Sunday, February 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 9







"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."

"நசிகேதா! எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்கப் படுகிறதோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது "ஓம்".

"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன் இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது." என்றான் எமதர்மன்.

ஆத்மாவை உணரும் சப்தம்....'ஓம்'. 'ஓம்' இது ப்ரபஞ்சத்தின் சப்தம்.

பொதுவாக நம்மில் மூச்சுப் பயிற்சி துவங்குபவர்கள் 'ஓம்' என்ற உச்சரிப்பை சில நிமிடங்கள் சொல்லிப் பயிற்சி எடுப்பார்கள்.


'ஓம்' என்ற ஒலி உடலின் நாடிகளை ஒருங்கே எழுப்பும் சக்தியாகும். அ, உ, ம் இந்த மூன்றும் .சேர்ந்ததே 'ஓம்' என்றார்கள் பெரியோர்கள். 'அ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் அடிவயிற்றிலிருந்து புறப்படுவதாக இருக்கும். அதாவது சப்தத்தின் அதிர்வு உங்கள் வயிற்றை மையமிட்டிருக்கும். 'உ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் மார்பிலிருந்து புறப்படுவதாக இருக்கும். சப்தத்தின் அதிர்வு உங்கள் மார்பை மையமிட்டிருக்கும். 'ம்...' என்று சில வினாடிகள் சொன்னால் அந்த சப்தத்தின் அதிர்வு உங்கள் முகத்தை மையப்படுத்தியிருக்கும். இந்த மூன்று மையங்களையும் ஒரே நேரத்தில் அதிர்வுக்குள்ளாக்கி உடலின் நாடிகளை ஒருசேர உயிர்ப்பிக்கும் மந்திரமே 'ஓம்'.

மேலும் 'ஓம்' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் போது உடல் ரீதியான நன்மைகளும் உண்டாவதுண்டு. வயிற்றிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் அசுத்தக் காற்று 'ஓம்' என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கும் போது வெளியேறி விடுகிறது. இதனால் உடல் காற்று சுத்தமாகி உள் உறுப்புக்கள் முதல் வெளித்தோல் வரை ஒவ்வொரு செல்லுகும் சுத்தமான ஆக்ஸிஜனின் சுழற்சி உண்டாகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

'ஓம்' ப்ரபஞ்சத்தின் ஒலி என்பதனை தத்துவார்த்தமாக புரியவைக்கவே, திருச்செந்தூரில் கடற்கரையில் இருக்கும் சுவற்றில் உள்ள ஒரு துவாரம் வழியாக காதை வைத்து கேட்கச் சொல்வார்கள். கடலின் காற்று துவாரத்தின் வழியாக வெளியேறும் போது 'ஓம்' என்ற நாதம் போலவே சப்தம் உண்டாகும்.

எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.."நசிகேதா! இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்."

இப்போது எமதர்மன் ஆன்மாவின் தன்மை பற்றி நசிகேதனுக்கு விளக்கினான். "நசிகேதா! நீ அறிந்து கொள்ள விரும்பும் இந்த ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டாவதில்லை. இதிலிருந்தும் எதுவும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது. என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது. உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது" என்று ஆன்மாவின் தன்மை குறித்து நசிகேதனுக்கு விளக்கினான்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையிலும் இதையே குறிப்பிடுகிறார். போர்களத்தில் எதிரணியில் தனது குருமார்களும் சகோதரர்களுமே இருக்கிறார்கள். இவர்களைக் கொன்று நான் எதை வெல்லப் போகிறேன் என்று கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு போர்க்களம் என்று வந்து விட்டால் வீரன் நடந்து கொள்ள வேண்டிய முறைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் எடுத்துரைக்கும் போது இவ்வாறு கூறுகிறார்.


"அர்ஜுனா! நானும், நீயும், இந்த அரசர்களும் ஒருபொழுதும் இல்லாமல் இருந்தது இல்லை. இனிமேலும் இந்த உடல்கள் அழிந்தாலும் நாம் எல்லோரும் இல்லாமல் போவதும் இல்லை."

