மட்டும் சட்டப்படி குற்றம் என்கிற முட்டாள் தனத்தை இந்த தீர்ப்பு தகர்த்திருப்பதாகவே தெரிகிறது.

பொதுவாக பதின் வயதை எட்டும் ஒவ்வொரு இளம் தலைமுறையினரின் உணர்ச்சிகள் சமூகத்திற்குள் நுழையும் புதிய வெள்ளம் போன்றதாகும். அவர்களது உணர்ச்சிகள் பாய்ந்து வரும் வெள்ளமென சமூகம் என்ற நிலத்தில் பாய்கிறது. அவ்வாறு வேகமாக பாயும் வெள்ளம் வயற்பரப்பிலும், கொஞ்சம் கட்டாந்தரையிலும், கொஞ்சம் சாக்கடையிலும் என்று கண்ட இடங்களில் பாய்ந்து ஓடக்கூடும்.



ஆனால் அவ்வாறு எல்லா இடங்களிலும் பாய்ந்து அத்தகைய நீர் வீனாவதைத் தடுக்க பொங்கி வரும் வெள்ளம் அனைத்தையும் லாவகமாக வரப்புகளுக்குள் திருப்பி வயற்பரப்பிற்குள் முறையான வழிகளில் பாயச்செய்து வளமான நிலத்தை உண்டாக்குவது போல பதின் வயதினருக்கு பருவத்தின் உணர்ச்சி பொங்கி வரும்போதே அதனை திருமணம் என்ற வரப்பிற்குள் லாவகமாகத் திருப்பி குடும்பம் என்ற நிலத்திற்குள் பாயச் செய்து வளமான ஒரு சமூகத்தை உருவாக்கி வந்தனர் நம் முன்னோர்கள்.

அதனை எல்லாம் குழந்தைத் திருமணம் என்று கூறி உணர்ச்சிகளை முறைப்படுத்தும் கலாச்சாரத்தை ஒழித்து முறை கெட்ட 'காண்டோம்' கலாச்சாரத்தை வளர்க்கவே விரும்பினர் நாகரீகக் கோமாளிகள். நேற்று வெளியான பதின் வயது திருமணம் செல்லும் என்ற தீர்ப்பு இந்த நாகரீகக் கிறுக்குத்தனத்தை கொஞ்சம் உதைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆனால் இந்த தீர்ப்பை ஒட்டி சில சந்தேகங்கள் எழுகிறது.

காதலித்தேன் என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் பதின்வயதினருக்குத்தான் இத்தீர்ப்பு பொருந்துமா? அல்லது இதே போன்ற பதின் வயதினருக்கு அவர்கள் சம்மதத்துடன் பெற்றோர்களே ஒரு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அதற்கும் பொருந்துமா?

அவ்வாறு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பலரை காவல் துறை கைது செய்திருக்கிறது. பல திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது சட்டம்?

குழந்தைத் திருமணம் என்றால் என்ன? இளவர் திருமணம் என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க நீதிமன்றம் முன்வருமா அல்லது சரியான முறையில் மக்களுக்கு விளக்கும் கடமையை அரசுக்கு உணர்த்துமா? உத்தரவிடுமா?

அனுமதிக்கப்படாத குழந்தை திருமணம் மற்றும் அனுமதிக்கப்படக்கூடிய இளவர் திருமணம் ஆகியவற்றின் வயது வரம்பு என்ன என்பதை எப்போது சரியாக குழப்பம் இல்லாமல் அறிவிக்கப்போகிறது அரசாங்கம்?

இவற்றில் எதையும் முறையாகச் செய்யாமல் ஏற்கனவே இருந்த முன்னோர்களின் முறையான வாழ்க்கையையும் சீர்குலைத்து சமூக ஓட்டத்தை இத்தனை வருடங்களாக பாழ்செய்ததற்கு சட்டமோ இத்தாலி அரசாங்கமோ என்ன பதில் கூறப் போகிறது?

ஆக எங்கே சுற்றினாலும் இந்தியர்களின் (பண்டைய) கலாச்சாரமே சிறந்தது என்ற முடிவிற்கு நாகரீக பித்தர்கள் வந்து தான் ஆகவேண்டும் என்பதற்கு இதுவே சான்று!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்


சும்மா! எந்திரன் ஸ்பெஷல்!