"அர்ஜுனா! ஆன்மா நிலையானது. அழிவில்லாதது. இந்த ஆன்மாவைத் தாங்கும் உடல்கள் தான் அழியும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே ஆத்மாவைப் பற்றியோ, தேகத்தைப் பற்றியோ நீ துக்கப்படுவதை விட்டு விட்டு போர் செய்யக் கடவாய்!" என்கிறார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

"ஆன்மா ஒருபோதும் இறப்பதுமில்லை, பிறப்பதும் இல்லை. இதுவரை இல்லாமல் இருந்து மறுபடி புதிதாகத் தோன்றுவதும் இல்லை. ஆத்மா பிறப்பு, இறப்பு இல்லாதது, தேயாதது, வளராதது, நிரந்தரமானது. உடல் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படுவதில்லை" என்று ஆன்மாவின் நிலைத் தன்மை பற்றி கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார்.

மேலும் ஆன்மா பற்றி க்ருஷ்ணர் இப்படி விளக்குகிறார். "எவ்வாறு ஒரு மனிதன் கிழிந்து போன பழைய ஆடைகளை நீக்கி விட்டு வேறு புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுகிறானோ, அது போல் ஆத்மா பழைய உடலை விட்டு நீங்கி வேறு புதிய உடலை அடைகிறது."

"அர்ஜுனா! ஆத்மாவை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. ஆத்மா நிரந்தரமானது. எங்கும் உள்ளது. நிலையானதாய், அசைவற்றதாய் எப்பொழுதும் உள்ளது." என்று ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆன்மா நிலையானது என்பதைப் பற்றி விளக்குகிறார்.

இதுவே உபநிஷத்திலும் எமதர்மனால் போதிக்கப்படுகிறது. எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.


"நசிகேதா! தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை."

"நசிகேதா! அணுவைவிட அணுவானதும், பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களில் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்."

மேலும் ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளையும் என்னவெல்லாம் செய்யவல்லது என்பதையும் நசிகேதனுக்கு விளக்குகிறான் எமதர்மன்.

(இன்னும் கேட்போம்...)

மரணத்திற்கு அப்பால் - 10

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!


"நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய். புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய்.

உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது. வலிமையைத் தருகிறது. உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வலவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது."

ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் லட்சியம், 'மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது' என்பது தான். மேலும், 'கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?' இதுவே வேதாந்தம் கூறும் அறிவுரையாகும்.


நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆக வேண்டும். நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறாய். ஆனால் அதை நீ அறியாமல் மட்டுமே இருக்கிறாய். இதை நீ உணரவே வேண்டும்.

உன்னிடமுள்ள தெய்விகத் தன்மைதான், 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்' என்பதற்கு உரிய சான்றாகும். நீ கடவுளாக இல்லாவிட்டால் கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த உண்மையை வாழ்வில் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதையே வேதாந்தம் கூறுகிறது.

கடவுள் இல்லாதது என்று எதுவுமே இல்லை. உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் நீ பல கோயில்களையும் ஆலயங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறாய்.

மனித உடலில் உள்ள மனித ஆன்மா ஒன்று தான் வழிபட வேண்டிய ஒரே கடவுள் ஆகும்.

- சுவாமி விவேகானந்தர்.

Sunday, February 21, 2010

மரியாதை ராமன் கதைகள்!


ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா.

யசோதையிடம் நிறையப்
பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள்.

ஆனால்
துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக்
கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஒரி காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார்.

முதலில் யசோதையையும்
இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால்
காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினால். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச்
சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு
வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது.

அடுத்து மரியாதைராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை.

இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான்.

துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச்
சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள்
சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதைராமன்.

யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது
நமது கடமையே ஆகும்.


Thursday, February 18, 2010

மரணத்திற்கு அப்பால் - 8





"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய
முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."




"நசிகேதா! நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்."

சரி, இதயக்குகை என்பது எது...?

உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது.

பெரும்பாலானவர்கள் இந்த மையத்தை உணரும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிப்பது இல்லை. புறப்பொருள்களில் இருந்து விலகி மனத்தை அமைதியாக்கி இதை உணர வேண்டும். புறப்பொருட்களால் சலனமடையாமல், உணர்ச்சி மோதல்களில் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்தால் அக உலகம் ஒன்று இருப்பதை
நாம் உணர்வோம்.

இத்தகைய அமைதிப் பிரதேசத்தை உனரத் தொடங்கிவிட்டால் புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாக குறைந்து விடும். இந்நிலையை அடைந்தவர்களையே இன்ப துன்பங்களைக் கடக்கிறவர்கள் என்று கூறுகின்றனர்.

எமதர்மன் மேலும் தொடர்கிறான்.."இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்தப் பாதை திறந்திருப்பதாக நினைக்கிறேன்."

இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன. அவை நம் புற உடல். நம் கண்களால் பார்க்க முடியும். இரண்டாவது அக உடல் அல்லது மாய உடல். அதை கண்களால் பார்க்க முடியாது. இந்த இரண்டும் நம்முடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் உடல் சக்தியை சத்துள்ள காய்கறிகளும் உணவும் உட்கொள்வதால் பெறலாம். மாய உடலின் சக்தியை அதை உணர்வதால் மட்டுமே பெற முடியும்.



உடலின் இயக்கத்திற்கு மூளை சக்தியாக இருக்கிறது என்பதை புறப்பொருள் இயக்கங்களால் உணர முடியும். மாய உடலின் சக்தியை இயக்குவதும் அதன் மூலமாக இருப்பதும் ஆத்மாவே ஆகும். இத்தகைய புற உடலுக்கும் அக உடலுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருப்பதே எண்ணங்கள் அல்லது மனம். அதனால் தான் மனம் அல்லது எண்ணங்கள் புறத்தே தெரிவதில்லை. ஆனால் அவற்றின் ஆற்றலை புற உடலால் உணர முடிகிறது. அதாவது அவற்றால் உண்டாகும் தாக்கத்தை புற உடல் மூலமாக வெளிப்படுத்த முடிகிறது.

அதனாலேயே அக உடலை அடைவதற்கான ஒரே வழியாக எண்ணங்களை குறிப்பிடுகிறார்கள். மனத்தை அமைதிப்படுத்தினால், எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அது நம்மை அக உடலான மாய உடலுக்கு அழைத்துப் போகும். அவ்வாறு எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனத்தை உள்புறமாக செலுத்தி தியானிப்பவர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் ஆத்ம சுவரூபம் தெரியத்துவங்கும். அக உடல் வேறும், புற உடல் வேறாகவும் புலப்படும்.


இவ்வாறு மாய உடலையும் அதை இயக்கும் சக்தியான ஆத்மாவையும் புற உடலில் இருந்து பிரித்து அறிபவன் ஆனந்தம் அடைகிறான். இந்த இரு உடலையும் ஒரு சேர இயக்கக் கற்றுக் கொண்டவர்களே சித்தர்கள் ஆகிறார்கள்.

இங்கே சித்தர்கள் பற்றி சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.


சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அவை எதுவும் மாயாஜாலமோ அல்லது நடக்க முடியாத கட்டுக் கதையாகவோ இருக்க முடியாது.

சித்தர்கள் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள். மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள்.

ஆனால் ஆத்மாவைப் பற்றி உணரும் விஷயத்தில் இவை ஒரு பகுதியே. இந்த சித்துக்களிலேயே மூழ்கி விடுபவர்கள் ஆத்மாவோடு முழுவதுமாக ஒன்றிப் பரமாத்மாவை அடைவதில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்..

இதையே எமதர்மன் "உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான்." என்றும் நசிகேதனுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறான்.

நசிகேதன் இந்த நிலைகளையெல்லாம் கடந்து ஆன்மீகத்தில் மேலும் பயணிக்க நினைக்கிறான். எமதர்மனிடம் இன்னும் கேட்கிறான் "தர்மம், அதர்மம், காரியம், காரணம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டதாக நீ எதைக் காண்கிறாயோ அதை எனக்குச் சொல்வாயாக" என்கிறான்.

நசிகேதனின் இந்த கேள்விக்கு எமதர்மன் சொல்லும் ஈரெழுத்து பதில், அது..

"ஓம்"


"நசிகேதா! எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்கப் படுகிறதோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது "ஓம்".

ஆத்மாவை உணரும் சப்தம்....'ஓம்'

(தொடர்ந்து கேட்போம்.....)

மரணத்திற்கு அப்பால் - 9

Wednesday, February 17, 2010

சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்!


மேற்கண்ட தலைப்பு பற்றிய எமது கட்டுரை தமிழ் ஹிந்து. காமில் வெளியானது.


அதன் சாரம் இதோ!

பல நேரங்களில் உண்டாகும் அனுபவம் இது; இந்து மதத்திற்கெதிரான சதிகளைச் செய்யும் பிற மதத்தினர் பற்றியும் அரசாங்க நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களின் மோசடிகள் பற்றியும் நம்மவர்களிடம் விவாதிக்க நேர்ந்தால் அங்கே முதலில் அடிக்கப்படுவது சமத்துவ ஜல்லி. வெளிப்படையாக பிற மதத்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பேசுவதையே மதவாதமாகப் பார்க்கும் போக்கு நம் மக்களிடம் இன்னும் தொடர்கிறது. வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். சத்தமாகப் பேசப் பயப்படுகிறார்கள்.......


.....ஆனால் இந்துக்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பை சிதைக்கத்தான் இப்போது பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அப்படி நடந்தால் ஆன்மிக நாட்டத்தை விட சமூகப் போராட்டத்திலேயே மக்கள் கவனம் சிதறும். அப்போது மனிதர்களிடம் அன்பு குறைந்து வன்முறைகளும் போராட்டங்களுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒரு சூழலை சமூகத்தில் உருவாக்கத்தான் இந்துக் கலாசாரத்தைச் சிதைக்க விரும்புபவர்கள் முயற்சிக்கிறார்கள்.....

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கிப் படிக்கலாம்.

http://www.tamilhindu.com/2010/02/hypocritic-secularists-and-the-dangers

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Sunday, February 14, 2010

மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் : சிவராத்திரி ஸ்பெஷல்



சிவபுராணம் :

ஓம் நமச்சிவாய; ஓம் நமச்சிவாய; ஓம் நமச்சிவாய;

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

ஓம் நமச்சிவாய; ஓம் நமச்சிவாய; ஓம் நமச்சிவாய;


Thursday, February 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 7



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி
உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான் எமதர்மன்.

"நசிகேதா! உலகமாயையின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். உலகச் சூழலில் சிக்கித்தவிக்கும் இவர்கள் நடைமுறை வாழ்வில் எது உயர்வானவை என்று மற்றவர்கள் கூறுகிறார்களோ அதையே உயர்வானது என கருதி உலகச்சூழலை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

குறுக்கு வழியில் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த, மனப்பக்குவ மற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. 'இந்த உலகம் தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது' என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்."

அதாவது அல்ப சந்தோஷங்களில் மனதை லயிக்கச் செய்து நிரந்தர அமைதியைத் தேடாதவர்கள் ஒவ்வொரு முறையும் எமனை அடைந்து மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். மரணத்திற்கு அப்பால் மனிதன் மீண்டும் பிறக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எமதர்மன் விவரிக்கிறான்.

எமதர்மன் மேலும் தொடர்கிறான் "நசிகேதா! எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

பூலோக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கித்தவிக்கும் யாருக்கும் ஆத்மாவைப் பற்றிய தேடலுக்கு நேரமிருக்காது. அவ்வாறு தேடுபவர்கள் மிகச்சிலர் இருந்தாலும் அவர்களுக்கு உபதேசிக்க, ஆன்மா பற்றி உணர்ந்தரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள். சரி அப்படியென்றால் ஆன்மாவை எப்படி அறியலாம். இதோ எமதர்மன் தொடர்கிறான்.

"நசிகேதா! உலகியல் மனிதர்களால் கூறப்படும் போது இந்த ஆத்மா பற்றிய விபரங்கள் நன்றாக அறியப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு விதமாக விளக்கிவிடுகின்றனர்.

அனுபூதி பெற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பின்பற்றினால் குழப்பம் இல்லாமல் விளங்கும். உனக்கு நான் விளக்குகிறேன். நசிகேதா கேள்! ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது. அனுபவித்தே அறிந்து கொள்ளக்கூடியது. வெறும் விளக்கங்களால் புரிந்து கொள்ள முடியாதது."



எமதர்மன் தொடர்ந்தான். "அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும் போது அது ஒருவனை மேலான ஞானத்தைற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்."

"வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால் தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்."

பொதுவாக புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எமதர்மனோ புண்ணியம் செய்தல் என்பது நீங்கள் ஆற்றும் வினைப் பயன். அவற்றால் மேலான ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனால் பிறப்பற்ற தன்மையான ப்ரம்மத்தை அடைதல் நடக்காது என்பதையே தெளிவுபடுத்துகிறார். நிரந்தரமான பரப்பிரம்மத்தோடு கலக்கவேண்டுமானால் ஆத்மாவை உணரவேண்டும் என்பது தெளிவாகிறது.

பிறகு ஆன்மாவின் தன்மையையும் அது இருக்கும் இடம் பற்றியும் எமதர்மன் நசிகேதனுக்கு விளக்குகிறான்.

"நசிகேதா! நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்."

சரி, இதயக்குகை என்பது எது...

(பொறுங்கள் கேட்போம்.....)



மரணத்திற்கு அப்பால் - 8

Wednesday, February 10, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 1


பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவம் விளங்கினான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும், மூடர்களாகவும் இருந்தார்கள். நமக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது.

இதற்கு என்ன செய்வது? பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடம் மன்னன் தனது கவலையைச் சொன்னான். வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாச்த்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார்.

அரசே! கவலைப் படாதீர்கள். நான் இவர்களுக்குத் தகுந்தமாதிரி கல்வியைப் புகட்டுகிறேன் என்றான்.

சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார்.

பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள்.

அவை மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம்

என்பனவாகும். அப்படிஎன்றால்? சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர் லாபமானது தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்தப் பொருளை அழித்தல், அசம்பிறேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம்.

இக்கதைகளைக் கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அரச குமாரர்களுக்கு நீதிக்கதைகளை போதிக்கத் துவங்கினார்.

அரசகுமாரர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டு அப்படியே நல்ல போதனைகளைக் கதைவடிவில் கற்கத்துவங்கினார்கள்.

பஞ்சதந்திரக் கதைகள். இப்படித்தான் உருவாயின. அவற்றில் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் பார்ப்போம். சரியா!

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Tuesday, February 9, 2010

கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை?


மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.


கோவிலுக்குச் சென்றால் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. நீராடாமலும் கை கால்களை சுத்தம் செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது

2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்

3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது

4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக்கூடாது

5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை இறைவனுக்கு அர்பணிக்கக் கூடாது

6. இறைவனின் மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது

7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது

8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது (வைத்தீஸ்வரன் கோவில் ஒரு குப்பை மேடாகவே
காட்சி தருகிறது)

9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.

11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.

12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக்கூடாது.

13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது. இறைவன் பிரசாதத்தை பிறர் கால்களில் படுமாறு கீழே பொடுவது நல்லதல்ல.

14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும். சிலர் கோவில்களுக்கு செல்லும் போது தான் நிறைய நகைகளும் பட்டுப் புடவைகளும் அணிந்து தகதகவென்று செல்வார்கள். அதைத் தவிர்க்க வேண்டும்.

15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.

இவ்வாறு பெரியவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

இதில் சில விஷயங்களை சற்று விளக்கமாக பார்க்க வேண்டும்.

கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது. இவை மிகவும் முக்கியக கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

தற்காலத்தில் கோவிலுக்கு வருபவர்களில் பலர் அங்கே கிடைக்கும் நேரத்தை நிறைய வம்பு பேச உபயோகப்படுத்துகிறார்கள். கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் கொஞ்சம் பெரிய கோவிலாகவும் அமைதியாகவும் இருந்தால் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக மாறிவிடுகிறது.

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் எப்பொழுதும் பள்ளிச் சிறார்களும் காதலர்களும் கோவில் பிரகாரங்களில் படுத்துக் கிடப்பதும் விளையாடிக் கொண்டிருப்பதையும் வம்பு பேசிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆயிரம் வருஷம் பழமைவாய்ந்த தஞ்சைப் பெரிய கோவிலின் சிவனை முதல் முறை அருகே நின்று பார்ப்பவர்கள் அரைமணி நேரம் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அவ்வளவு பிரம்மாண்டம், பிரமிப்பு. கோவிலாயிற்றே என பக்தியோடு வருபவர்கள் கோவில் வளாகத்திற்குள் கூட்டம் கூட்டமாக பள்ளிச் சீருடைகளுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இது கோவிலா இல்லைப் பொழுது போக்குப் பூங்காவா என்று தோன்றிவிடுகிறது.

ஓரமாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. சிறு சன்னதிகளின் வாசல்களிலேயே சாமிக்கு முன்பாகவே கூட்டமாக அடைத்துக் கொண்டு பள்ளி மாணவர்கள் அமர்ந்து விடுவார்கள். நாம் சென்று சாமி கும்பிட்டால் என்ன இவன் நம்மைக் கும்பிடுகிறான் என்பது போல பார்த்து பிறகு போனால் போகிறது கும்பிட்டுப்போ என்பதுபோல ஒதுங்குவார்கள்.

இவ்வாறு நடந்து கொள்வதால் கோவில் என்ற மரியாதையும் பக்தி என்ற உணர்வும் குறைந்து போய்விடும். கோவிலுக்கு மரியாதை இல்லாமல் பொழுது போக்கு பூங்காவாக மாற்றி விட்டால் பக்திக்கு எந்த இடம் போவார்கள்? ஒரு இடத்திற்கு செல்லும் போது முதலில் நாம் என்ன உணர்வை பெறுகிறோமோ அதுவே நமது ஆழ்மனதில் பதிந்து விடும். பிறகு மீண்டும் அந்த இடம் செல்லும் போது அதே உணர்வு நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் கோவிலுக்குச் சென்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பின் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றாலும் அமைதி நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் இன்றும் பலருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தால் தான் மனது அமைதியாக இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த அமைதியான உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அனைவருமே கோவிலில் அமைதி காப்பதை தமது கடமையாகவே கொள்ள வேண்டும்.

திருனக்கர அம்பலம், கோட்டயம்.

கேரளாவில் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே மக்கள் சன்னதி வாசலில் பேசுவதில்லை. கோவிலின் மற்ற பிரகாரங்களில் நின்று பேசினாலும் குசுகுசுவென்றே பேசுவார்கள். இந்த நாகரீகமும் கட்டுப்பாடும் தமிழர்களிடம் காணாமல் போன மர்மம் என்னவோ?

சிலர் கோவிலுக்குள் கோபம் கொள்வார்கள். மன அமைதிக்காக வந்த இடத்தில் 'கொஞ்சம் முன்னாடி போங்க சார், அப்படி திரும்பி நில்லுங்க சார், எவ்வளவு நேரம் பாப்பீங்க நகருங்க சார்' என்று பிறருக்குக் கட்டளை போடுவதிலேயே குறியாக இருப்பார்கள். கட்டளைக்குப் படியவில்லை என்றால் உரத்த குரலில் சண்டைபிடிப்பார்கள். இவையெல்லாம் கோவிலுக்குள் செய்யக் கூடாத காரியங்களாகும். இவர்கள் தன்னுடைய அமைதியைக் தொலைத்துக் கொண்டு பிறர் அமைதியையும் கெடுப்பவர்களாவார்கள். சில பூசாரிகளே பக்தர்களிடம் கோபித்துக் கொள்வதும் உண்டு. அது இன்னும் மோசம். இவர்கள் இறைவன் சன்னதியில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.

கோவிலுக்குள் ஜாதி வேறுபாடு பார்த்து ஒதுங்கி நிற்பதும், ஏற்றத்தாழ்வு கொள்வதும் அறவே கூடாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்கிற உனர்வு தீர்க்கமாக இருக்க வேண்டும்.

கோவிலுக்குள் ஒருவர் காலில் மற்றவர் விழுந்து ஆசி பெறக்கூடாது என்றும் சொல்வார்கள். ஏனெனில் கோவிலுக்குள் இறைவனைத் தவிற யாரும் பெரியவர் இல்லை.


மேலும் கோவிலில் அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுவர். அதாவது "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெதுவாக நடப்பாளோ அந்த அளவிற்கு மெதுவாக நடக்க வேண்டுமாம்.

சரி ஏன் இப்படி மெதுவாக சுற்றிவர வேண்டும் என்கிறார்கள். ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைப்பதற்க்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை தானே.

சிலர் அலுவலகம் போகும் போது அல்லது வேலை முடிந்து வீட்டிற்ச் செல்லும்
போதும் கோவிலுக்குச் செல்வதுண்டு. அல்லது சிலர் கோவிலில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று தீர்மானித்தே கோவிலுக்குள் நுழைவதும் உண்டு. இவர்கள் வேகவேகமாக சன்னதியை பிரதக்ஷணம் வருவார்கள். இதனால் மனதில் கோவிலுக்குச் சென்று திரும்பியதற்கான அமைதி இருக்கவே இருக்காது. நாம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும். கால நேரத்தின் பால் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றில் இருந்து வெளிப்பட்டால் தான் மனம் அமைதியை அடைய வழி பிறக்கும் என்பதை உணர வேண்டும். அதற்கான பயிற்சிகள் தான் கோவில் ப்ரார்தனைகளும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழி முறைகளும். இதில் மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடியது அல்லவா.

ஆக மிகவும் மெதுவாக ப்ரதக்ஷணம் வரும் போது இந்த கால நேர கட்டுக்களை உடைக்கிறோம். நிஜ வாழ்வில் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் கரையக் கூடியது. ஆனால் காலம் என்பது நிரந்தரமானது. அது ஆரம்பிப்பதும் இல்லை கரைவதும் இல்லை என்ற ஒரு மன அமைதிக்கு வருகிறோம்.

நடைமுறை வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கும். காலை முதல் இரவு வரை ஓட்டம் இருக்கும். இங்கே தொடங்கி இங்கே முடிக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கும். ஆரம்பமும் முடிவும் இருக்கும். பிறகு அடுத்த நாள் என்று தொடங்கும். நாம் நேரம் ஆகிறதே என்கிற பரபரப்பை அடக்கி மிகவும் மெதுவாக கோவிலைச் சுற்றி வரும்போது ஒரு எல்லைக் கோடு இல்லாத காலத்தை உணரமுடியும். பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது சுற்றி வருகிறது அவ்வளவே. அது எதற்கும் அவசரப்படுவதில்லை. பூமியும் சூரியனும் மற்ற கிரகங்களும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை தத்தமது இயக்கங்களை எண்ணிக்கையில் கொள்வதில்லை.

நாள் கணக்கும் வருடக்கணக்கும் நமக்குத்தான் பூமிக்கு இல்லை. சூரியனுக்கும் இல்லை. சந்திரனுக்கும் இல்லை. அவைகள் சுற்றுக் கணக்கை நேரம் பார்த்துச் செய்யவில்லை. சுற்றுக் கணக்கை எண்ணிப்பார்த்துச் சுற்றுவதில்லை. ஆனால் அவைகள் சுற்றி வருகின்றன. நிரந்தரமாக அங்கேயே இன்னும் சுற்றப்போகின்றன. இத்தனாவது சுற்றுக்குப் பிறகு நிறுத்திவிடுவோம் என்ற திட்டங்கள் அவைகளுக்கு இல்லை. அவைகள் கால நேரங்களில் கட்டுப்படுவதில்லை. எண்ணிக்கைகளில் அடங்குவதில்லை.

ஆக உங்கள் கைக்கடிகாரத்தை நிறுத்திவிட்டு கோவில் பிரகாரத்தைச் சுற்றிப்பாருங்கள். நீங்களும் பிரபஞ்சக் காலத்தோடு கலக்கத் துவங்குவீர்கள். பிறகு உங்கள் கடிகார நேரம் உங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே படும். கால நேர எண்ணிக்கைகள் என்ற கட்டுக்களை விட்டு நிரந்தரமான இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்க்காகவே கோவிலில் மிகவும் மெதுவாகவும் அமைதியாகவும் ப்ரதக்ஷணம் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.

நேரம் பார்க்காமல் அமைதியாக ப்ரதக்ஷணம் வாருங்கள். நீங்களும் பிரபஞ்சத்தின் அமைதியை உணர்வீர்கள். மற்றவர்கள் "சார், கொஞ்சம் வேகமா போங்க" என்றால் அவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

மேலும் சுற்றிய அசதியும் தெரியாமல் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்றுக் கூறுவர். மொத்தத்தில் ஒரு முறை கோவிலுக்குள் நுழைந்து திரும்பினால் ஆழ்மனம் அமைதியும், களைப்பற்ற மகிழ்ச்சியான உணர்வும் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது முழுக்க முழுக்க மனோவைத்தியம் தானே அன்றி வேறில்லை.

மீனாட்சி அம்மன் கோவில், மதுரை.

கோவிலுக்குச் சென்றால் மனதை அமைதியாக வைத்திருக்க இத்தகைய பயிற்சிகளை நமக்கு நம் முன்னோர்கள் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அவமதிக்காமல் முறையாக பயிற்சி எடுத்து மனதை அமைதிப்படுத்தினாலே நாம் முழுமையான மனிதர்களாக வாழ நல்ல வழி கிடைக்கும்.

இவற்றைப் புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளுகிறவர்கள் பின்னாட்களில் மன அமைதிக்கான பயிற்சிக் கூடங்களிலும், மனநல மருத்துவரின் கவுன்ஸிலிங்கிற்கும் பணம் செலவு செய்து மாள்கிறார்கள்.

ஆக அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது சத்தம் இல்லாமலும், கடிகார முள்ளை பார்க்காமலும் மனதை கோவிலிலும், ப்ரகாரச் சுற்றிலும் லயிக்கச் செய்யுங்கள். மனதின் மாற்றத்தை உணருங்கள். உணர்ந்ததைக் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கள்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.